சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி என்.டி.ஷேக் அப்துல் காதிர் இன்று நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 55.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் செயலர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (அன்றைய ரியாத் காஹிர் பைத்துல்மால்) முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி என்.டி.ஷேக் அப்துல் காதிர் அவர்கள் இன்று நள்ளிரவில், ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீயில் காலமான செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.
வயது வரம்புகள் என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல், அனைவரோடும் இன்முகத்துடன் பழகியவர் அவர்...
வாழ்நாள் முழுவதும் எளிமையையே கடைப்பிடித்தவர்...
ரியாத் காஹிர் பைத்துல்மாலின் துணைத்தலைவராக தாம் பொறுப்பேற்றிருந்த காலங்களில், நமதூர் காயல்பட்டினத்தில் பொருளாரத்தில் பின்தங்கிய பலரின் பல்வேறு தேவைகளுக்காக உடனுக்குடன் மன்றத்தால் உதவியளித்திடும் பொருட்டு, சந்தா நிலுவை வைத்திருந்த மன்ற உறுப்பினர்களை நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு, சந்தா தொகை செலுத்துவது குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தியவர்... அது மட்டுமின்றி, மன்றத்தால் நடத்தப்படும் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களிலும் இதுகுறித்து வலியுறுத்திப் பேச மறவாதவர்...
மன்றத்தின் நிதிநிலையை உயர்த்தி, நகர்நலப் பணிகள் பல ஆற்றிடும் பொருட்டு, ஜகாத் நிதி சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்திய வெகு சிலரில் ஒருவர்...
அவரது மறைவு, அவர் குடும்பத்திற்கு மட்டுமின்றி, நகர்நலப் பணிகளாற்றும் அனைவருக்கும் பேரிழப்பே என்றால் அது மிகையாகாது.
கிருபையுள்ள ரஹ்மான் அல்லாஹ், அன்னாரின் பாவப் பிழைகளைப் பொருத்து, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். மர்ஹூம் அவர்களின் உற்றார் - உறவினர் யாவருக்கும் எம் மன்றத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |