இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர்.
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளைப் பெற்று கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியரை, இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் ஆகியோருடன், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று, மாணவ-மாணவியரின் முகவரி, குடும்ப சூழல், பொருளாதார நிலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முன்னதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், 23.07.2011 அன்று காலை 09.30 மணி முதல் மதியம் 03.30 மணி வரை அம்மாணவ-மாணவியர் நேர்காணல் செய்யப்பட்டனர்.
இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினரும், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் செயலருமான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில், இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினரும், காயல்பட்டினம் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலருமான பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர், உதவித்தொகை கோரி விண்ணப்பித்திருந்த 18 மாணவர்கள், 37 மாணவியர் உள்ளிட்ட 55 மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர்.
இந்த நேர்காணலின் முடிவில், 54 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பி.எஸ்ஸி. கணணி அறிவியல் பயில்வதற்காக, சொற்ப தொகை மட்டுமே செலவாக எதிர்பார்க்கப்படும் - அருகிலுள்ள கல்லூரிகளை விட்டுவிட்டு, ரூபாய் 35,000 வரை செலவழித்து தொலைவிலுள்ள கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த ஒரு மாணவியின் விண்ணப்பம் தவிர்த்து மற்ற 54 மாணவ-மாணவியரின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன. |