எந்த ஒரு ஆசிரியரும் தனிப்பட்ட கல்வி பயிற்சி (டியூசன்) அல்லது தனிப்பட்ட பயிற்றுவிப்பு நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று மத்திய அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு போட்டுள்ளது.
குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி சட்டம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அந்த சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. இதனை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் மூலம் கல்வித்துறையினருக்கு அறிவுரை வழங்கி வருகிறது.
இதற்கிடையில் இது சம்பந்தமாக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒரு மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி அளிப்பதற்கு போதுமான நிறுவனங்கள் இல்லாத நிலையில் அல்லது துணைப்பிரிவு 2ல் குறிப்பிட்ட குறைந்தப்பட்ச தகுதிகள் கொண்ட ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலையில், தேவைப்படுமானால் மத்திய அரசு ஆசிரியர் நியமனத்திற்கான குறைந்தப்பட்ச தகுதிகளை அதிகாரபூர்வ அறிவிக்கை மூலம் தளர்த்தலாம். அதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு மிகாத காலத்திற்கு ஆசிரியர்களை நியமித்து அதனை அறிக்கையில் வெளியிட வேண்டும்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது துணை விதியில் குறிப்பிட்டபடி குறைந்தப்பட்ச தகுதிகள் ஒரு ஆசிரியருக்கு இல்லை என்றால் அவர் ஐந்தாண்டுக்கு மிகாத காலத்திற்குள் இந்த குறைந்தப்பட்ச தகுதிகளை பெற வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், படிகள் அவரது பணிமுறைகள் மற்றும் பணிநிபந்தனைகள் வகுத்துரைக்கப்படும் வகையில் இருக்கும்.
ஆசிரியர்கள் கடமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தொடர்ச்சியாகவும், உரிய நேரப்படியும் வர வேண்டும். அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் கலைத்திட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனை மதிப்பிடுதல், தேவைப்படுமானால் கூடுதல் பயிற்சி வழங்க செய்தல், பெற்றோர் மற்றும் பாதுகாப்பவர்களுடன் சந்திப்பு கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி குழந்தையின் வருகை, கற்றல் திறன், கற்றலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இதர பொருத்தமான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட கடமைகளை ஒரு ஆசிரியர் செய்ய தவறும் பட்சத்தில் அவர் பொருத்தமான பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். அப்படிப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக அவர் தரப்பு வாதத்தை கேட்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
ஆசிரியருக்கு ஏதேனும் குறை இருக்குமானால் அது வகுத்துரைக்கப்படும் வழிமுறைகளில் கையாளப்படும். இந்த சட்டம் நடைமுறைக்கு வரத் துவங்கும் 6 மாத காலத்திற்குள் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர், ஆசிரியர் விகிதம் இருப்பதை அரசு, உள்ளாட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
மாணவர், ஆசிரியர் விகிதத்தை பராமரிக்க ஒரு பள்ளியில் நியமிக்கப்படும் எந்த ஒரு ஆசிரியரும் வேறு பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ பணியாற்றும்படி செய்யக் கூடாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரண பணிகள் அல்லது உள்ளாட்சி அமைப்புக்கோ, மாநில சட்டசபைக்கோ, லோக்சபாவிற்கோ நடக்கும் தேர்தல் தொடர்பான பணிகள் அல்லாத வேறு கல்வி சாராத எந்த ஒரு நோக்கத்திற்காகவும் எந்த ஒரு ஆசிரியரையும் அனுப்ப கூடாது.
எந்த ஒரு ஆசிரியரும் தனிப்பட்ட கல்வி பயிற்சி (டியூசன்) அல்லது தனிப்பட்ட முறையில் பயிற்றுவிப்பு நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
தினமலர் (04.06.2011) |