காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் எதிர்வரும் 04.06.2011 சனிக்கிழமையன்று (நாளை) துவங்குகின்றன. 03.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் புகாரிஷ் ஷரீஃப் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுறுகிறது. மறுநாள் 04.07.2011 திங்கட்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
புகாரிஷ் ஷரீஃப் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பும், நிறைவுற்ற பின்பும், திக்ர் மஜ்லிஸ் நடத்துவது வழமை. அந்த அடிப்படையில், 02.06.2011 அன்று (நேற்று) இரவு 07.00 மணிக்கு ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் ஸபை வளாகத்தில் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் உள்ளிட்ட நகர பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொண்டனர்.
நாளை (04.06.2011) அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் ஸஹீஹுல் புகாரீ கிரந்தம் ஓதப்பட்டு, அதற்கான விளக்கவுரை காலை 09.15 மணிக்கு மார்க்க அறிஞரால் வழங்கப்படவுள்ளது. |