எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
நடைபெறவுள்ள காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில், தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்வு சுமுகமாகவும், அனைவரும்
ஏற்கும்படியாகவும் நடைபெற வேண்டியது அவசியமாகும்.
இத்தேர்தலை உரிய முறையில் சந்திக்க வழிவகை காண வேண்டுமென. நகர்நலன் விரும்புவோர் விடுத்த வேண்டுகோளை
ஏற்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை இதுவரி இத்தேர்தல் சம்பந்தமாக பல முக்கிய நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
துவக்கமாக நகரின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
நடைபெறவிருக்கும் நகராட்சித் தேர்தலில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு போட்டியிட விரும்புவோர் கட்சி
சின்னங்களில் போட்டியிடாமல், பொது வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென பேரவை
வேண்டுகோள் விடுத்தது. இதை உளமார ஏற்றுக் கையெழுத்திட்ட அரசியல் கட்சியினருக்கு உள்ளார்ந்த நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தேர்த்தலுக்கெனத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட நகராட்சித் தேர்தல் ஒருங்கிணைப்புக்
குழுவினர் நமது வேண்டகோளை ஏற்று, ஒத்துழைப்பு தர முன்வந்ததற்க்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
பேரவை 08-09-2011 அன்று ஜலாலிய்யாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்று 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் தந்த
அணைத்த ஜமாஅத் மற்றும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
தீர்மானங்களை வரவேற்று, ஆதரித்துள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் காயல் வாசிகளுக்கும் இதயமார்ந்த
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், வார்டுகளின் வேட்பாளராக நிற்க விரும்புவோர்
ஜமாஅத்துகளுக்கும், தலைவராக நிற்க விரும்புவோர் பேரவைக்கும் விருப்ப மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென
கேட்டுகொள்கிறோம். மேலும் தலைவர் மற்றும் உறுப்பினர் பொறுப்புகளுக்கு பொதுமக்களால் விரும்பப்படும் நபர்களின்
பெயர்களையும் குறிப்பிட்டு, சிபாரிசு செய்யப்படும் மனுக்களை அனுப்பலாமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவரைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழு சம்பந்தமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்
ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் உரிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து விரைவில் பேரவைக்குத் தகவல்
தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு பேரவையால்
ஏற்கனவே கடிதம் மூலம் தகவல் தரப்பட்டுள்ளது.
மேலும் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில், உறுப்பினர் மற்றும் தலைவர் பொறுப்புக்கு விருப்ப மனுத் தாக்கல் செய்வோர், தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் இடம் பெறக் கூடாது என கேட்டு கொள்கிறோம்.
பொருத்தமான வார்டு வேட்பாளர்களை ஜமாஅத்துக்கள் தேர்வு செய்ய வேண்டுமெனவும், தலைவர் தேர்வு சிறப்புடன் அமைய அனைவரும் ஒத்துழைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
நகராட்சித் தலைவராக தேர்வு பெற விரும்புவோரும், தகுதியானவர்களை நகராட்சித் தலைவராக சிபாரிசு செய்ய விரும்புவோரும் உரிய மனுக்களை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு 22-09-2011க்குள் அனுப்பித்தருமாறு கேட்டு கொள்கிறோம்.
நமது நியாயமான உரிமைகளுக்கு இழப்பு ஏற்படாமலும், நமது ஐக்கியம் நிலைபெறவும், நமது சகோதர சமுதாயத்தினரிடையே நல்லிணக்கம் பேணிப் பாதுக்காக்கபடவும் இத்தேர்தலை மிக கவனமாகக் கையாள வேண்டுகிறோம்.
தூர நோக்கோடும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும் இத்தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே நாம் உரிய இலக்கை அடைய முடியும். இத்தேர்தலில் வேட்பாளராக நிற்க விரும்புவோரும், அவர்களை ஆதரிப்போரும் இதை மனதில் கொள்ள வேண்டுகிறோம்.
அனைத்து ஜமாஅத்துக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் நகர பிரமுகர்களால் முறையாக தேர்வு செய்யப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர் வேட்பாளர்களை நகராட்சிக்கு அனுப்புவோம்.
உள்நோக்கம் ஏதுமின்றி, நகர் நலனை மட்டுமே முன்னிறித்தி, தூய நோக்கோடு மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்கு ஆதரவு வழங்குவோம். கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஓர் அணியில் ஒன்றுபடுவோம். இளைஞர்களின் ஒத்துழைப்பும், மூத்தவர்களின் ஆலோசனையும் இணைந்து இத்தேர்தலில் நன்மைகள் மலர உறுதி ஏற்போம். வல்ல இறைவன் நமது நன்நோக்கங்கள் நிறைவேற அருள் புரின்வானாக! ஆமீன்.
வஸ்ஸலாம்,
இவண்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை,
௦60/118 கே.டி.எம். தெரு,
காயல்பட்டினம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல் எஸ்.ஈ. அமானுல்லாஹ் |