காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலும், குட்டியப்பா பள்ளியிலும் செயல்பட்டு வருகிறது சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
இஸ்லாம் மார்க்கத்தை தாமாக முன்வந்து தம் வாழ்வியல் நெறியாக்கி வருவோருக்காக புனித குர்ஆன் கல்லூரி என்ற நிறுவனத்தை அமைத்து மூன்று மாத இஸ்லாமிய ஆரம்பக் கல்வி உள்ளிட்ட பணிகளைச் செய்து வருவதோடு, மாதந்தோறும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தஃவா சுற்றுப்பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஃவா சென்டர் சார்பில் இம்மாதம் 28, 29 தேதிகளில் “வெற்றியை நோக்கி” என்ற தலைப்பில் இரண்டு நாள் இஸ்லாமிய மாநாடு (இஜ்திமா) நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வுகள் பின்வருமாறு:-
முதல் அமர்வு - கராத்தே சாகச நிகழ்ச்சி:
இரண்டாம் நாள் நிகழ்வுகள் 29.05.2011 அன்று காலையில் துவங்கின. காலை 08.30 மணிக்கு கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயலாளர் வழக்குறைஞர் எம்.ஐ.மீராஸாஹிப் தலைமை தாங்கினார்.
கராத்தே பயிற்சியாளர் பேட்டை இர்ஃபான் அளித்த பயிற்சியின் கீழ், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மாணவர்களால் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன.
இரண்டாம் அமர்வு - சமூக கருத்தரங்கம்:
இரண்டாம் அமர்வு காலை 10.00 மணிக்குத் துவங்கியது. இவ்வமர்வில் “கலாச்சார பிரச்சினைகளும், இஸ்லாமிய தீர்வுகளும்” என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை, சென்னை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் வழிநடத்தினார்.
இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் உமரீ, சமூக ஆர்வலர் எஸ்.எம்.ஏ.பஷீர் ஆரிஃப், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) செயலாளர் எஸ்.எச்.ஷமீமுல் அஸ்லாம் ஆகியோர் கருத்தரங்கில் பல்வேறு செய்திகளை பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
பொதுமக்களும் இக்கருத்தரங்கில் சமூகம் தொடர்பான தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். இறுதியாக, டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் நிறைவுரையாற்றினார். அத்துடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. (கருத்தரங்கம் குறித்த விரிவான விபரங்கள் தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)
மூன்றாம் அமர்வு - சிறப்புரை:
பின்னர் நடைபெற்ற மூன்றாம் அமர்வில், “இறையச்சம்” எனும் தலைப்பில், இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸீ சிறப்புரையாற்றினார்.
கண்காட்சி:
அன்று மதியம் 02.00 மணிக்கு கண்காட்சி நடைபெற்றது. “இத்தனை முன்மாதிரிகளா நபிகளாரிடத்தில்?” எனும் தலைப்பிலான நிழற்பட கண்காட்சி மற்றும் இஸ்லாமிய அறிவியல் கண்காட்சிகள் இதில் இடம்பெற்றன.
நான்காம் அமர்வு - மூட நம்பிக்கைக்கெதிரான மேடை நாடகம்:
நான்காம் அமர்வு மாலை 04.00 மணிக்குத் துவங்கியது. இவ்வமர்வில், மூட நம்பிக்கைகளுக்கெதிரான கருத்துக்கள் அடங்கிய நேரடி மேடை நாடக நிகழ்ச்சி, கோவையைச் சாந்த மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரக் குழுவினரால் நடத்தப்பட்டது.
ஐந்தாம் அமர்வு - சிறப்புரை:
ஐந்தாம் அமர்வு இரவு 07.00 மணிக்குத் துவங்கியது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் இவ்வமர்விற்குத் தலைமை தாங்கினார்.
“சுய பரிசோதனை” எனும் தலைப்பில், ஜம்இய்யத் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - JAQH அமைப்பின் மாநில தலைவர் மவ்லவீ எஸ்.கமாலுத்தீன் மதனீ சிறப்புரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, “சிறந்த சமுதாயம்” எனும் தலைப்பில், இலங்கை நிதாஉல் கைர் அறக்கட்டளையின் தலைவர் மவ்லவீ எஸ்.எல்.நவ்ஃபர் சிறப்புரையாற்றினார்.
பின்னர், சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா நிறைவுரையாற்றினார். பல்வேறு சிரமங்கள் மற்றும் பொருட்செலவுளுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டின் நோக்கம், யாரோ குறிப்பிட்ட சிலர்தான் தஃவா எனும் அழைப்புப் பணியைச் செய்திட வேண்டும் என்றில்லாமல், அனைவரும் இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர்களாகத் திகழ்ந்திட வேண்டும் என்பதேயாகும் என்று அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
வாழ்வில் மிகச் சாதாரண நிலையிலிருந்து, தமது தீராத அழைப்புப் பணியால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொள்ள காரணமாக இருந்திட்ட இருவரை அவர் மேடையில் அறிமுகப்படுத்தினார். அவ்விருவருக்கும், தஃவா சென்டர் சார்பில் மார்க்க விளக்க பொக்கிஷங்கள் அடங்கிய நூற்களை பரிசாக வழங்கப்பட்டது.
இறுதியாக, சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ நன்றி கூற, கஃப்ஃபாராவுடன் மாநாட்டு நிகழ்வுகள் யாவும் இறையருளால் நிறைவுற்றன.
நிகழ்ச்சிகளனைத்தையும், ஷமீமுல் இஸ்லாம், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.எம்.அஹ்மத் ஸாஹிப் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இரண்டு நாள் மாநாட்டு நிகழ்ச்சிகளிலும் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சார்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாநாட்டு அரங்கிலேயே உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டு ஏற்பாடுகளை, சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரை நடத்தி வரும் தி கோல்டன் எஜுகேஷனல் ட்ரஸ்ட் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
ஆரிஷ் கான்,
செய்தித் தொடர்பாளர்,
சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்),
காயல்பட்டினம்.
படங்களில் உதவி:
எம்.ஏ.அப்துல் ஜப்பார்
மற்றும்
ஷமீமுல் இஸ்லாம், எம்.ஏ., எம்.ஃபில்.,
காயல்பட்டினம். |