அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் தொகுதிப் படி ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:
சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று இப்போது வழங்கப்படும் தொகுதிப்படி ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்படும். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் மொத்த மாதச் சம்பளம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 55 ஆயிரமாக உயரும்.
அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர், எதிர்க் கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் தொகுதிப்படி ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்படும். இதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவரின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் ரூ. 27 ஆயிரத்திலிருந்து ரூ. 32 ஆயிரமாகவும், பேரவை துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோரின் மொத்த மாதச் சம்பளம் மற்றும் படிகள் ரூ. 26,500-லிருந்து ரூ. 31,500 ஆகவும் உயரும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1.41 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2.40 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையின் மறைந்த முன்னாள் உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 46.76 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். படிகள் மற்றும் ஓய்வூதியத் தொகை உயர்வினால் மொத்தமாக ஓராண்டுக்கு ரூ. 4.29 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
இந்த உயர்வு 1-9-2011 முதல் வழங்கப்படும்.
இவ்வாறு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
தகவல்:
தினமணி
|