சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 25ஆவது பொதுக்குழுக் கூட்டம், 03.06.2011 வெள்ளிக்கிழமை மாலை, இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் நடந்தேறியது. மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது தலைமை தாங்க அன்னாரின் மகன் எம்.ஜி.முஹ்லிஸ் ஜியாது இறைமறை ஓத கூட்டம் ஆரம்பமானது. எஸ்.ஹெச்.அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றார். ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
முன்னோர்கள் விட்டுச்சென்ற பணி:
தொடர்ந்து பேசிய விழாத்தலைவர், நமது முன்னோர்களின் கல்வி, சமுதாயம் மற்றும் பொதுநலப்பணிகளை நினைவுகூர்ந்தார். அவர்கள் ஆற்றிய சேவைகள் அளப்பரியது என்றும் அவர்கள் விட்டுச்சென்ற பணியை நாம் தொடரவேண்டுமென்றும் கூறிய அவர், நம் மன்றப் பணிகள் மேலும் சிறக்க சகோதரர்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டி உரையை நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
"இந்த மன்றம் துவக்கப்பட்டு எட்டரை ஆண்டுகளில் எவ்வித தொய்வுமின்றி செயற்குழு, பொதுக்குழு, ஆண்டுவிழா, ஈகைத்திருநாள் சந்திப்பு என வெற்றிப்பாதையில் பயணம் செய்கின்றது” என்றும், மன்றம் கடந்து வந்த பாதையில் செப்பணிட்ட நலலுதவிகளை விரிவாகவும் அவருக்கே உரிய அலங்காரப்பாணியில் எடுத்துரைத்தார் செயலர் சட்னி எஸ.ஏ.கே.செய்யது மீரான்.
”இவ்வளவு பெரிய உதவிகளை நம்மன்றம் உங்களனைவரின் ஆதரவோடுதான் அளித்தது என்றால் அது மிகையாகாது” என்று கூறிய செயலர் எம்.ஏ.செய்யித் இப்ராஹீம், நம் மன்றத்திற்காக தங்களது திறமைகளை அனைத்து வழிகளிலும் செலவிடும் சகோதரர்களை வெகுவாக பாராட்டினார். குறும்படத்தின் மூலம் நம் வீட்டிலிருந்தே மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்று வேண்டிய அவர், நமது குறும்படம் குறித்த செய்தியை பொதிகைத் தொலைக்காட்சியில் கோடிட்டதையும் நினைவுபடுத்தினார். பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அவர் பேசுகையில், "மதிப்பெண்கள் உயர்வது போல் மாணவர்களின் தனித்திறமையும் உயர வேண்டுமென்றும், அதிக மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் போதாது பொது அறிவையும், ஆங்கிலத்திறமையையும் அதிகமாக வளர்த்துக் கொள்ள மாணவ மாணவிகள் முன் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசுத்துறையில் முஸ்லீம்களின் பங்கு மிகவும் குறைவு என்றும் அதை நிவாத்தி செய்ய நாம் நமது பிள்ளைகளுக்கு அரசுத்துறையின் முக்கியத்துவம் குறித்து போதித்து அதை நோக்கி பயணிக்க வைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். வரும் கல்வியாண்டுகளில் நமதூர் பள்ளிகள் மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெரும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது என்று கூறிய அவர் அனைத்து மாணவ கண்மணிகளையும் பாராட்டி அமர்ந்தார்.
குறும்படம்:
இம்மன்றம் தயாரித்த "புற்றுக்கு வைப்போம் முற்று" குறும்படம் காணொளி காட்சி மூலம் திரையிடப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் குறுந்தகடு வினியோகிக்கப்பட்டது.
நிதி நிலை:
பொருளாளர் எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் சமர்ப்பித்த மன்றத்தின் நிதிநிலை அறிக்கையில்; நாம் இதுவரை கல்விக்காக, மருத்துவத்திற்காக, சிறு தொழிலுக்காக, ஏனைய பல உதவிகளுக்காக வழங்கிய தொகை மற்றும் அன்று கிடைக்கப்பெற்ற சந்தா, இருப்புத் தொகை என அனைத்தையும் துல்லியமாக விவரித்தார்.
சிறுவர் நிகழ்ச்சி:
பொதுக்குழுவில் கலந்துகொண்ட குடும்பத்தினரின் சிறார்கள், மனங்கவர் நிகழ்ச்சியில் பங்குகொண்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். குர்ஆன் ஓதுதல், பாடுதல், மழலை மொழி பேசுதல் என்று அவர்களுக்கு தெரிந்ததை வெளிப்படுத்தி பொதுக்குழுவை கலகலப்பாக்கினர்.
கருத்துரை:
"நமது முன்னோர்கள் அன்று படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்து தொழிலுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். மேற்படிப்பு படிக்க வைக்க யோசித்த அவர்கள், தன்னைப்போன்று தனது பிள்ளைகளும் வியாபாரத்தையே தொடர வேண்டும் என்று ஆர்வம் கொண்டார்கள்" என்று கூறிய சகோ. எஸ்.எஸ்.ஜாபர் ஸாதிக் இவரும், அரசுத்துறையை நமது சமுதாயம் அதிகமாக தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தியே தனதுரையை அமைத்துக் கொண்டார்.
மன்றத் தலைவர் சகோ. குளம்.எம.ஏ.அஹமது முஹ்யித்தீன் பேசுகையில், "சாதனைப்படைத்த மாணவ, மாணவிகளை நினைத்து வாழ்த்தி உவகை கொள்கிறோம் என்றும்; மேலும் மாணவர்களின் தனித்திறமையை மற்றும் பொது அறிவினை வளர்க்க நம் மன்றம் உயரிய முயற்சிகளை மேற்கொள்ளுமென்றும், அதற்கு நாம் தூர நோக்கோடு செயல்பட்டு, அர்ப்பணிப்புத் தன்மையை வளர்த்து, சாதனை சிகரத்தை எட்ட வேண்டுமென்றும், அதற்கான அனைத்து உதவிகளையும் நம் மன்றம் செய்ய தயாராக இருக்கிறதென்றும், நல்ல சீரிய பண்பினை மாணவர்கள் வளர்த்து நமதூருக்கு மென்மேலும் பெருமைகளை தேடித்தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
மன்றப் பொதுக்குழுவின் சிறப்பு விருந்தினரைப் அறிமுகப்படுத்தி பேசிய சகோ. எம்.எம்.மூஸா சாஹிப் "நாம் செய்யும் அனைத்து பணிகளுக்கும் முதுகெலும்பான உங்களின் சந்தாதான் காரணமென்றும் வலியுறுத்திய அவர், அதன் முக்கியத்தை உணர்ந்து தவறாது விரைந்து செலுத்தி, மன்றத்தின் பணிகளை மேலும் வீரியமடையச் செய்யுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொண்டார்.
நமதூர் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்வதற்கு தன்னலமற்ற நமது இக்ரஃ கல்வி அமைப்பின் சேவையும் ஒரு காரணம் என்ற கருத்தை கூட்டத்தில் பேசிய அனைவரும் பதிவு செய்தனர்.
சிறப்பு விருந்தினர்:
நம் மன்ற பொதுக்குழுவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சகோ.திருப்பத்தூர் கனி ஸலீம் பேசுகையில்; "இஸ்லாமிய உணர்வுகளோடு நற்பண்புகளை உட்கொண்டு பொதுநலப்பணிகளை செவ்வனே செய்து முத்திரை பதித்து வரும் இம்மன்றத்தின் சேவைகளை சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை. இம்மன்றத்தின் பணிகளை மேலும் விரிவுபடுத்தி செயல்திட்டம் அமைத்து அனைத்து நல மன்றங்களும் அந்த செயல்பாட்டின் வழியில் நடைபோட அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நம் மன்றம் செய்துவரும் பணிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசிய அவர், மன்றத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களையும், பிராத்தனைகளையும் தெரிவித்து காலத்தின் அருமைகருதி சுருக்கமாக தனதுரையை முடித்துக்கொண்டார்.
தீர்மானங்கள்:
• இக்ராவின் புதிய தலைமைக்கு வாழ்த்து:
உலகளாவிய காயல் நற்பணி மன்றங்களின் கூட்டமைப்பான இக்ரஃவிற்கு, சுழற்ச்சி முறையில், புதிய தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கும், தம்மாம் காயல் நலமன்றத்தின் தலைவர் மருத்துவர் இத்ரீஸ் அவர்களுக்கும், துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும், நமது மன்றம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.
• விடைபெற்ற இக்ரஃ தலைவருக்குப் பாராட்டு:
செவ்வனே பணிகளை செய்து முடித்து, புதிய தலைமைக்கு வழி விட்டு, விடைபெற்ற சிங்கப்பூர் காயல் நல மன்ற தலைவர் சகோ. பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் இம்மன்றம் தெரிவிக்கிறது.
• முதன்மை மாணவருக்கு பாராட்டு:
மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற மாணவன் ஏ.ஹெச்.அமானுல்லாஹ்வுக்கும் அவனுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் மற்றும் ஆர்வமூட்டிய பெற்றோருக்கும் இம்மன்றம் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.
• காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட்டிற்கு பாராட்டு:
இக்ரஃ உடன் இணைந்து "சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவனை..." நிகழ்ச்சியை தொடர்ந்து செவ்வனே நடத்திவரும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பிற்கு இம்மன்றம் நன்றிகளையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.
• ஊக்கப்பரிசு:
மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்த மூன்று மாணாக்கர்களுக்கும், மாநில அளவில் உளவியல் பாடத்தில்(psychiatric) மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவிக்கும் ஊக்கப்பரிசை அறிவித்துள்ளது இம்மன்றம்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது அவர்களின் அனுசரணையில், அருமையான இரவு உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டு, சகோ.சாளை எம்.எம்.செய்யிது முஹம்மது ஸாலிஹ் நன்றி கூற, கத்தீபு எம்.என்.உமர் அப்துல் காதிர் பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
சகோதரர்கள் சட்னி எஸ்.ஏ.முஹம்மது உமர் ஒலி, கதீபு எம்.என்.லெப்பைத்தம்பி, பொறியாளர். ஜி.எம்.முஹம்மது சுலைமான் ஆகியோர் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்:
எஸ்.ஹெச்.அப்துல் காதர் மற்றும் அரபி ஷுஅய்ப்
நிழற்படங்கள்:
முஹம்மது ஸாலிஹ், மக்கா. |