தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சார்பில் 28.08.2011 அன்று நடத்தப்பட்ட அவசர பொதுக்குழுக் கூட்டத்தில், மர்ஹூம் வாவு சுலைமான் ஹாஜி அவர்களின் மனைவியார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமியற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள்:
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் அவசர பொதுக்குழுக் கூட்டம், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில், 28.08.2011 அன்று மதியம் 03.00 மணிக்கு நடைபெற்றது.
மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி அப்துல் கரீம் தலைமை தாங்கினார். ஹாஜி அப்துல் கஃப்ஃபார் முன்னிலை வகித்தார். தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வரவேற்புரை:
மன்ற உறுப்பினர் அப்துர்ரஷீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற துணைச் செயலாளர் ஹாஜி விளக்கு நூர் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்திற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் மற்றும் நோன்பு நோற்றதால் ஏற்பட்டுள்ள களைப்பையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் அவர் தனதுரையில் பாராட்டி வரவேற்றார்.
தலைமையுரை:
பின்னர் கூட்டத் தலைவர் தலைமையுரையாற்றினார். இதுவரை நடைபெற்றுள்ள கூட்டங்களில் இன்றைய கூட்டத்தில் தன்னைத் தலைமை தாங்க பணித்தமைக்கு நன்றி தெரிவித்தார். கருத்து வேறுபாடுகளைக் கடந்து மன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதை தனதுரையில் புகழ்ந்து பேசிய அவர், இறுதி வரை இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், சென்ற கூட்ட நடப்புகள் மற்றும் மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் எம்.ஹெச்.முஹம்மத் ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
மன்றம் சார்பில் இதுவரை நிதியுதவியளிக்கப்பட்டுள்ள அமைப்புகள் தனதுரையில் பட்டியலிட்ட அவர், உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு மன்றத்தால் செய்யப்பட்ட ஒத்துழைப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
மன்றப் பணிகள் அறிமுகவுரை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ விளக்கிப் பேசினார்.
சிங்கை கா.ந.மன்றத்திற்கு பாராட்டு...
சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஹாஃபிழ்களுக்கு ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதைப் புகழ்ந்துரைத்த அவர், அம்மன்றத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, தக்வா உள்ளிட்ட இதர மன்றங்களும் இதுபோன்று மார்க்கக் கல்விக்கும் ஊக்கமளிக்க வேண்டுமென தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
இமாம் - பிலால்களுக்கு வருடாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம்...
அத்துடன், தக்வா மன்றம் சார்பில், உலக காயல் நல மன்றங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பெருந்தொகையைத் திரட்டி, காயல்பட்டினத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் பிலால்களுக்கும் ஆண்டுதோறும் ரமழான் மாத இறுதியில் உதவித்தொகை வழங்க தக்வா மன்றம் முன்முயற்சி எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர் மன்ற உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. உறுப்பினர்கள் அபுல் மஆலீ, வாவு மொகுதூம் முஹம்மத், முஹம்மது அலீ உள்ளி்ட்ட உறுப்பினர்கள் இமாம், பிலால்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து மவ்லவீ ஷாதுலீ ஆலிம் சொன்ன கருத்தை வலியுறுத்திப் பேசினர்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலகின் அனைத்து காயல் நல மன்றங்களையும் தக்வா சார்பில் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்து அவர்களையும் ஒருங்கிணைத்து நிதி திரட்டி, அதை உரிய முறையில் வினியோகிப்பதற்காக தனியொரு குழு அமைத்து வினியோகிக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். வேறு சில உறுப்பினர்கள் இவ்வகைக்காக இக்ராஃவைப் பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
அதை மறுத்துப் பேசிய ஹாஜி விளக்கு நூர் முஹம்மத், இக்ராஃவை கல்வி சம்பந்தப்பட்ட உதவித் திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்துமாறும், எல்லா திட்டங்களையும் அதன் பொறுப்பில் சுமத்துவதால், அதன் முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுவதை தான் நேரில் கண்ணுற்றதாகவும் தெரிவித்து, இவ்வகைக்காக தனிக்குழு அமைத்தே செயல்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த உறுப்பினர் எம்.ஏ.ஸஈத், மன்றக் கூட்டம் நடைபெறுவது குறித்த அறிவிப்பை அனைத்து உறுப்பினர்களுக்கும் முற்கூட்டியே எஸ்.எம்.எஸ். மூலமும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, உறுப்பினர்கள் தமக்கிடையில் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமைப்பில் அதைக் காண்பிக்காமல் செயல்படுவது பாராட்டத்தக்கது என்றும், இந்நிலை தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து கருத்து தெரிவித்த உறுப்பினர் அலீ, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் மருத்துவர்கள், சிகிச்சைக் கருவிகள் ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறி, அக்குறைகளைப் போக்கிட ஆவன செய்யுமாறு மன்றத்தின் சார்பில், கே.எம்.டி. நிர்வாகத்தின் கவனத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல், பாதாள சாக்கடை திட்டம், 2ஆவது பைப்லைன் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
பின்னர், கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் சிறப்புரையாற்றினார். அவரது உரையின் உள்ளடக்கம் வருமாறு:-
காயல் நல மன்றங்களின் மகத்துவம்...
வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்கள் தமது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் இதுபோன்று மன்றங்களை அமைத்து, நகர்நலன் குறித்து சிந்திப்பது அசாதாரணமானது. பிற ஊர்களைச் சார்ந்த மக்களும் மனமுவந்து பாராட்டும் வகையில் நமது செயல்பாடுகள் இன்னும் மெருகேற்றப்பட வேண்டும்.
உள்ளூர் பிரதிநிதிக்கு துணைப் பொறுப்பாளர் நியமனம்...
மன்றப் பணிகளை நேரடியாக ஊரிலிருந்து கவனித்திடும் பொருட்டு, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியான ஹாஜி வாவு உவைஸ் அவர்களுக்குத் துணையாக மற்றொரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்.
தக்வாவின் தனிச்சிறப்பு...
உலக காயல் நல மன்றங்கள் அனைத்தும் அவரவர் தகுதியில் சிறப்புற செயல்பட்டு வருகிற போதிலும், ஒவ்வொரு மன்றத்தின் மீதும் அதிருப்தி கருத்துடன் ஒரு சில காயலர்கள் மன்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருக்கும் நிலையுள்ளது. ஆனால், தாய்லாந்து நாட்டில் வசிக்கும் காயலர்கள் அனைவரும் தக்வா அமைப்பில் உறுப்பினராக இருந்து, அவர்களுக்கு அமைப்பின் மீது சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமைப்பை விட்டும் ஒதுங்கிச் செல்லாமல் செயலாற்றுவது பாராட்டத்தக்கது.
மக்கள் தொடர்பில் கூடுதல் கவனமெடுத்தல்...
மக்கள் தொடர்பு விஷயத்தில் மன்றம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் எதுவும் பார்வையிடப்படுவதாகவே தெரியவில்லை. இக்குறையைப் போக்கும் விதமாக இக்கூட்டத்திலேயே புதிய மின்னஞ்சல் முகவரிகளை அறிவிக்க வேண்டும். மின்னஞ்சலை பரிசீலிக்க தனியொரு பொறுப்பாளரை மன்றத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக நியமிக்க வேண்டும்.
இக்ராஃவின் தலைமைப் பொறுப்பு...
இக்ராஃவின் அடுத்த தலைமையை தாய்லாந்து காயல் நல மன்ற தலைவர் ஏற்க வேண்டியிருப்பதால், இப்போதே அதற்காக ஆயத்தமாக வேண்டும். இக்ராஃவின் தலைமைப் பொறுப்பென்பது அலங்காரப் பொறுப்பல்ல. வெறுமனே தான் சார்ந்த மன்றத்தின் சார்பில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட ஒத்துழைப்புகளை செய்வதோடு நிறுத்திக்கொள்வதற்கல்ல. மாறாக, இக்ராஃவி்ன் அந்த ஆண்டுக்கான தேவைப்படும் கல்வி உதவித்தொகையை முழுமையாகத் திரட்டித் தரல்...
இக்ராஃவின் இதர நிர்வாகச் செலவினங்களில் குறையில்லாமல் கவனித்துக்கொள்ளல்...
இக்ராஃவால் ஆண்டுதோறும் நடத்தப்படும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியில் தலைமைப் பொறுப்பேற்று அதை குறையின்றி நடத்தித் தரல்...
உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் இக்ராஃ தலைமைப் பீடத்தில் உள்ளடக்கம்... அதற்காக அந்தந்த மன்ற தலைவர்கள் முற்கூட்டியே ஆயத்தமாகிக் கொள்ள வேண்டும்... அத்தலைவர்களுக்கு உறுதுணையாக மன்றங்களின் நிர்வாகிகள் துணைநிற்க வேண்டும்...
இக்ராஃவை காயல் நல மன்றங்கள்தான் நிர்வகிக்கின்றன. எனவே, காயல் நல மன்றம் வேறு, இக்ராஃ வேறு என்ற பார்வை மன்றங்களிடம் அறவே இருக்கக் கூடாது...
இக்ராஃவில் இருந்து பணி செய்ய ஊரிலுள்ளவர்கள் ஆர்வமாகவே உள்ளனர்... அப்பணிகளுக்குத் தேவைப்படும் நிதியையும் அவர்கள் மட்டுமே திரட்டித் தர வேண்டிய நிலை வரும்போது, அப்பணிகளில் ஈடுபடும் ஆர்வலர்களுக்கு சற்று ஆர்வக்குறைவு ஏற்படுவது வழமையாக இருக்கிறது. இக்குறையை, இக்ராஃவை சுழற்சி முறையில் நிர்வகிக்கும் மன்றங்கள் - குறிப்பாக அம்மன்றங்களின் தலைவர்கள் கவனத்தில் எடுத்து உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். இக்ராஃவின் தலைவராக இருப்பவர், இதர துணைத்தலைவர்களை இது விஷயத்தில் முன்னின்று ஒருங்கிணைத்து காரியமாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், நாம் அனைவரும் இணைந்து அழகிய முறையில் கல்விப் பணியாற்ற இயலும்.
இவ்வாறு ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் தனதுரையில் தெரிவித்தார்.
நிறைவாக, எம்.ஏ.ஸஈத் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பின்வரும் தீாமானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மர்ஹூம் வாவு சுலைமான் ஹாஜி மனைவி மறைவிற்கு இரங்கல்:
தக்வா மன்ற உறுப்பினர்களான ஹாஜி வாவு எம்.எஸ்.ஷாஹுல் ஹமீது, ஹாஜி வாவு எம்.எஸ்.ஜஃபருல்லாஹ் ஆகியோரின் தாயார் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் பாவப் பிழைபொறுப்பிற்காகவும், மறுமை நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - இமாம், பிலால்களுக்கு வருடாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம்:
நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கு ஆண்டுதோறும் ரமழானில் கனிசமான உதவித்தொகையை வழங்குவதற்காக திட்டம் ஒன்றை வகுத்து, இது விஷயத்தில் உலக காயல் நல மன்றங்களின் ஒத்துழைப்பை முறைப்படி கேட்டுப்பெற்று, அதனடிப்படையில் நிதி திரட்டி, வரும் ஆண்டு ரமழான் மாதத்திலிருந்து செயல்படுத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 – உள்ளூரில் கூடுதல் பிரதிநிதி நியமித்தல்:
மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்களுக்குத் துணையாக இருந்து பணியாற்றுவதற்காக மேலும் ஒரு துணைப் பொறுப்பாளரை விரைவில் அடையாளங்கண்டு நியமிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - தகவல் தொடர்பாளர் நியமனம்:
மன்றத்தின் மக்கள் தொடர்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள குறையைப் போக்கும் வகையில், மன்ற உறுப்பினர் ஃபியாஸ் அவர்களை மன்றத்தின் தகவல் தொடர்பாளராக இக்கூட்டம் நியமிக்கிறது.
மன்றத்தால் பெறப்படும் மின்னஞ்சல்கள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, அவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் மன்றத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கும் பொறுப்பு இன்று முதல் இவரிடம் கையளிக்கப்படுகிறது.
மன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தொடர்புகொள்ள விரும்புவோர், bangkok@kayal.org என்ற முகவரிக்கு தமது தகவல்களை அனுப்பி வைக்குமாறும், fiazidris@gmail.com, ktgemhouse@gmail.com, info@thainadu.com, mhsalih@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அதனை Cc செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீர்மானம் 5 - நகர ஜமாஅத்துகளின் ஜனநாயக அடிப்படையிலான வேட்பாளர் தேர்வு முறைக்கு ஆதரவு:
வரும் நகராட்சித் தேர்தலில், நகர்நலனைக் கருத்திற்கொண்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பொருட்டு, அந்தந்த வார்டுகளை உள்ளடக்கிய ஜமாஅத்துகள் கூட்டுக்கூட்டம் நடத்தி, ஜனநாயக அடிப்படையில் வார்டு வேட்பாளரைத் தேர்வு செய்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கவும், ஒருவேளை போட்டி ஏற்பட்டால், ஜமாஅத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவாக ஜமாஅத் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் நகரின் அனைத்து ஜமாஅத்துகளையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன், இக்கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையாக செயல்படும் அனைத்துக் குழுவினருக்கும் மன்றம் தார்மீக அடிப்படையில் ஒத்துழைப்பளிக்கும் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 - நகர்மன்றத் தலைவருக்கு பாராட்டு:
நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டுவதற்காக தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக அளித்துள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யிது அப்துர்ரஹ்மான் அவர்களை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.
தீர்மானம் 7 - நோன்புப் பெருநாள் வாழ்த்து:
எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அனைத்துலக காயலர்களுக்கும் தக்வா ‘ஈத் முபாரக்‘ எனும் தனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த இணைப்பில் சொடுக்கி, கூட்டத்தின் அனைத்து படங்களையும் தொகுப்பாகக் காணலாம்.
மேற்கண்டவாறு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
M.H.ஸாலிஹ்,
மற்றும்
M.H.அபுல் மஆலீ,
பாங்காக், தாய்லாந்து. |