இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டு பொதுநிகழ்வுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், குறிப்பிட்ட சில நிகழ்வுகளை ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸிலும், கண்காட்சியை வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியிலும் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இம்மாநாட்டுப் பணிகளை பொறுப்பேற்று செயல்படுத்துவதற்காக பல்வேறு குழுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான “தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்துறை”யின் கலந்தாலோசனைக் கூட்டம் 01.06.2011 அன்று இரவு 08.00 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள மாநாட்டு அலுவலகமான செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில், குழு தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இத்துறையின் உறுப்பினர்களான ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், மாஸ்டர் கம்ப்யூட்டர் அப்துல் மாலிக், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, சன்சைன் புகாரீ, எஸ்.ஆர்.பி.ஜஹாங்கீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், மாநாட்டின் மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் நகர வலைதளங்களில் நேரலை செய்வதென்றும்,
வரும் 10.06.2011 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாநாட்டின் அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டத்தின்போது மாநாட்டிற்கென உருவாக்கப்பட்டு வரும் பிரத்தியேக வலைதளத்தை துவக்கி வைப்பதென்றும்,
மாநாட்டுக்கு முன்பு 10.06.2011 அன்றும், 06.07.2011 அன்றும் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தை நடத்துவதென்றும்,
மாநாட்டு நிகழ்வுகள் குறித்து தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதென்றும்,
நகர் முழுக்க ஆட்டோ பரப்புரை, பிரசுரங்கள் வினியோகம், டிஜிட்டல் பதாகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை தேவைக்கேற்ப அச்சிட்டு அனைத்துப் பகுதிகளிலும் விளம்பரப்படுத்துவதென்றும்,
நகரின் அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் மாநாடு குறித்த வீடியோ மற்றும் எழுத்து விளம்பரங்களை வெளியிடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டு, அவற்றுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். |