இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டு பொதுநிகழ்வுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், குறிப்பிட்ட சில நிகழ்வுகளை ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸிலும், கண்காட்சியை வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியிலும் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இம்மாநாட்டுப் பணிகளை பொறுப்பேற்று செயல்படுத்துவதற்காக பல்வேறு குழுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான “கண்காட்சிக் குழு”வின் கலந்தாலோசனைக் கூட்டம் 31.05.2011 அன்று இரவு 07.30 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள மாநாட்டு அலுவலகமான செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில், குழு தலைவர் ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கண்காட்சிக் குழு உறுப்பினர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஹாஜி எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் என்ற சானா தானா, ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ, ஹாஜி எம்.எல்.ஷேக்னாலெப்பை, ஹாஜி ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ், ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், காயல்பட்டினத்தின் தொன்மையான வரலாறு, கலாச்சாரக் கட்டுக்கோப்பு, தமிழிலக்கியத்திற்கு காயல்பட்டினம் இலக்கியவாதிகள், தமிழறிஞர்களின் பங்களிப்பு உள்ளிட்டவற்றை நினைவுகூரும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இக்கண்காட்சியில் இடம்பெறச் செய்வதற்க்குத் தேவையான கோப்புகள், அரிய நூல்கள், பண்டைக்கால தொன்மையான பொருட்கள் போன்றவற்றை சேகரிப்பதென முடிவு செய்யப்பட்டது.
மேற்படி பொருட்களை வைத்திருப்போர், அவற்றை கண்காட்சியில் இடம்பெறச் செய்திடும் பொருட்டு கால தாமதமின்றி ஒப்படைக்குமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்பொருட்களை, கண்காட்சிக் குழுத் தலைவர் ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ் (தொலைபேசி எண்: +91 4639 280852), எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் (கைபேசி எண்: +91 98948 75669) ஆகியோரைத் தொடர்புகொண்டு ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கண்காட்சிக் குழுவின் துவக்க ஆலோசனைக் கூட்டம் காயல்பட்டினம் பெரிய பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு அலுவலகத்தில், 29.05.2011 அன்று இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டு
கண்காட்சிக் குழு சார்பாக,
M.L.முஹம்மத் முஹ்யித்தீன்,
காயல்பட்டினம். |