தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் டாக்டர் செல்வராஜ் நாளை பொறுப்பேற்கிறார். இதுவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சி.நா.மகேஷ்வரன், தனது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, நாளை மாலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய மகேஷ்வரன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் 21ஆவது ஆட்சியராக டாக்டர் செல்வராஜ் நியமிக்கப்பட்டார். இவர், இதுவரை தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றியவர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே மாவட்ட வருவாய் அலுவலராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
புதிய ஆட்சியர் செல்வராஜ் நாளை (08ஆம் தேதி) பதவி ஏற்கிறார். அவரிடம் நடப்பு ஆட்சியர் மகேஷ்வரன் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். பின்னர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு நாளை மாலை கிருஷ்ணகிரி ஆட்சியராக பொறுப்பேற்கிறார்.
சி.ந.மகேஷ்வரன் சுமார் 8 மாத காலம் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். தனது பணிக்காலத்தில் ஒத்துழைப்பளித்த அதிகாரிகள் மற்றும் அனைத்து துறையினருக்கும் பாராட்டு தெரிவிக்கிறார். இதுகுறித்து ஆட்சியர் மகேஷ்வரன் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புது முறையில் நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய நாள் முதல் அரசு திட்டங்கள் செம்மையாக செயல்படுத்தப்படுவதற்கு ஏற்ப நடைமுறைகளை சிறப்பாக திட்டமிடுவதில் துவக்கி, ஏற்றமுடன் செயலாக்குவது வரை ஒவ்வொரு நிலையிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு, தக்க நல்ல யோசனைகள் தெரிவிப்பதிலும், தொய்வின்றி பணிகள் தொடரச் செய்வதிலும், இன்னபிற அம்சங்களிலும் குழு மனப்பான்மையுடன் ஒரே நோக்குடன் ஒருங்கிணைந்து பணியாற்றியதற்காக தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அக்கடிதத்தில் விடைபெறும் மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நாளை காலை புதிய கலெக்டரிடம் மகேஷ்வரன் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செல்கிறார் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்கவுள்ள செல்வராஜ், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 2000ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று ஆர்.டி.ஓ.வாக தனது பணியைத் துவக்கினார். அதன் பின் பதவி உயர்வு பெற்று 2005 முதல் 2006 வரை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரியாகப் பணியாற்றினார். தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று சென்னையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, அவருக்கு மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அவரிடம் பேசிய முதல்வர், மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று கூறி வாழ்த்தினார்.
நன்றி:
தினமலர் (07.06.2011)
மற்றும்
தூத்துக்குடி ஆன்லைன் (06.06.2011) |