எதிர்வரும் நகர்மன்ற தேர்தலில் - தலைவரை தேர்வு செய்யும் விஷயமாக, தேர்தல் குழு ஒன்று அமைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை முடிவுசெய்துள்ளது. ஜமாஅத்துகளுக்கு தலா இரு பிரதிநிதிகள் என்றும், பொதுநல அமைப்புகளுக்கு தலா ஒரு பிரதிநிதி என்றும், ஐக்கியப் பேரவை தேர்வு மூலம் 25 பிரதிநிதிகள் என்றும் அக்குழுவில் அங்கம்வகிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து - ஐக்கியப் பேரவை சார்பாக நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், பல சமூக அமைப்புகளுக்கும் - செப்டம்பர் 10 தேதியிட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் - ஐக்கியப்பேரவை அமைக்கும் தேர்தல் குழுவிற்கு பிரதிநிதிகளின் பெயரினை அனுப்பும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
அக்கடிதத்திற்கு - மரைக்கார்பள்ளி, அப்பாப்பள்ளி, குட்டியார் பள்ளி மற்றும் ரெட் ஸ்டார் சங்கம் நிர்வாகங்கள் சார்பாக பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
10.09.2011 தேதியிட்ட தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றோம். நன்றி. எமது ஜமாஅத் சார்பாக எடுக்கப்பட்ட சில முடிவுகளை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
(1) எமது ஜமாஅத் மற்றும் சங்கத்தின் சார்பாக தேர்வு செய்யும் நபர்கள் குறித்த விவரத்தினை இன்னும் ஓரிரு நாளில் தங்களுக்கு அறியத் தருகிறோம்.
(2) செப்டம்பர் மாதம் 03 - ம் தேதி நடைபெற்ற எமது ஜமாஅத்தின் கூட்டத்தில் ஊர் தலைவரைத் தேர்வு செய்வது சம்பந்தமாய் போடப்பட்ட தீர்மானம் எண் - 6 கூறுவதாவது, நகர்மன்ற தலைவர் தேர்வு விசயத்தில் அனைத்து ஜமாஅத்தினரும் முறையாகக் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அனைத்து ஜமாஅத்தினருக்கும் தெரிவிக்க வேண்டும். அதற்காக அனைத்து ஜமாஅத் தலைவர்கள் கூட்டத்தினை ஏற்பாடு செய்யவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இக்கருத்தினை ஒத்து ஐக்கிய பேரவை கடந்த 08.09.11 ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நடத்திய அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். ஆனால் அக்கூட்டத்தில் எந்த விதமான ஆலோசனைகளையும் யாரிடமும் கேட்காமல் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தீர்மானங்கள் படிக்கப்பட்டன. அப்போது கூட அவை தீர்மான முன்வடிவுகள் தான் எனவும், அவை அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் கருத்துக்கள், மாற்றங்கள் இருப்பின் அனைத்தும் சேர்க்கப்பட்டு அல்லது மாற்றங்கள் செய்யப்பட பின்தான் அவை தீர்மானங்களாக அங்கீகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வந்தக்கடிதத்தில் அவை தீர்மானங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(3) கடந்த 08.09.11 அன்று நடைபெற்ற கூட்டத்தின் 4 - வது தீர்மானம், ஒவ்வொரு ஜமாஅத்திலும் தலைவர், மற்றும் உதவி தலைவர் அல்லது ஜமாஅத்தின் அனுமதிப் பெற்ற இருவர் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பாக ஒருவர், மேலும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் தேர்வு செய்யப்படும் நகர பிரமுகர்கள் 25 பேர் ஆகியோர் கொண்டத் தேர்வுக்குழு அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கூறுகிறது.
ஆனால் அறிவிக்கப்பட்டது போல் 26 ஜமாஅத்துக்கள் சார்பாக 52 பேர் மற்றும் 15 பொது நல சங்கங்கள் சார்பாக 15 நபர் ஆக 67 பேர் ஊர் மக்களின் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டப்பிறகும் 25 நபர்கள் பேரவை சார்பாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது எங்கள் ஜமாஅத்தினருக்கு உடன்பாடானதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவ்வாறு 25 நபர்கள் தேர்வு என்பது எந்த தேவையின் அடிப்படையில் என்பதும் அதற்கு என்ன அவசியம் என்பதும் எங்களுக்குப்புரியவில்லை.
வேண்டுமானால் அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவது போல், ஐக்கியப் பேரவை சார்பாகவும், அதன் நிர்வாகிகளில் இருந்து 5 பேர்கள் அதிகப்பட்சமாக தேர்வு செய்யலாம் என்பது எங்கள் நிலைப்பாடு.
எனவே 25 நபர்களை தன்னிச்சையாக தேர்வு செய்வதால் ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கும் பொறுட்டும், தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் முழுக்க, முழுக்க அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள் தான் என்ற உயரிய ஜனநாயக மரபினை போற்றும் விதமாகவும் தாங்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வீர்கள் என முழுமையாக நம்புகிறோம்.
இன்ஷா அல்லாஹ், அனைத்துத் தரப்பு மக்களோடும் பாகுபாடு இன்றி பழகக்கூடிய, பொது நலம் பேணக்கூடிய, மார்க்கப்பற்றுடைய, நாணயமிக்க, எளிமையான ஒரு நல்ல மனிதரை பாரபட்சமற்ற முறையில் நம் ஊர் தலைவராக தேர்வு செய்ய தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு எங்கள் முழு ஒத்துழைப்பு உண்டு என்று உறுதி கூறி முடிக்கிறோம்.
வஸ்ஸலாம்.
இவண்,
ஹாஜி S. மூஸா
தலைவர், மரைக்கார்பள்ளி
ஹாஜி M.S.K.S. மரைக்கார்
தலைவர், அப்பாபள்ளி
ஹாஜி M. சேகு அப்துல் காதர்
தலைவர், ரெட் ஸ்டார் சங்கம்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ். அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு. |