நடப்பாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவிலும், நகரளவிலும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு 03.06.2011 அன்று நடைபெற்ற கத்தர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 39ஆவது செயற்குழுக் கூட்டம் இறையருளால் கடந்த 03.06.2011 வெள்ளிக்கிழமையன்று, Kayal Friends’ House (KFH) இல்லத்தில் நடைபெற்றது. மன்றத்தின் துணைத் தலைவர் வி.எம்.டி.அப்துல்லாஹ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஏ.எச்.எஸ்.நஸ்ருத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து. கடந்த மே மாதம் வரையிலான மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டதுடன், அவற்றிலுள்ள நிறை-குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு:
கூட்டத்தின் முக்கிய அம்சமாக, நடைபெற்று முடிந்துள்ள பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் மாநில - நகரளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து, பின்வருமாறு தீர்மானமியற்றப்பட்டது:-
பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத் தேர்வில் நகரளவில்
முதலிடம் பெற்ற காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி ஆயிஷா ஷரஃபிய்யா,
இரண்டாமிடம் பெற்ற அதே பள்ளியின் மாணவியரான சித்தி கதீஜா, சாமு சமீரா
மற்றும்
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஷஃபீக்குர்ரஹ்மான்,
மூன்றாமிடம் பெற்ற சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஸல்மா ஸியானா
மற்றும் எல்.கே.மேனிலைபள்ளி மாணவர் சுப்பையா என்ற கண்ணன்
ஆகியோரையும்,
மெட்ரிகுலேஷன் பிரிவில் நகரளவில்
முதலிடம் பெற்ற காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ராஜலட்சுமி,
இரண்டாமிடம் பெற்ற அதே பள்ளியின் மாணவி முஜாஹிதா,
மூன்றாமிடம் பெற்ற சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ரிஸ்விய்யா ஆகியோரையும்,
மெட்ரிகுலேஷன் தேர்வில் அரபி மொழி பாடத்தில் மாநில அளவில்
இரண்டாமிடம் பெற்ற சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி ஆயிஷா முஸ்ஃபிரா,
மூன்றாமிடம் பெற்ற முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி செய்யித் ஹலீமா ஆகியோரையும் எம் மன்றம் மனதாரப் பாராட்டுகிறது.
வரும் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் காயல்பட்டினம் பள்ளிகளைச் சார்ந்த மாணவ-மாணவியர் மாநில அளவில் முதலிடங்களைப் பெற்றிட எம் மன்றம் வாழ்த்துகிறது.
இவ்வாறு பாராட்டுத் தீர்மானமியற்றப்பட்டது.
இக்ராஃ புதிய நிர்வாகக் குழுவிற்கு பாராட்டு:
பின்னர், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பின்வருமாறு தீர்மானமியற்றப்பட்டது:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், கடந்த 28.05.2011 அன்று நடத்தப்பட்ட பொதுக்குழுவில், அதன் புதிய தலைவராத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ்,
துணைத்தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - சிங்கை காயல் நல மன்றத்தின் புதிய தலைவர் ரஷீத் ஜமான்,
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.ஜே.ஷாஹுல் ஹமீத்,
துணைச் செயலாளர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் அஹ்மத் சுலைமான்,
பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.எம்.டி.சுலைமான்,
செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் உள்ளிட்டோரடங்கிய இக்ராஃவின் புதிய நிர்வாகக் குழுவிற்கு கத்தர் காயல் நல மன்றம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்கள் தலைமையிலான இக்ராஃவின் செயல்பாடுகள் அனைத்திற்கும் எமது கத்தர் காயல் நல மன்றம் என்றும் போல இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் உவப்புடன் வழங்கிட ஆயத்தமாக உள்ளது என்பதை பெருமகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு, இக்ராஃ புதிய நிர்வாகக் குழுவை வாழ்த்தி தீர்மானமியற்றப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில்,
ஹாஃபிழ் A.H.S.நஸ்ருத்தீன்,
செய்தித் தொடர்பாளர். |