காயல்பட்டினத்தில் கிடா இறைச்சிக் கடைகள், பிரதான வீதியில் இரண்டு, அலியார் தெருவில் ஒன்று, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் இரண்டு, சதுக்கைத் தெருவில் ஒன்று, மகுதூம் தெருவில் ஒன்று என நகரின் பல பகுதிகளிலும் ஏராளமான கிடா இறைச்சிக்கடைகள் உள்ளன.
செத்த ஆடுகள், திருடப்பட்ட ஆடுகள் அறுக்கப்பட்டு, அதனால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு காயல்பட்டினம் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள டிப்போவில், இறைச்சிக் கடைக்காரர்களால் கொண்டு வரப்படும் கிடாய்கள் - நியமிக்கப்பட்ட ஒருவர் மூலம் அறுக்கப்பட்டு, அங்கேயே அவை உரித்து முத்திரை பதிக்கப்பட்டு கடைகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது இவ்வாறிருக்க கடந்த சில காலங்களுக்கு முன், ஏற்கனவே செத்த ஆட்டை கடைக்குள்ளேயே ரகசியமாக அறுத்து, இறைச்சி விற்பனை செய்த இறைச்சிக் கடைக்காரர்கள் சிலர் பல்வேறு சம்பவங்களின்போது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 25.05.2011 அன்று ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள பழைய எல்.கே.துவக்கப்பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள கிடா இறைச்சிக்கடையில் காலை 10.00 மணிக்கு உயிருடன் கடைக்குள் கொண்டு செல்லப்பட்ட கிடாய் அறுத்து உரிக்கப்பட்டுள்ளது.
டிப்போவில் அறுக்காமல் கடைக்குள் அறுக்கப்படுவதைக் கண்ணுற்ற காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சார்ந்த எஸ்.அப்துல் வாஹித் என்பவர் காயல்பட்டணம்.காம் வலைதளத்திற்குத் தகவல் தந்தார்.
அதனடிப்படையில், கடைக்குள் கிடாய் அறுத்துரிக்கப்படுவதை படமெடுக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த கடை உரிமையாளர், தினமும் காலை 09.00 மணியுடன் டிப்போ பணிகள் முடிந்துவிடுவதாகவும், அதற்குப் பிறகு இறைச்சி கேட்டு வரும் வாடிக்கையாளர்கள் இறைச்சியின்றி ஏமாந்து சென்றுவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இவ்வாறு கடைக்குள்ளேயே அறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் விளக்கமளித்தார்.
அறுக்கப்பட்ட கிடாய் விஷயத்தில் முறைகேடுகள் எதுவுமில்லை என்றாலும், டிப்போவிலிருந்து அறுக்காமல் இவ்வாறு தனித்தனியே இறைச்சிக் கடைக்காரர்கள் செய்தால், அதுவே பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகளை காயல்பட்டினம் நகராட்சி மன்றம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. |