ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் வழங்கப்படும் மூன்று ஆண்டு ஆலிமா படிப்பில் சேரும் உள்ளூர் மாணவிகளுக்கு, பட்டப்படிப்பு செலவினை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காயல்பட்டினத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் மூலம் உள்ளூர் ஆலிமாக்களையும், தாயிக்களையும் மேலும் அதிகம் உருவாக்கும் வண்ணமாக - பட்டப்படிப்பு பாடக்கட்டணம் விசயத்தில் சலுகை வழங்க முடிவுசெயப்பட்டுள்ளது.
அதன்படி கல்லூரியில் மூன்று ஆண்டு ஆலிமா வகுப்பில் பயில விரும்பும் உள்ளூர் மாணவியரிடம், தொலைதூர கல்வி மூலம் இளநிலை பட்டப்படிப்பு (B.A., B.Sc. போன்ற) பயில ஆகும் செலவினை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். தற்போது வகுப்புகளுக்கான அனுமதி நடைபெற்றுவருவதால், இச்சலுகையை இவ்வாண்டு முதலே மாணவிகள் பெறலாம்.
இத்திட்டம் மூலம் பயன்பெறும் மாணவிகள் குறைந்தது 12ஆம் வகுப்பு நிறைவு செய்திருக்கவேண்டும். மேலும் குர்ஆனை ஓதத் தெரிந்தவராகவும், தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
பாடத்திட்டங்கள் பற்றிய மேலதிக விபரம் கல்லூரியின் இணையதளமான www.asgic.org இல் காணலாம்.
இவ்வாறு கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.எம். செய்யத் இப்ராகிம்,
சென்னை. |