காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் மாணவியர் பேரவை துவக்க விழா 27.07.2011 அன்று காலை 11.00 மணிக்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் விழாவிற்குத் தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் மூன்றாமாண்டு மாணவி ஓ.இசட்.ராபியத்துல் அதவிய்யா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கல்லூரியின் மாணவியர் பேரவை ஒருங்கிணைப்பாளரும், வணிக நிர்வாகவியல் துறை தலைவருமான எஸ்.ஏ.ரஹ்மத் ஆமினா பேகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாணவியர் பேரவைக்கு புதிய தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாமாண்டு வணிகவியல் மாணவியுமான பி.முத்து கதீஜா, துணைத்தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியின் இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவியுமான என்.எம்.ஃபாத்திமா ரிஃப்ஹா, செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணிப்பொறியியல் இரண்டாமாண்டு மாணவியுமான ஆர்.எஸ்.தேவிகா, துணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில இலக்கியத் துறை முதலாமாண்டு மாணவியுமான ஜே.சுபாஷினி ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் மெர்ஸி ஹென்றி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் முதல்வர் தலைமையில் பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, பேரவைத் தலைவி பி.முத்து கதீஜா தலைமையில் பல்வேறு மன்றங்களைச் சார்ந்த மாணவியர் செயலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
புதிதாக பதவியேற்ற அனைவரையும் வாழ்த்தி கல்லூரி செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், துணைச் செயலர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், முதல்வர் மெர்ஸி ஹென்றி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில், திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவி எம்.ஹைருன்னிஸா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவியரிடையே இருக்க வேண்டிய குறிக்கோள், தன்னம்பிக்கை, தேடுதல் ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக, அவரை கல்லூரி நிர்வாக அதிகாரி முனைவர் ஹம்ஸா முகைதீன் அறிமுகப்படுத்தினார்.
நன்றியுரைக்குப் பின், கல்லூரியின் முதலாமாண்டு வணிக நிர்வாகவியல் மாணவி ஏ.ஷர்மிளா பானுவின் துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், கல்லூரியின் அனைத்துத் துறை விரிவுரையாளர்களும், வாவு எஸ்.ஏ.ஆர். அறக்கட்டளை உறுப்பினர்களும், மாணவியரும் திரளாகக் கலந்துகொண்டனர். |