இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டு பொதுநிகழ்வுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், குறிப்பிட்ட சில நிகழ்வுகளை ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸிலும், கண்காட்சியை வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியிலும் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இம்மாநாட்டுப் பணிகளை பொறுப்பேற்று செயல்படுத்துவதற்காக பல்வேறு குழுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான “விழாக்குழு”வின் கலந்தாலோசனைக் கூட்டம் 03.06.2011 அன்று இரவு 08.00 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள மாநாட்டு அலுவலகமான செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில், குழு தலைவர் ஹாஜி காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், மாநாட்டு மேடை, பந்தல், ஆர்ச், அலங்காரம், மாநாட்டுத் திடல் துப்புரவுப் பணிகள், கண்காட்சி அரங்க துப்புரவுப் பணிகள், அனைத்திடங்களிலும் இருக்கை வசதிகள் செய்தல், குடிதண்ணீர் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகள், மகளிர் அரங்க ஏற்பாடுகள், முன்னறிவிப்பு பிரசுரங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
|