சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் 09.09.2011 அன்று நடைபெற்ற செயற்குழுவில் அதன் உள்ளூர் பிரதிநிதியாக கே.எம்.டி.சுலைமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 09.09.2011 அன்று 19.45 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
எஸ்.டி.செய்யது முஹைதீன் கிராஅத் ஒதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் துவக்கமாக நன்றி தெரிவித்தார்.
புது காயலர் அறிமுகம்:
பின்னர் சிங்கப்பூருக்கு வேலை நாடி வந்துள்ள சகோதரர் அஹ்மத் மூஸா மன்றத் தலைவரால் வரவேற்கப்பட்டு, அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டார். அவரது கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திட இயன்றளவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து உறுப்பினர்களையும் மன்றத் தலைவர் கேட்டுகொண்டார்.
செயலர் அறிக்கை:
மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து கூட்டத்தில் விளக்கிப் பேசினார். மேலும் மன்றத்தால் அங்கீகரிக்கபட்ட அணைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இக்ராஃ கல்விச் சங்கம் மூலமாக குறித்த நேரத்தில் நிதி சென்றடைந்ததாக தெரிவித்தார்.
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
ரமழான் ஜகாத் நிதி:
கடந்த ரமழான் மாதத்தில் மன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட ஜகாத் தொகை விபரங்கள் குறித்து உறுப்பினர் முஹம்மத் உமர் ரப்பானீ கூட்டத்தில் தகவலளித்தார். தாராளமாக ஜகாத் தொகை அளித்த மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்றத்தலைவர் நன்றி தெரிவித்தார்.
உள்ளூர் பிரதிநிதி நியமனம்:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அதிகாரப்பூர்வ உள்ளூர் பிரதிநிதியாக சகோதரர் கே.எம்.டி. சுலைமான் அவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டார். இவர் 09-09-2011 முதல் 31-12-2012 வரையுள்ள பருவத்திற்கு உள்ளூர் பிரதிநிதியாக செயல்படுவார்.
இக்ராஃவுக்கு நன்றி:
இதுநாள் வரை சிங்கப்பூர் காயல் நலமன்றத்தின் அணைத்து திட்டங்களையும் ஊரில் செயல்படுத்திவந்த இக்ராஃ கல்விச் சங்கதிற்கு மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஹாஃபிழ்களுக்கான ஊக்கத்தொகை செயலாக்கம்:
சென்ற செயற்குழுக் கூட்டதில் அறிவிக்கப்பட்ட ஹாபிழ்களுக்கான ஊக்கத்தொகை திட்டம் ஹிஜ்ரீ 1432 ஷவ்வால் மாதம் (நடப்பு மாதம்) துவங்கவுள்ள கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுமெனவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதம் அனைத்து மத்ரஸாக்களுக்கும் உள்ளூர் பிரதிநிதி மூலம் அனுப்பப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
மனிதாபிமான உதவிகள்:
வீடு பழுது நீக்கதிற்காக உதவும் திட்டம் உள்ளூர் பிரதிநிதி மூலம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக துரிதமாக செயல்பட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்றத்தலைவர் நன்றி தெரிவித்தார்.
மருத்துவ உதவி கோரி நகரிலிருந்து பெறப்பட்ட 2 மனுக்கள் குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் எனவும், நிலுவையிலுள்ள இதர மனுக்கள் வரும் அக்டோபர் மாதம் பரிசீலிக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உண்டியல் திறப்பு:
நகர்நலனுக்காக உண்டியல் மூலம் மன்றத்தால் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த உண்டியல் திறப்பு வரும் நவம்பர் மாதம் 07ஆம் தேதி நடைபெறும் என்றும், அனைத்து உறுப்பினர்களும் தமது உண்டியல்களை வெற்றிடமின்றி எடுத்து வருமாறும் கேட்டுகொள்ளபட்டது.
சிங்கையில் பொதுப்பணி:
ஒவ்வோர் ஆண்டும் சிங்கபூரிலுள்ள சமூக அமைப்புகளுடன் இணைந்து நல உதவிகள் செய்துவரும் நமது நலமன்றம் இந்தவருடம் Jamiyah Orphanage – DARUL MA’WA என்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தில் நடத்துவதன தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்த மேலதிக விவரம் வரும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
ஆசிய கா.ந.மன்றங்களின் நகர்நல கூட்டு செயல்திட்டம்:
வருங்காலங்களில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) ஆகிய ஆசிய காயல் நல மன்றங்களுடன் இணைந்து நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து, அவ்வமைப்புகளுக்கு முழு விபரங்களுடன் கூடிய வேண்டுகோள் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்து, அவர்களின் இசைவைக் கேட்டறிவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தக்வாவின் இமாம்-பிலால்களுக்கான ரமழான் உதவித் திட்டத்திற்கு வரவேற்பு:
தக்வா தாய்லாந்து (THAKWA – Thailand) காயல் நல மன்றத்தால் முன்மொழியப்பட்ட, நகர பள்ளிகளின் இமாம் – பிலால்களுக்கு வருடாந்திர ரமழான் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் காயல் நல மன்றம் வரவேற்கிறது. இதுகுறித்து வருகிற பொதுக்குழுவில் விவாதித்து இறுதி முடிவு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி வரும் அக்டோபர் 01 மற்றும் 02 தேதிகளில் சிங்கப்பூர் Changi Beach பகுதியிலுள்ள Fairy Point Chalet என்ற இடத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அங்கு இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த முழு விவரம் கூட்டம் நடைபெறும் தினத்திற்கு ஒரு வாரம் முன்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்தியாவசிய சமையல் பொருட்களுதவித் திட்டம்:
காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய, உழைக்கவியலாத, ஆதரவற்ற மக்களுக்காக மன்றத்தால் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய சமையல் பொருட்கள் (Groceries for Needy Kayalites - GNK) இந்த வருடமும் ரமழான் மாதத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது என்றும் மொத்தம் 40 குடும்பங்கள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கருத்தரங்கில் பங்கேற்க வேண்டுகோள்:
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க சிங்கப்பூர் கிளை சார்பில் 18-09-2011 அன்று Seminar on Effective Communication Skills என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற இருப்பதாகவும், அதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பயனடையுமாரும் கேட்டுகொள்ளபட்டது.
இலச்சினை குறித்த இறுதி முடிவு:
சிங்கப்பூர் காயல் நல மன்றதின் இலச்சினை (Logo) குறித்து மன்றத் தலைவர் ஆய்வுக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
மார்க்க அறிஞரின் சிற்றுரை:
பின்னர், தர்மம் செய்வதின் அவசியம் குறித்து சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ சிற்றுரையாற்றினார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
அதனைத் தொடர்ந்து, நகர்நலப் பணிகள் குறித்து செயற்குழு உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. நிறைவாக, விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், உறுப்பினர் எஸ்.டி.சூஃபீ ஹுஸைன் துஆவுடன் 21.45 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
சிறப்பு அழைப்பாளர்கள்:
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், ஹாங்காங் முஹம்மத் அலீ, காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி ‘அமைப்பு‘ ஷம்சுத்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
உமர் ரப்பானீ,
சிங்கப்பூர். |