தமிழக சட்டமன்றத்தில் 14வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலையில் தொடங்கியது.
இன்றைய உரையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது.
ஆளுநரின் இந்த உரையின் முக்கிய அம்சங்கள்:
* குறுகிய காலத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
* சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும். அதுவரையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிறுத்தப்படும்.
* கலைஞர் வீட்டு வசதி திட்டம் மாற்றியமைக்கப்படும். கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்.
* தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மாணவர்களுக்கான இலவச லேப்டாப், வீட்டுப் பெண்களின் உபயோகத்துக்கான இலவச ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை இந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் வழங்க ஏற்பாடு.
* திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியவர்களின் படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு.
* கேபிள் டிவி மீண்டும் அரசுடமை ஆக்கப்படும்.
* ஓய்வூதியம் டிஜிட்டலைஸ் செய்யப்படும். வங்கிக் கணக்கு மூலம் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை வழங்க ஏற்பாடு. இந்த விஷயத்தில் தினமணியின் யோசனை ஏற்கப்பட்டுள்ளது. சமூகப்பாதுகாப்புத் திட்டம் குறித்து, என்ன வேண்டும் எங்களுக்கு என்ற தலைப்பில் தினமணி கூறிய யோசனை ஏற்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு 20-25 என்ற தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாரிக்கப்படும். அதன்மூலம் மாநில வளச்சிக்கு திட்டம் வரையப்பட்டு, வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* 75 லட்சம் சிறிய நடுத்தர விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் திட்டம் தயாரிக்கப்படும்.
* நதிநீர் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவே அரசு விருப்பப்படுகிறது. ஆனால் அது சாத்தியமாகாவிட்டால், மேற்கொண்டு சட்டபூர்வ நடவடிக்கைக்கு இந்த அரசு தயங்காது.
* உயிரி தொழில்நுட்பம், நேனோ டெக்னாலஜி, மருந்து தயாரிப்பு ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* புதுப்பிக்கத் தக்க ஆதாரங்களைக் கொண்ட மின் தயாரிபுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* மாநில நெடுஞ்சாலைகள் எல்லாம் இரு வழிச்சாலைகளாக மாற்றம் பெறும்.
* 2014க்குள் மக்கள் தொகை 800 என்ற அளவில் இருக்கும் கிராமங்களுக்கு தார்ச் சாலை வசதி செய்து தரப்படும்.
* சிறப்பு நகர்ப்புற வளர்ச்சிக்கு தொலைநோக்குத் திட்டம்
* மோனோ ரயில் திட்டம் தொடங்கப்படும்
* மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்
* தெருவிளக்குகள் சோதனை அடிப்படையில் சூரிய மின்சக்தியில் இயங்க ஏற்பாடு
* 60 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்கப்படும். இந்திய தர நிர்ணயக் கழகத்தால் விதிக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் மறுசுழற்சி முறை கடுமையாக ஒழுங்குபடுத்தப்படும்
* 5 அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒன்றாக்கப்படும். தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும். தமிழகத்தில் தற்போது இருக்கும் மற்ற அண்ணா பல்கலைக்கழகங்கள் சென்னை பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
* தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் இலங்கை அகதிமுகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படும்.
* இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துதரும்படி இலங்கை அரசை வலியுறுத்துமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.
இவ்வாறு ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தகவல்:
www.chennaionline.com |