காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 சனிக்கிழமை துவங்கி, 03.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 04.07.2011 திங்கட்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
இரண்டாம் நாளான நேற்று, (05.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, பன்னூலாசிரியர் “முத்துச்சுடர்” என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ வழங்கினார்.
தொழுகையின் சட்டங்கள், கடமையான குளிப்பின் சட்டங்கள், குளிப்பு கடமையானோர் செய்யக் கூடாத காரியங்கள், தொழுகையை முறையாகப் பேணுவதன் அவசியம், அதன் வழிமுறைகள் உள்ளிட்டவை நேற்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆலிம் வழங்குகிறார்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.
தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை நேரலைக் குழு சார்பில்,
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ மூலமாக,
ஹாஃபிழ் S.M.S.மஹ்மூத் ஹஸன், A.M.E., B.C.A.,
கவ்லூன், ஹாங்காங்.
|