உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் அவ்வமைப்பிற்கான புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ், துணைத்தலைவர்களுள் ஒருவராக ரஷீத் ஜமான் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் 28.05.2011 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் சிற்றரங்கில் இறையருளால் சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்! கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து உறுப்பினர்களனைவருக்கும் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.
இக்ராஃ துணைத்தலைவரும், கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவருமான ஜனாப் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்னலெப்பை, ஹாஜி லேண்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஷேக் தாவூத் இத்ரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இக்ராஃவின் செயல்பாடுகள் மற்றும் நகர மாணவ சமுதாயத்தின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக இக்ராஃ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
***இக்ராஃவில் இதுவரை இணைந்துள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 246 பேர்...
***இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவியர் 55 பேர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,75,000/-
***இக்ராஃ ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டோர் 5 பேர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜகாத் தொகை ரூ.48,000/-
***கல்லூரிகளில் இரண்டாம் - மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவியருக்காக கடந்த ஆண்டில் மட்டும் இக்ராஃ மூலம் வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.8,30,500/-
***கடந்த 5 வருடங்களில் இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ-மாணவியர் எண்ணிக்கை 260. அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை ரூ.30,18,000/- (முப்பது லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் மட்டும்)
***கல்வி உதவித்தொகை பெற்றவர்களுள் தமது மூன்றாண்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளவர்கள் 152 பேர்...
***இதர அமைப்புகளின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவங்களும் இக்ராஃ மூலம் வழங்கப்பட்டு, மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்றிட வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.
நகர மாணவியரை விட மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இக்ராஃ சார்பில் நகரின் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளமை...
***நகர்நலனைக் கருத்தில் கொண்டு, இக்ராஃ நிர்வாகக் குழுவின் பரிபூரண ஒப்புதலுடன் நகரில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டமை (கேன்சர் சர்வே)...
***அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் வரைமுறைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெறப்பட்டமை...
***நகர பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து, பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தை இக்ராஃ தலைமையேற்று செயல்படுத்தியமை...
உள்ளிட்டவை இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாகும்.
அவரைத் தொடர்ந்து, 2011-2011 பருவத்திற்கான இக்ராஃவின் வரவு-செலவு கணக்கறிக்கையை இக்ராஃ பொருளாளர் ஹாஜி ஸ்மார்ட் அப்துல் காதிர் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
பின்னர், இக்ராஃவின் நிர்வாகச் செலவுகள் - அவ்வகைக்காக பெறப்பட்ட வரவுகள் குறித்து இக்ராஃ செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான் கூட்டத்தில் விளக்கினார்.
சிங்கப்பூர் காயல் நல மன்றம் - ரூ.25,000/-
அமீரக காயல் நல மன்றம் - ரூ.20,000/-
ரியாத் காயல் நற்பணி மன்றம் - ரூ.16,000/-
கத்தர் காயல் நல மன்றம் - ரூ.15,000/-
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் - ரூ.15,000/-
RIDA FOUNDATION FOR CHARITY - 10,000/-
ஆகிய அமைப்புகள் சார்பில் இக்ராஃவின் இவ்வருட நிர்வாகச் செலவினங்களுக்காக மேற்படி தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
கடந்த ஆண்டில்
ரூ.10,000/- வழங்கிய குவைத் காயல் நல மன்றம்,
ரூ.20,000/- வழங்கிய தம்மாம் காயல் நற்பணி மன்றம்,
ரூ.25,000/- வழங்கிய ஜித்தா காயல் நற்பணி மன்றம்
ஆகிய அமைப்புகளிடமிருந்து இவ்வருடத்திற்கான தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் கே.எம்.டி.சுலைமான் தெரிவித்தார்.
நகர மாணவ சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்தில் தனியாத அக்கறையுடன்,
ஹாஜி ஏ.கே.கலீல் அவர்கள் மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000/-
ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார் அவர்கள் மாதம் ரூ.1,500 வீதம் ஆண்டுக்கு ரூ.18,000/-
ரியாத் ஹாஜி எஸ்.ஏ.டி.அபூபக்கர் (கூஸ்) அவர்கள் ரூ.5,000/-
அமீரகம் ஜனாப் ஏ.முத்து ஃபரீத் அவர்கள் மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000/-
வழங்க ஒப்புக்கொண்டு, வழங்கி வருவதாகவும் தெரிவித்த கே.எம்.டி.சுலைமான்,
இக்ராஃவின் நிர்வாகச் செலவுகள் மாதம் ரூ.18,600/- என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.2,25,000/- ஆவதாகவும், எனவே நிதிப்பற்றாக்குறை நிலை இன்னும் இருந்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் இக்ராஃ குறித்த கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கூற, உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் துவங்கியது.
இறையருளால் இவ்வளவு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இக்ராஃ தொடர்ந்து இன்னும் சிறப்புற செயல்படுவதற்கு நிதியாதாரம் மிகவும் அவசியம்... எனவே அமைப்புகளும் கூடுதலாக பங்களிக்க வேண்டும்... தனி நபர்களும் ஆர்வத்துடன் அதிகளவில் நிதியுதவி செய்திட வேண்டும்...
எனது பங்களிப்பாக வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கு ரூ.5,000/- தொகையை ஆண்டுக்கு ரூ.15,000/- என அதிகரித்து வழங்க உறுதியளிக்கிறேன்...
தற்சமயம் இக்ராஃ நிர்வாகிக்குள்ள அளவுக்கதிகமான வேலைப்பளுவைக் குறைத்திட கூடுதலாக ஓர் ஊழியரை துணைக்கு நியமிப்பதன் மூலம், இக்ராஃவின் அளப்பரிய செயல்பாடுகள் தங்குதடையின்றி நடைபெற உறுதுணை புரியலாம்... என்றார் ரியாத் காயல் நற்பணி மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டி.அபூக்கர்.
அதே கருத்தை ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஷேக் தாவூத் இத்ரீஸ் வலியுறுத்தினார்.
அடுத்து பேசிய ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இக்ராஃ துவக்கப்பட்ட வரலாறு, அதன் தற்போதைய வரலாறு மற்றும் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழான இக்ராஃவின் கட்டமைப்பு, இக்ராஃ நிர்வாகியின் செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
அவரையடுத்து, ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஜனாப் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஜனாப் ஏ.எச்.எம்.முக்தார் ஆகியோர் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் கருத்து தெரிவிக்கையில், பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசி, பெண்களின் கல்வி முன்னேற்றம் விஷயத்தில் இக்ராஃவின் பங்களிப்பு அதிகளவில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
அடுத்து பேசிய ஏ.எச்.எம்.முக்தார், உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனிநபர்களின் அனுசரணையைக் கொண்டு இக்ராஃ வழங்கி வரும் கல்வி உதவித்தொகையை ஆண்டுக்கு ரூ.5,000/- என்று வழங்குவதற்கு பதில், மாணவர்களுக்குத் தேவைப்படும் முழு உதவித்தொகையையும் வழங்கலாம் என்றும், நிறைய மாணவர்களுக்கு குறைந்தளவில் வழங்குவதை விட, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு நிறைந்த உதவிகளைச் செய்வது குறித்து இக்ராஃ பரிசீலிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், இக்ராஃவின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க நகரின் பெரும்பாலானோரை உறுப்பினர்களாக்கி, அவர்களின் உறுப்பினர் சந்தா தொகையை சேகரிக்கலாம் என்றும், நகரின் கடைகள் மற்றும் வீடுகளில் சந்தா தொகை வசூலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அடுத்து கருத்து தெரிவித்த ஜித்தா காயல் நற்பணி மன்ற பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையான ஆண்டுக்கு ரூ.5,000/- என்ற நிர்ணயத்தை ஆண்டுக்கு ரூ.8,000/- என்று மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, நகர பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணவ-மாணவியர் கூட ஆங்கில பேச்சுப்பயிற்சி இல்லாமலேயே உள்ளனர் என்றும், அதனைப் போக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்க்லிஷ் விஷயத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அடுத்து பேசிய ஹாஜி ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதிர், இக்ராஃ துவக்கப்பட்டபோது அதன் வருங்காலத் திட்டங்களாக முன்வைக்கப்பட்ட மெகா நூலகம், சொந்தக் கட்டிடம் உள்ளிட்ட அம்சங்களை காலப்போக்கில் மறந்துவிடாமல், ஒவ்வொரு கூட்டத்திலும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதன் மூலம், அவ்விலக்கை விரைவாக அடைய முயற்சிக்கலாம் என்றார்.
இறுதியாக கருத்து தெரிவித்த எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் நகரளவிலான பள்ளிகளின் தரவரிசை, அவற்றுக்காக வழங்கப்படவுள்ள பரிசுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு இக்ராஃவை கூட்டமைப்பாக்கல்:
இவ்வாறாக உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் அமைந்திருந்தது. கருத்துப் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் அனைத்தும் குறிப்பெடுத்து பாதுகாத்து வைக்கப்படும் என்றும், அடுத்தடுத்த செயற்குழுக் கூட்டங்களில் அதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ தற்சமயம் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக்கு கூட்டமைப்பாக செயல்பட்டு வருவதைப் போல, மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் அதனை உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பாக்கலாம் என்ற ஒரு சில காயல் நல மன்றங்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் கருத்து குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இறுதியில், இக்ராஃவையே அனைத்துத் துறைகளுக்கும் கூட்டமைப்பாக்குவதென்பது அதன் சீரிய கல்விப்பணியை வெகுவாகப் பாதிக்க வாய்ப்புள்ளது... எனவே, இக்ராஃவைப் போன்று மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கென தனியோர் அமைப்பை உருவாக்குவதே பொருத்தமாக இருக்கும்... அவ்வாறு துவக்கப்படுவதற்கு இக்ராஃ உதவலாம்... என கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலோர் தெரிவித்தனர்.
எனினும், இதன் சாதக-பாதகங்கள் குறித்து அடுத்தடுத்த செயற்குழுக் கூட்டங்களிலும் விவாதித்து, உலக காயல் நல மன்றங்களுடனும் கலந்து பேசி இறுதி முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
புதிய நிர்வாகக் குழு தேர்வு:
பின்னர், இக்ராஃவின் நிர்வாகக் குழுவில் வெற்றிடங்களுக்கான பொறுப்பாளர்கள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்:-
தலைவர்:
ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ்
துணைத்தலைவர்:
ஜனாப் எம்.ஏ.ரஷீத் ஜமான்
செயலாளர்:
ஜனாப் கே.ஜே.ஷாஹுல் ஹமீத்
துணைச் செயலாளர்:
ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமான்
பொருளாளர்:
கே.எம்.டி.சுலைமான்
செயற்குழு உறுபினர்கள்:
(1) லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்
(2) ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத்
மேற்கண்டவாறு நிர்வாகக் குழுவின் வெற்றிடங்களுக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகக் குழுவிற்கு பழைய தலைவர் வாழ்த்து:
பின்னர், இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகம், தனது தலைமைப் பொறுப்பின்போது ஆற்றப்பட்ட செயல்திட்டங்கள், புதிய நிர்வாகக் குழுவிற்கு வாழ்த்து உள்ளிட்ட அம்சங்களுடன் பழைய தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனுப்பிய மடலை, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் வாசித்தார்.
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் துவக்கமாக தலைமைப் பொறுப்பேற்ற ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மற்றும் அவரைத் தலைவராகக் கொண்டிருந்த சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தொடரான ஒத்துழைப்புகள், இக்ராஃவுக்கான நிர்வாகச் செலவினங்கள், உறுப்பினர் சந்தா தொகை என அனைத்தும் சிறிதும் நிலுவையின்றி முழுமையாக செலுத்தி முடிக்கப்பட்டமை குறித்து புகழ்ந்துரைத்த எஸ்.கே.ஸாலிஹ், இக்ராஃவை இன்னும் மெருகூட்டும் வகையில் புதிய தலைவரிடமிருந்து இன்னும் பன்மடங்கு சேவைகளை இக்ராஃ நிர்வாகக் குழு ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இதர தகவல்கள்...
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதுடன் தொலைபேசியில் உரையாடிய - இக்ராஃவிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவரும், தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவருமான ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ், புதிய நிர்வாகக் குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.
அடுத்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இக்ராஃ துணைத்தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ரியாத் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ ஆகியோர், புதிய தலைவர் ஹாஜி டாக்டர் இத்ரீஸ் உள்ளிட்ட இக்ராஃவின் புதிய நிர்வாகக் குழுவிற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் இக்ராஃவின் முதல் தலைவராக கடமையாற்றிய ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களைப் போல புதிய தலைவரான ஹாஜி டாக்டர் இத்ரீஸ் அவர்களும் ஆற்றல்மிக்க செயல்வீரர் என கூட்டத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர்.
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011”
பின்னர், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் இக்ராஃ நடத்தி வரும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியை இவ்வாண்டும் ஜூன் 24, 25 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் இக்ராஃ துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்தார்.
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சியின்போது தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் சார்பில் வழங்கப்படவுள்ள Best School Award குறித்து விளக்கிப் பேசிய அவர், அமீரக காயல் நல மன்றம் இதுகாலம் வரை தனியாக நடத்தி வந்த நகர நல்லாசிரியர் கவுரவிப்பு நிகழ்ச்சியை இவ்வாண்டு முதல் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின் ஓரம்சமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தெரிவித்ததை கூட்டத்தில் தெரிவித்தார்.
ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் நகர சாதனை மதிப்பெண்ணை முறியடிக்கும் மாணவருக்கு உலக காயல் நல மன்றங்களின் அனுசரணையுடன் ரூ.75,000/- பணப்பரிசு வழங்கப்படுவதாக இக்ராஃ ஏற்கனவே அறிவித்தமை, நடப்பாண்டு ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அச்சாதனை எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஏ.எச்.அமானுல்லாஹ் என்ற மாணவரால் முறியடிக்கப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை எஸ்.கே.ஸாலிஹ் மேலும் தெரிவித்தார்.
இறுதியாக பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
இக்ராஃ பொருளாளர் தாக்கல் செய்த, 2010-2011 பருவத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை இக்கூட்டம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
தீர்மானம் 2 - விடைபெறும் தலைவருக்கு நன்றி:
கடந்த ஓராண்டுகாலமாக இக்ராஃவின் தலைவராக திறம்பட செயலாற்றிய ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைப்பினர் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3 - புதிய நிர்வாகக் குழுவுக்கு ஒப்புதல்:
இக்ராஃவுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவிற்கு இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 4 - ப்ளஸ் 2 மாவட்ட முதன்மாணவருக்கு பாராட்டு:
நடப்பாண்டு ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளதோடு, நகர சாதனை மதிப்பெண்ணை முறியடித்த மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வுக்கும், அவரைப் பயிற்றுவித்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கும் இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மதியம் 01.30 மணியளவில், இக்ராஃ துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆ இறைஞ்ச, அதனைத் தொடர்ந்து ஸலவாத் மற்றும் கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |