காயல்பட்டினத்தின் சிறந்த பள்ளிக்கு அறிவியல் கண்காட்சி விருது (Science Fair Award) வழங்க காயல் நற்பணி மன்றம், தம்மாம் முடிவு
செய்துள்ளது. இது குறித்து மன்றம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நம் காயல் நகரின் சிறந்த பள்ளியை வெறும் ஊக்குவித்தலுடன் விட்டு விடாமல், அந்த ஊக்குவிப்பையும் ஒரு முதலீடாக ஆக்க வேண்டும் என்ற
எண்ணத்தில் காயல் நற்பணி, தம்மாம் நடப்பாண்டு முதல் - இன்ஷா அல்லாஹ் - நகரின் சிறந்த பள்ளிக்கு அறிவியல் கண்காட்சி விருது (Science
Fair Award) வழங்க திட்டமிட்டுள்ளது. இவ்விருதுக்கு தேர்வாகும் பள்ளிக்கூடத்திற்கு ரூபாய் 25,000 வெகுமதியாக வழங்கப்படும்.
இவ்விருதுக்கு தேர்வாகும் பள்ளியானது வருகின்ற ஜுலை மாதத்தில் பள்ளிகளுக்கு இடையிலான ஒரு அறிவியல் கண்காட்சியை நடத்த வேண்டும்.
கண்காட்சியை தங்கள் பள்ளி வளாகத்திலேயே நடத்தலாம்.
அக்கண்காட்சியில், சிறந்த பள்ளி விருது பெறும் பள்ளியின் 6 - 12 ஆம் வகுப்பு பயிலும் குறைந்தது 10 மாணவ, மாணவிகள் -
தங்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் முகமாக - Scientific Exhibit களை பார்வைக்கு வைக்க வேண்டும். அதனை அவர்களின்
ஆசிரியர்களின் துணைக்கொண்டு அவர்கள் தயாரிக்கலாம்.
Scientific Exhibit கள் - மாணவர்கள், அறிவியல் பாடங்களை படிப்பதோடு நிறுத்திவிடாமல், அதை உபயோகித்து உணரும்
ஆற்றலை உருவாக்க உதவும் வகையில் அமைந்திருக்கவேண்டும்.
மாணவர்கள் தங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்த செலவிடும் தொகையில் சுமார் 50% - விருது தொகையில் இருந்து
கொடுக்கப்பட வேண்டும். மீதி 50% மாணவர்களே செலவிட வேண்டும்.
கண்காட்சி நடத்த செலவிடப்படும் தொகையின் ஒரு பகுதியை பள்ளி இந்த நிதியிலிருந்து பயன்படுத்தலாம்.
நகரின் மற்ற பள்ளிகளும் (சிறந்த பள்ளியை தவிர்த்து) இந்த கண்காட்சியில் பங்கு கொள்ளலாம். ஆனால் அறிவியல் திறனை வெளிப்படுத்த
செலவாகும் முழு (100%) செலவையும் மாணவர்களே ஏற்க வேண்டும்.
வெளியூர், வெளிநாடு வாழ் காயல் மாணவ, மாணவிகளும் கண்காட்சியில் பங்கு கொள்ளலாம். மற்ற பள்ளிகளுக்கு உண்டான விதிமுறைகள்
இவர்களுக்கும் பொருந்தும்.
இறுதியில் சிறந்த அறிவியல் திறனை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு காயல் நற்பணி மன்றம், தம்மாம் பரிசுகளை வழங்கும்.
இவ்விருதினை பெறும் சிறந்தப்பள்ளி - தி காயல் பர்ஸ்ட டிரஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் (பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அடிப்படையிலான)
சிறந்தபள்ளிகள் தரப்பட்டியல் (Overall Category) கொண்டு தேர்வுசெய்யப்படும்.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை - 2011 பரிசளிப்பு விழாவில் இந்த
பரிசையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல் நற்பணி மன்றம், தம்மாம் சார்பாக
J. செய்யத் ஹசன்,
சவுதி அரேபியா.
|