நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் ஆகியன இணைந்து, கண் சிகிச்சை இலவச முகாமை 24.07.2011 அன்று (நேற்று) காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்தின.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். அதன் செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல் இரத்த தான கழகத்தின் நிறுவன தலைவர் ஹாஜி எல்.எஸ்.அன்வர், அதன் அமைப்பாளர் ஹாஜி ஓ.எஸ்.ஃபாரூக், துணைச் செயலாளர் கே.முஹ்ஸின், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதினார். ஐக்கியப் பேரவை துணைப் பொருளாளர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் பாவனாசகுமார் முகாமைத் துவக்கி வைத்து உரையாற்றினார். கே.எம்.டி. மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எஸ்.எஸ்.இஸ்மாஈல் வாழ்த்துரை வழங்கினார்.
இம்முகாமில், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் கண் மருத்துவ பரிசோதனை செய்தனர். சுமார் 260 பயனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டனர். அவர்களுள் 13 பேர் கண் இலவச அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, அதன் அமைப்பாளர்களான ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், ஹாஜி எம்.என்.முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி, ஹாஜி எம்.எம்.அஹ்மத் ஹுஸைன், ஐக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீர், “காக்கும் கரங்கள்” நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன், எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் மற்றும் முகாமை நடத்தும் அமைப்புகளின் நிர்வாகிகள் செய்திருந்தனர். |