இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டு பொதுநிகழ்வுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், குறிப்பிட்ட சில நிகழ்வுகளை ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸிலும், கண்காட்சியை வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியிலும் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இம்மாநாட்டுப் பணிகளை பொறுப்பேற்று செயல்படுத்துவதற்காக பல்வேறு குழுக்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான “விருந்தோம்பல் குழு”வின் கலந்தாலோசனைக் கூட்டம் 30.05.2011 அன்று இரவு 07.30 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள மாநாட்டு அலுவலகமான செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில், விருந்தோம்பல் குழு தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டில் கலந்துகொள்ள வெளியூர்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் வரவிருக்கும் விருந்தினர்களை வரவேற்பது, அவர்களுக்கான தங்குமிட வசதி, உணவு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும், மாநாட்டு நிகழவுகளின்போது செய்யப்பட வேண்டிய - விருந்தோம்பல் குழுவுடன் தொடர்புடைய இதர அம்சங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு தனித்தனி குழுக்கள் நியமிக்கப்பட்டன. |