காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், 05.06.2011 அன்று ஏழை-எளிய மாணவ-மாணவியருக்கு பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அனுசரணையளித்தோருக்கு அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் மஹ்மூத் லெப்பை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால், எமது காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், ஏழ்மை நிலையிலுள்ள 313 பயனாளிகளுக்கு, கடந்த 05.06.2011 அன்று திருக்குர்ஆன் பிரதிகள், பள்ளி பாடக்குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு மனமுவந்து அனுசரணையளித்த கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா), குவைத் காயல் நல மன்றம், சிங்கப்பூர் காயல் நல மன்றம், அமீரக காயலர்கள், தொழிலதிபர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா மற்றும் அனுசரணையளித்த தனி நபர்களுக்கும், நிறுவனத்தாருக்கும் எமதமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம், ஜஸாக்குமுல்லாஹு கைரா...
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரே பயனாளி பல இடங்களில் உதவிகள் பெறுவது போன்ற முறைகேடுகளைத் தவிர்த்திடும் பொருட்டு, எமதமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, “பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகம்” என்ற பெயரில் முறையான செயல்திட்டத்தை வகுத்து, அதன் கீழ் இந்த இலவச வினியோகத்தை வழமையாகச் செய்து வரும் நகர்நல அமைப்புகளை ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக செயல்படுத்தித் தந்த இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகம் - குறிப்பாக, அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், பொருளாளர் ஜனாப் கே.எம்.டி.சுலைமான் உள்ளிட்ட குழுவினருக்கு எமது மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரும் ஆண்டுகளில், இக்ராஃவுக்கு கூடுதல் சிரமங்கள் ஏற்படாவண்ணம் எங்கள் அமைப்பின் சார்பில் முழு ஒத்துழைப்பளிப்போம் எனவும் இத்தருணத்தில் உறுதி கூறுகிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் நமது நற்செயல்களை முழுமையாக ஏற்று, அவற்றுக்கான நற்கூலிகளை நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் மஹ்மூத் லெப்பை தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான்,
காயல்பட்டினம். |