காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலும், குட்டியப்பா பள்ளியிலும் செயல்பட்டு வருகிறது சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
இஸ்லாம் மார்க்கத்தை தாமாக முன்வந்து தம் வாழ்வியல் நெறியாக்கி வருவோருக்காக புனித குர்ஆன் கல்லூரி என்ற நிறுவனத்தை அமைத்து மூன்று மாத இஸ்லாமிய ஆரம்பக் கல்வி உள்ளிட்ட பணிகளைச் செய்து வருவதோடு, மாதந்தோறும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தஃவா சுற்றுப்பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஃவா சென்டர் சார்பில் இம்மாதம் 28, 29 தேதிகளில் “வெற்றியை நோக்கி” என்ற தலைப்பில் இரண்டு நாள் இஸ்லாமிய மாநாடு (இஜ்திமா) நடைபெற்றது. துவக்க நாள் நிகழ்வுகள் பின்வருமாறு:-
முதல் அமர்வு - சிறப்புரை மற்றும் கருத்தரங்கம்:
28.05.2011 அன்று 09.30 மணிக்கு மாநாட்டு துவக்க நாள் நிகழ்வுகள், தஃவா சென்டர் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் குட்டியாப்பள்ளி வளாகத்தில் துவங்கின. துவக்க அமர்வுக்கு ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். இம்மாநாட்டுக் குழு தலைவர் பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, “இஸ்லாமிய பார்வையில் சமூக சேவை” எனும் தலைப்பில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் திரைப்பட நடிகரும், தற்போது இஸ்லாமிய மார்க்க அழைப்பாளராகக் கடமையாற்றி வருபவருமான ஏ.முஹம்மத் அமீருத்தீன், “உள்ளம் ஈர்த்திட...” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பின்னர், “வட்டியில்லா இஸ்லாமிய வங்கி - ஒரு செயல்முறை விளக்கம்” எனும் தலைப்பில் மக்கள் சேவை கூட்டுறவு கடன் வங்கியின் வாணியம்பாடி கிளை தலைவர் வி.அத்தீக்குர்ரஹ்மான், அகில இந்திய ஜனசேவா கூட்டுறவு கடன் வங்கியின் செயலாளர் செய்யித் காலித் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அத்துடன் முதல் நாள் காலை அமர்வுகள் நிறைவுற்றன.
மதிய நிகழ்வுகள் - புதிய கட்டிட திறப்பு, கண்காட்சி துவக்கம்:
அன்று மதியம் 02.00 மணிக்கு தஃவா சென்டரின் புதிய கட்டிடத்தை, களக்காடு - மேலப்பத்தையைச் சார்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் பகத்சிங் முஹம்மத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில், அன்றாட வாழ்வில் பேணப்பட வேண்டிய நல்லொழுக்க செயல்பாடுகள், அறிவுரைகள், சமூகத் தீமைகளுக்கெதிரான இறைமறை குர்ஆன், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளிலிருந்து வாசகங்கள் பதாகைகளாக நிறுவப்பட்டிருந்தன.
அத்துடன், மூட நம்பிக்கைகளுக்கெதிரான செயல்முறை விளக்கங்கள், கைவினைப் பொருட்களும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் அமர்வு - தஃவா சென்டர் மாணவர்களின் அனுபவ உரை:
மாலை அமர்வு 04.00 மணிக்குத் துவங்கியது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் பொருளாளர் முஹம்மத் இப்றாஹீம் மக்கீ இவ்வமர்வுக்குத் தலைமை தாங்கினார். இவ்வமர்வில், தஃவா சென்டரின் செயல்பாடுகள் அடங்கிய கள அனுபவங்கள், அங்கு பயிலும் மாணவ-மாணவியர், இஸ்லாமைத் தம் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டமைக்காக அனுபவித்து வந்த - வருகிற சோதனைகள் குறித்த செய்திகளடங்கிய, உள்ளம் உருகச் செய்யும் அனுபவ உரைகள் இடம்பெற்றன.
மூன்றாம் அமர்வு - சிறப்புரை:
அன்றிரவு 07.00 மணிக்குத் துவங்கிய மூன்றாம் அமர்வு துவங்கியது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் இவ்வமர்வுக்குத் தலைமை தாங்கினார்.
இவ்வமர்வில், “இந்தியாவில் இஸ்லாம் - ஒரு வரலாற்றுப் பார்வை” எனும் தலைப்பில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் சிறப்புரையாற்றினார்.
நான்காம் அமர்வு - சிறப்புரை:
நான்காம் அமர்வு இரவு 08.15 மணிக்குத் துவங்கியது. இவ்வமர்விற்கு, காயல்பட்டினம் குட்டியாபள்ளி, அப்பாபள்ளிகளின் தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ். மரைக்காயர் தலைமை தாங்கினார். “இயேசுவின் மார்க்கம் இஸ்லாமே!” எனும் தலைப்பில், கிறிஸ்துவ முன்னாள் பாஸ்டர் விஜயன் – தற்போதைய உமர் ஃபாரூக் சிறப்புரையாற்றினார்.
இயேசு என்ற நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஒருபோதும் தம்மை கடவுளாகக் கற்பித்ததில்லை... அவர் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றிய ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை... என்பதை திருமறை குர்ஆனிலிருந்தும், பைபிளிலிருந்தும் சான்றுகளோடு விளக்கிப் பேசினார்.
அத்துடன் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுற்றன.
தகவல்:
ஆரிஷ் கான்,
செய்தித் தொடர்பாளர்,
சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்),
காயல்பட்டினம்.
படங்களில் உதவி:
எம்.ஏ.அப்துல் ஜப்பார்
மற்றும்
ஷமீமுல் இஸ்லாம், எம்.ஏ., எம்.ஃபில்.,
காயல்பட்டினம். |