விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் நகர்மன்றத்திற்கான தம் பிரதிநிதிகளை தேர்வுசெய்வதற்கான வழிமுறைகள் குறித்து, நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளின் கத்தீப்கள் வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து, இதற்கான ஏற்பாடுகளைச் செய்த “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா)” சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!
அன்பிற்கினிய காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
வாக்காளர்கள் - சிறந்த நகர்மன்ற உறுப்பினர்களை எந்த தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்வது - என்று வழிகாட்டும் பிரசுரம் இன்று நகரில்இரு ஜும்ஆ பள்ளிகளிலும் - நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (MEGA) ஏற்பாட்டில் விநியோகிக்கப்பட்டது.
இதன் வாசகங்கள், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ ஆகியோரின் ஒப்புதல் பெற்று அமைக்கப்பட்டது.
தங்கள் வார்டுகளின் உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும், நகர்மன்ற தலைவரை/துணைத்தலைவரை அடையாளம் காண்பதில் - இன்ஷா அல்லாஹ் இந்தப் பிரசுரம் நகர மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.
இப்பிரசுரத்தில் அமைந்துள்ள வாசகங்கள் வருமாறு:-
உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களுக்கு நமதூர் ஜும்ஆ பள்ளிகளது கத்தீப்களின் வேண்டுகோள்!
அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உங்களிடம் ஆதரவு கேட்கும் வேட்பாளர் ...
----> இறையச்சம் உடையவரா...?
----> ஐவேளை தொழுகையை முறைப்படி பேணுபவரா...?
----> நற்பண்புகளைக் கொண்டவரா...?
----> பொருளாதாரத்தில் தன்னிறைவுடையவரா...?
(அதாவது, பொருளீட்டும் நோக்குடன் நகர்மன்ற பொறுப்பை நாடாதவரா ...?)
----> யாரையும் முழுமையாக சார்ந்திருக்காதவரா...?
----> அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்சாதவரா, அடிபணியாதவரா...?
----> மார்க்கத்தில் தடுக்கப்பட்ட வட்டி, விபச்சாரம், மது, சூது போன்ற பெரும்பாவங்களில் ஈடுபடாதவரா...?
----> கடந்த காலங்களில் பொறுப்பிலிருக்கையில் அரசாங்கப் பணத்தை சுரண்டாதவரா...?
----> கடந்த காலங்களில் பொறுப்பிலிருக்கையில் லஞ்சம் வாங்காதவரா...?
----> சுயநலன் பாராது பொது விஷயங்களில் ஈடுபடுபவரா...?
இவற்றை நல்ல முறையில் அவதானித்து, தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, நல்லோர் நிறைந்த நகர்மன்றத்தை உருவாக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்களுடைய மேலான பார்வைக்காக பிரசுரத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு “மெகா” செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |