உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகக் குழுவிலுள்ள வெற்றிடங்களுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது சிங்கை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டம் 03.06.2011 வெள்ளிக்கிழமையன்று 19.45 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
சாளை நவாஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். டபிள்யு.கே.எம்.முஹம்மத் ஹாரிஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மன்ற உறுப்பினர்களின் விபரங்கள் மீள்பதிவு:
மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்றத்தால் அனுப்பப்படும் கைபேசி குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல்களுக்கு உறுப்பினர்கள் உடனுக்குடன் பதில் தருமாறு தனதுரையில் கேட்டுக்கொண்ட அவர், சில உறுப்பினர்கள் கைபேசி குறுஞ்செய்திகளை சரியாகப் பெற்றுக்கொள்ள இயலாததை குறையாகத் தெரிவித்ததைக் கருத்திற்கொண்டு, மன்ற உறுப்பினர்கள் அனைவரது தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மன்றம் மீண்டும் முறையாக பதிவு செய்திட வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து அவ்விபரங்களை சேகரித்துப் பதிவு செய்யும் பொறுப்பு சாளை நவாஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நகரில் புது வணிகம் துவக்கம்:
காயல்பட்டினம் நகரில் புதிதாக வணிகம் ஒன்றைத் துவக்கி செயல்படுத்த வேண்டும் என சாளை நவாஸ் கூட்டத்தில் தெரிவித்த கருத்தை, செயற்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், நகரில் புதுவணிகம் துவக்குவதற்கான செயல்திட்டத்தை அதற்குத் தேவையான சரியான இடம் மற்றும் நபர்களைத் தேர்வுசெய்து செயல்படுத்தும் பொறுப்பை சாளை நவாஸ் பொறுப்பேற்றுச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வுகள் குறித்த விளக்கம்:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதங்கள் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
கல்வி, மருத்துவம், வீடுகட்ட உதவி, மனிதாபிமான உதவிகள் ஆகிய அம்சங்களுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.1,50,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பல்வேறு தேவைகளுக்காக உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள புதிய விண்ணப்பங்களில் கல்வி உதவி தவிர்த்து இதர உதவிகளுக்கான கோரிக்கை விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் மாதம் பரிசீலிக்கப்படும் என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை தாக்கல்:
கூட்டம் நடைபெற்ற நாள் வரையுள்ள மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னாலெப்பை தாக்கல் செய்ய, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
உலக கா.ந.மன்றங்கள் மற்றும் இக்ராஃவுக்கு நன்றி:
சிங்கை கா.ந.மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், மன்றத்தின் அப்போதைய தலைவர் என்ற அடிப்படையில், இக்ராஃவின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று செயல்பட்ட காலத்தில், அவரது செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த அனைத்துலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர், இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழுவினர் அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவுக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புகள்:
இதுவரை சிங்கை காயல் நல மன்றத்தில் உறுப்பினராக உள்ள அனைவரையும் இக்ராஃவிலும் உறுப்பினர்களாக்கியமை...
இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்கல்...
“ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு கல்வியளித்தல் - (Each One Educate One)” திட்டத்தின் கீழ் இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் அனுசரணை வழங்கல்...
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான அனுசரணை, சந்தா தொகை உள்ளிட்ட இக்ராஃ தொடர்புடைய கொடுக்கல் - வாங்கல்களில் இன்றளவும் ஒரு ரூபாய் கூட நிலுவையின்றி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளமை...
உள்ளிட்ட விபரங்கள் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, இவ்வனைத்து காரியங்களிலும் முழு மனதுடன் ஒத்துழைத்த - யாருடைய ஒத்துழைப்பு கிடைக்காதிருந்திருந்தால் இவற்றைச் சாதித்திருக்க முடியாதோ அப்பேர்பட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ புதிய நிர்வாகக் குழுவிற்கு வாழ்த்து:
அண்மையில் நடைபெற்ற இக்ராஃ கல்விச் சங்க பொதுக்குழுவில், இக்ராஃவிற்கு புதிய தலைவராத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் ஆற்றல் மிக்க தலைவர் ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ்,
துணைத்தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - சிங்கை காயல் நல மன்றத்தின் புதிய தலைவர் ரஷீத் ஜமான்,
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - செயல்திறன்மிக்க இளைஞர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத்,
துணைச் செயலாளர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பர் ஆசிரியர் அஹ்மத் சுலைமான்,
பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்புள்ள அன்பர் கே.எம்.டி.சுலைமான்,
செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் உள்ளிட்டோரடங்கிய இக்ராஃவின் புதிய நிர்வாகக் குழுவிற்கு மன்றம் சார்பில் இக்கூட்டத்தில் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த ஆண்டில் இக்ராஃவின் கடந்த நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்து சிறப்புற செயலாற்றியமைக்காக அதன் முன்னாள் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், பொருளாளர் ஹாஜி ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதிர் உள்ளிட்டோருக்கு மன்றத்தின் சார்பில் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இனி வருங்காலங்களிலும் இக்ராஃவுக்கு இயன்றளவு ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கிட மன்றம் ஆயத்தமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டது.
இரத்த தானிகளாக பெயர் பதிவு செய்ய உறுப்பினர்களுக்கு ஊக்கம்:
உயிர் காக்கும் உதவியான இரத்த தானம் வழங்குவதற்காக, சிங்கப்பூர் ஜாமிஆ சுலியா பள்ளியில் வரும் 19.06.2011 அன்று மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பெயர் பதிவு செய்துகொள்ளுமாறு கூட்டத்தில் ஊக்கப்படுத்தப்பட்டனர்.
அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி:
காயல்பட்டினம் நகரிலுள்ள ஏழை - இயலாமை - நிராதரவு நிலையிலிருக்கும் குடும்பத்தினருக்கு, வரும் ரமழான் மாதத்திற்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவிகள், இன்ஷாஅல்லாஹ் வரும் 28.07.2011 அன்று வழங்க தீர்மானிக்கப்பட்டதுடன், அனைத்து உறுப்பினர்களும் தம் சார்பில் பயன்பெறச் செய்யவிருக்கும் தகுதியுடைய பயனாளிகள் குறித்த விபரங்களை 20.07.2011 தேதிக்குள் மன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இலச்சினையைப் பதிவு செய்தல்:
மன்றத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இலச்சினையை சிங்கை சங்கப்பதிவாளரிடம் முறைப்படி பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதவுமாறு மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், செயற்குழுவால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
வெளியரங்க நிகழ்ச்சி:
விளையாட்டு உள்ளிட்ட வெளியரங்க நிகழ்ச்சிகளை மன்றத்தின் சார்பில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. துவக்கமாக, மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பாக கால்பந்து விளையாட்டுப் போட்டியை நடத்தி, பரிசுகள் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை சிங்கை செந்தோஸா ஸிலோஸோ கடற்கரையில் (Sentosa Siloso Beach) 25.06.2011 அன்று நடத்துவதென உத்தேசமாக தீர்மானிக்கப்பட்டது. கூட்ட நாள், நிரல் மற்றும் இடம் குறித்த இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூகுல் குழுமத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டுகோள்:
இதுவரை மன்றத்தின் 27 உறுப்பினர்கள் மட்டுமே, மன்றத்தின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ள கூகுல் குழுமத்தில் (Google Groups) பெயர் பதிவு செய்துள்ள விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உண்டியல் வினியோகம்:
நகர்நலப் பணிகளாற்றுவதற்கான கூடுதல் நிதியாதாரத்தைத் திரட்டும் நோக்கில் மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உண்டியல் திட்டத்தின் கீழ், அனைத்து உறுப்பினர்களுக்கும் அடுத்த பருவத்திற்கான உண்டியல்களை வினியோகிக்கும் பொறுப்பு உறுப்பினர்களான அப்துல்லாஹ் மற்றும் ரப்பானீ ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு:
மன்றத்தால் அறிவிக்கப்பட்ட படி, கணக்குப் பதிவாளர் (அக்கவுண்ட்டன்ட்) பணிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள், உரிய நிறுவனத்தாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோருடன் அந்நிறுவனத்தார் மூலம் தொலைபேசி மூலம் விபரங்கள் பெற்று வருவதாகவும், விண்ணப்பித்தவர்கள் குறித்த இறுதி விபரங்கள் விரைவில் விண்ணப்பதாரர்களுக்கு அறியத்தரப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீடு பழுது நீக்கத்திற்காக உதவும் திட்டம் குறித்த அறிக்கை:
காயல்பட்டினம் நகரில், தங்க இயலாத அளவுக்கு மிக மோசமாக பழுதடைந்துள்ள வீடுகளைக் கொண்ட – உதவி தேவையுடையோருக்கு உதவும் திட்டம் ஆய்வில் இருந்து வருவதாகவும், இதுகுறித்த இறுதி அறிக்கை மன்றத்தின் ஜூலை மாத செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
CFFC அறிக்கை சிங்கை தூதரகத்தில் சமர்ப்பிப்பு:
காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைப்பான Cancer Fact Finding Committee - CFFCயின் ஆய்வறிக்கை, மன்றத்தலைவர் ரஷீத் ஜமான், ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஆகியோரால் சிங்கையிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர்.
செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. |