மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவாக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) மைதானத்தில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
46ஆம் ஆண்டு அகில இந்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 09.05.2011 அன்று துவங்கி, 29.05.2011 அன்று இறுதிப்போட்டியுடன் நிறைவுற்றது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மாநில காவல்துறை - சென்னை அணியை எதிர்த்து பெங்களூரு சாய் அணி களம் கண்டது. ஆட்டத்தின் இறுதியில் 5-0 என்ற கோல் சென்னை அணி வென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கினார். எம்.எஸ்.சதக்கத்துல்லாஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
ஹாஃபிழ் ஸல்மான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். கலாமீ யாஸர் அரஃபாத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில், திருச்செந்தூர் தொகுதி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற - வெற்றிக்கு முனைந்த அணிகளின் பயிற்சியாளர்கள், நடுவர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சாதாரணமாக மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியை தொடர்ந்து நடத்துவதே பெரும் சிரமமிக்கது என்றிருக்க, ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து 46ஆவது ஆண்டாக அகில இந்திய அளவில் கால்பந்துப் போட்டியை திறம்பட நடத்தி வருவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், இத்தனை சிறப்பு மிக்க இந்த மைதானத்தை புல்தரை மைதானமாக்க வேண்டுமெனவும், இங்கிருந்து அகில இந்திய அளவில் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மேடையில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
அதற்கு விளக்கமளித்துப் பேசிய ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர், முறையான ஒத்துழைப்புகளைப் பெற்று மைதானத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த மைதானத்தில் தொடர்பயிற்சி பெற்ற காழி அலாவுத்தீன் என்ற வீரர் இன்று அகில இந்திய அளவில் போட்டிகளில் விளையாடி வருவதன் மூலம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கு பெருமை தேடித் தந்துகொண்டிருப்பதாகவும், இன்னும் பல வீரர்கள் மாநில அணிகளிலும் விளையாடி வருவதாகவும் தெரிவித்து, வீரர் காழி அலாவுத்தீனை அவர்களுக்கு அறிமுகம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதாக இருந்தது. பணி நிமிர்த்தம் அவர் வர இயலாமற்போனதையடுத்து மாவட்ட ஆட்சியரின் சார்பில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) எஸ்.சேதுராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு, வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூபாய் இருபத்தைந்தாயிரம் பணப்பரிசை வழங்கினார்.
இரண்டாமிடம் பெற்ற பெங்களூர் சாய் அணிக்கு ரூபாய் இருபதாயிரம் பணப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. அத்துடன், இரு அணி வீரர்களுக்கான தனிப்பரிசுகள், பால் பாய்ஸ் பரிசுகள் உள்ளிட்ட பரிசுகளும் மேடையில் வழங்கப்பட்டன.
ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் அஹ்மத் முஸ்தஃபா, பொருளாளர் எம்.எல்.ஹாரூண் ரஷீத், துணைத்தலைவர் பீர் முஹம்மத் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்துல் காதர் நெய்னா நன்றி கூறினார்.
விழாவில் நகரின் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரிசளிப்பு விழா நிறைவுற்றதும் பலவண்ண பட்டாசுள் மூலம் வானவேடிக்கை நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. |