காயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி வட்டாரத்தைச் சார்ந்த 45 சிறுவர் - சிறுமியருக்கு பெருநாள் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியையொட்டி துணைக் கட்டிடம் அமைக்க லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தலைமையில் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்முறை:
கடந்த 28.08.2011 அன்று நடைபெற்ற இஃப்தார் நேரத்தின்போது இதற்கென சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தலைமை தாங்கினார். இப்பள்ளிவாசல் அமைவிடத்திற்கு நிலம் தானமளித்த காயல்பட்டினம் ஸ்டார் அப்துர்ரஷீத் ஹாஜி அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த ஹாஜி ஏ.ஆர்.அப்துல் வதூத், ஹாஜி எம்.எஸ்.அப்துல் காதிர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்டிடப் பணிக்குழு நியமனம்:
ஹாஜி அக்பர் பாதுஷா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். பெண்கள் பள்ளியில் தொழுவதற்கு போதிய இடவசதியின்மை, இப்பள்ளியில் மார்க்க அடிப்படைக் கல்வி பயிலும் சிறாருக்கு தனி வகுப்பறையின்மை, பள்ளிக்கூட பாடங்களை டியூஷன் முறையில் நடத்துவற்கென தனி இடவசதியின்மை ஆகிய குறைகள் இந்நிகழ்ச்சியின்போது பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டு, இக்குறைகளைப் போக்கிடும் வகையில் பள்ளியின் சார்பில் கேளரங்க (ஆடிட்டோரியம்) வடிவில் பள்ளிவாசலையொட்டி புதிதாக கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகளுக்கான ஏற்பாடுகளை முறைப்படுத்தி செய்திடும் பொருட்டு லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தலைமையில் கட்டிட ஏற்பாட்டுக்குழு அமைக்கப்படுவதாகவும், விரைவில் கட்டிடக்கலை வல்லுனர்களின் வடிவமைப்பில் வரைபடங்களுடன் பொதுமக்களை நாடப்போவதாகவும், அனைத்துலக காயலர்களும், காயல் நல மன்றங்களும் இதன் அவசியம் கருதி இவ்வகைக்கு தாராள நிதியுதவி வழங்கிடுமாறும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
இவ்வகைக்காக ஏற்கனவே அமீரக காயல் நல மன்றம் சார்பில் கனிசமான தொகை முதல் தவணையாக நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
ரூபாய் ஒரு லட்சம் உதவி:
அடுத்து உரையாற்றிய நிகழ்ச்சி தலைவரும், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி துணைக்கட்டிட ஏற்பாட்டுக்குழு தலைவருமான லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், இப்பகுதியில் இப்படியொரு கட்டிடம் மிகவும் அவசியம் என்றும், அதை நிறைவேற்றித் தருவது நகர பொதுமக்களின் கடமையென்றும், இவ்வகைக்காக துவக்கமாக தன் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்போவதாகவும் அறிவிக்க, கூட்டம் தக்பீர் முழங்க அதை வரவேற்றது.
மார்க்க சொற்பொழிவு:
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஐக்கிய சமாதானப் பேரவையின் மண்டல பொறுப்பாளர் மவ்லவீ சுலைமான் மன்பஈ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பங்குத்தந்தை உரை:
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்ட தேவாலயத்தின் பங்குத்தந்தை சேவியர் ஜார்ஜ் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். காயல்பட்டினம் சமுதாயத் தலைமையுடன் எல்லா வகையிலும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்ற தாம் பெரிதும் விரும்புவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
பெருநாள் புத்தாடை வழங்கல்:
பின்னர், நோன்புப் பெருநாள் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இப்பள்ளிவாசலில் தீனிய்யாத் - மார்க்க அடிப்படைக் கல்வி பயிலும் 45 சிறுவர் - சிறுமியருக்கும், இப்பகுதியைச் சார்ந்த 11 விதவைப் பெண்களுக்கும், பருவமடைந்த பெண்கள் 16 பேருக்கும் பெருநாள் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
நகரப் பிரமுகர்கள் அனுசரணையில் தருவிக்கப்பட்டிருந்த இப்புத்தாடைகளை அரிமா துணை ஆளுநர் உபால்டுராஜ் மெக்கன்னா, நிகழ்ச்சித் தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் மற்றும் மேடையில் முன்னிலை வகித்தோர் தம் கரங்களால் வழங்கினர்.
நிறைவாக, பள்ளியின் அபிமானி ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நன்றி கூற, பள்ளி இமாம் அரபி அமானுல்லாஹ் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் அனைவருக்கும் கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், தேனீர் என பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டிருந்தன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைவர் ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலர் ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளர் கோமான் மீரான் ஆகியோர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம். |