விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகள் நகர பொதுநல அமைப்புகளாலும், பள்ளிவாசல்களாலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளிவாசல் மஹல்லாவையும் உள்ளடக்கிய 07, 08, 09 ஆகிய வார்டுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது குறித்து கலந்தாலோசிப்பதற்காக பள்ளியின் பொதுக்குழுக் கூட்டம் 15.09.2011 அன்று (நேற்று) இரவு இஷா தொழுகைக்குப் பின் 08.30 மணிக்கு துவங்கியது.
பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ ஈ.எஸ்.புகாரீ ஆலிம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்தின் நோக்கம் குறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் விளக்கிப் பேசினார்.
பின்னர், குருவித்துறைப் பள்ளிவாசல் மஹல்லாவையும் உள்ளடக்கிய 07, 08, 09ஆம் வார்டுகளில் உறுப்பினர்களை ஏகமனதாகத் தேர்வு செய்வது குறித்த கலந்தாலோசனை துவங்கியது. அதன் முதற்கட்டமாக, 07ஆம் வார்டில் போட்டியிடுவதற்காக 12 பேரும், எட்டாம் வார்டில் போட்டியிடுவதற்காக ஒருவரும், 09ஆம் வார்டில் போட்டியிடுவதற்காக இருவரும் பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பியிருந்த விருப்ப மனுக்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கைப் படிவம்:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் பள்ளிக்கு அனுப்பப்பட்டிருந்த - நகர பள்ளி ஜமாஅத்துகளின் சார்பில் முன்னிறுத்தப்படும் உறுப்பினர்களிடமிருந்து பெற வேண்டிய உறுதிமொழி அடங்கிய முச்செரிக்கைப் படிவம் இக்கூட்டத்தில் படித்துக் காண்பிக்கப்பட்டது.
கோமான் ஜமாஅத்தின் கடிதம்:
அதுபோல, அண்மையில் காயல்பட்டினம் கோமான் ஜமாஅத் மொட்டையார் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியின் 01ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினரை முன்னிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைப் பதிவுகளை உள்ளடக்கி, நகரின் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்த விபரங்கள் இக்கூட்டத்தில் படித்துக் காண்பிக்கப்பட்டது.
ரெட் ஸ்டார் சங்க கடிதம்:
காயல்பட்டினம் 08 மற்றும் 09ஆம் வார்டுகளில் கூட்டுத் தொடர்புள்ள அப்பா பள்ளி, மரைக்கார் பள்ளி மற்றும் குருவித்துறைப் பள்ளி ஜமாஅத்துகளிலிருந்து மேற்படி இரு வார்டுகளுக்கும் ஏகமனதாக உறுப்பினர்களைத் தேர்வு செய்திடுவதற்காக அப்பாபள்ளி, மரைக்கார் பள்ளி மற்றும் ரெட் ஸ்டார் சங்க நிர்வாகங்களால் அனுப்பப்பட்டிருந்த ஒத்துழைப்பு கோரும் கடிதம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
இறுதியில் பின்வருமாறு முடிவுகள் ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டன:-
(அ) குருவித்துறைப் பள்ளி மஹல்லாவை உள்ளடக்கிய 07, 08 மற்றும் 09 ஆகிய வார்டுகளில் போட்டியிட விரும்புவோர் 20.09.2011 அன்று இஷா தொழுகைக்கு முன் தமது விருப்ப மனுக்களை பள்ளி செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
(ஆ) மேற்படி மனுக்களை பரிசீலிக்கவும், அப்பாபள்ளி, மரைக்கார் பள்ளி மற்றும் ரெட் ஸ்டார் சங்க நிர்வாகங்களின் சார்பில் வரும் தூதுக்குழுவுடன் பேசி, ஒருமனதாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,
(1) ஹாஜி பிரபு சுல்தான்
(2) ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத்
(3) ஹாஜி யூஸுஃப் ஸாஹிப்
(4) ஹாஜி கே.எஸ்.மொகுதூம் முஹம்மத்
(5) மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ
(6) ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத்
(7) ஹாஜி சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா
(8) ஹாஜி ‘முத்துச்சுடர்‘ என்.டி.இஸ்ஹாக் லெப்பை
(9) ஹாஜி என்.டி.ஷேக் சுலைமான்
ஆகியோரடங்கிய 9 பேர் குழு நியமிக்கப்பட்டது.
ஐக்கியப் பேரவை தீர்மானங்கள்:
பின்னர், கடந்த 08.09.2011 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நடத்தப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மடலை உள்ளடக்கியும், அனைத்து ஜமாஅத்துகளிலிருந்தும் இரண்டு பிரதிநிதிகளைக் கேட்டும், ஐக்கியப் பேரவையால் அனுப்பி வைக்கப்பட்ட விபரங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கம் கோரப்பட்டது.
ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகியோர் குருவித்துறைப் பள்ளி சார்பாகவும், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டி.எம்., இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பாகவும் பிரதிநிதிகளாக செல்வர் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ஐக்கியப் பேரவை தீர்மானங்களில் 4ஆவது தீர்மானம் குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. பின்னர், இனி வருங்காலங்களில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நடத்தப்படும் கூட்டங்களில் குருவித்துறைப் பள்ளி சார்பில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள், அங்கு தெரிவிக்கப்படும் கருத்துக்களைப் பெற்று, பின்னர் பள்ளி நிர்வாகத்தால் கூட்டப்படும் பொதுக்குழுவில் கலந்தாலோசித்து எடுக்கப்படும் முடிவுகளையே தெரிவிப்பர் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக, மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. |