திருக்குர்ஆன் மனன - ஹிஃப்ழு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கவும், வரும் ஆண்டு முதல் திருக்குர்ஆன் மனனத்தை (ஹிஃப்ழு) முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், ஒரே ஆண்டில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடிக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கவும், சிங்கப்பூர் காயல் நல மன்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நிர்வாகக் குழு கூட்டம் 22.07.2011 அன்று மாலை 06.30 மணிக்கு, அதன் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மன்றத் தலைவர் ரஷீத் ஜமான், துணைத்தலைவர் அபூ முஹம்மத் உதுமான், செயலாளர் மொகுதூம் முஹம்மத், பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்வி, மருத்துவ உதவிக்கு நிதியொதுக்கீடு:
பல்வேறு தேவைகளுக்கு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவற்றை தொலைபேசி மூலம் விசாரித்தறிந்த தகவல்கள், அவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய உதவித்தொகைகள் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் விவரித்தார். இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், இவ்வகைகளுக்காக ரூ.1,25,000 தொகை ஒதுக்கீடு செய்வதெனவும், அத்தொகை விரைவில் இக்ராஃ மூலம் பயனாளிகளுக்கு வினியோகிக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்க்ப்பட்டது. இதுகுறித்த மன்றச் செயலரின் விரிவான விளக்கத்தை கூட்டம் ஒருமனதாகப் பாராட்டியது.
மும்மாவட்ட போட்டியில் வென்ற ஹாஃபிழ்களுக்கு ஊக்கப்பரிசு:
அண்மையில் நாகர்கோயில் கோட்டாறில் நடைபெற்ற மும்மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியில் முதல் மூன்றிடங்களை வென்ற காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு மன்றத்தின் சார்பில் தலா ரூபாய் இரண்டாயிரம் ஊக்கப் பரிசாக வழங்குவதெனவும், அதை 25.07.2011 அன்று (இன்று) காயல்பட்டினம் அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யாவின் முதல்வர் “சேவைச் செம்மல்” அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களைப் பாராட்டி நடைபெறும் பாராட்டு விழாவின்போது, அவரது கரத்தால் வழங்க கேட்டுக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த சாதனை மாணவர்கள் தம் வாழ்நாள் முழுதும் தமது புனித குர்ஆன் மனனத்தை சிறிதும் மறக்காமல் பாதுகாக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என கூட்டத்தில் பிரார்த்திக்கப்பட்டது.
வரும் ஆண்டு முதல் ஹிஃப்ழு முடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை:
திருக்குர்ஆனை மனனம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அதிகளவில் மத்ரஸாக்களில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கான முயற்சிகளின் துவ்க்கமாக, இனி வரும் ஆண்டிலிருந்து காயல்பட்டினத்தைச் சார்ந்த - எந்த மத்ரஸாவில் பயிலும் மாணவர்களானாலும், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
ஓராண்டில் ஹிஃப்ழு முடிக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு:
அதுபோல, ஒரே ஆண்டில் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து முடிக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்குவதெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ரமழான் வாழ்த்துக்கள்:
உலகின் அனைத்து காயலர்களுக்கும் ரமழான் நல்வாழ்த்துக்களை மன்றத்தின் நிர்வாகக் குழு தெரிவித்து மகிழ்கிறது. இம்மாதத்திலும், இதர காலங்களிலும் நாம் செய்யும் தொழுகை, நோன்பு, ஜகாத் உள்ளிட்ட நற்கருமங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் தன்னருளால் ஏற்று, நமது பாவங்களை மன்னித்து, நம்மவர் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தந்து அருள் புரிய கூட்டத்தில் பிரார்த்திக்கப்பட்டது.
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |