எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் சம்பந்தமாக காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப்பேரவை ஏற்பாட்டில் செப்டம்பர் 8 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 4 - குறித்து கேள்விகள் பலரால் எழுப்பப்பட்டன. தேர்வுக்குழுவில் இடம்பெறும், ஐக்கியப்பேரவையினால் தேர்வுசெய்யப்படவுள்ள 25 பிரமுகர்களுக்கு, வாக்களிக்கும் உரிமை கிடையாது என ஐக்கியப் பேரவை சார்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் முழு விபரம் வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!
நடைபெறவுள்ள காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலை முன்னிட்டு 08.09.2011 அன்று ஜலாலிய்யாவில் பேரவையால் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்புக்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் தலைவர் தேர்வுக் குழு பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில், தலைவரைத் தேர்வுசெய்யும் குழுவில், ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புக்களின் பிரநிதிகளோடு ஐக்கியப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படும் 25 நகரப் பிரமுகர்களும் இடம் பெறுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தலைவர் தேர்வுக் குழு தீர்மானம் குறித்து அவசியப்பட்டால் பரிசீலித்து, பின்னர் விளக்கமாக அறிவிக்கப்படும் எனவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
25 நகரப்பிரமுகர்கள் தலைவர் தேர்வில் வாக்களிப்பார்கள் என்று பேரவையிடம் ஊர்ஜிதம் செய்யாத ஒரு செய்தி வெளியானதால், சிலர் இத்தீர்மானம் குறித்து சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
நகரப்பிரமுகர்கள் 25 நபர்கள் உட்பட, அக்குழுவில் பங்கேற்கும் அனைவருமே சுமூகமான முறையில் தகுதியான தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமென்பதே பேரவையின் விருப்பமாகும். இது சம்பந்தமான விளக்கங்களை ஜலாலிய்யாவில் நேரடியாகவும், இணையதளம் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் பேரவையால் சொல்லப்பட்டுள்ளது.
இத்தேர்தல் பணியில் ஐக்கியப் பேரவைக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் கீழ்கண்ட முடிவை ஊர்மக்களுக்கு பேரவைத் தெளிவாகத் தெரிவிக்கிறது.
தலைவர் தேர்வுக் குழு சம்பந்தமான தீர்மானத்தின் தெளிவான இறுதி விளக்கம்:
தலைவராகத் தேர்வு பெற வேண்டி அளிக்கப்படும் விருப்ப மனு மற்றும் சிபாரிசு மனுக்களை பரிசீலித்து, ஏக மனதாக தகுதியான தலைவரைப் பரிந்துரை செய்ய கீழ்கண்டபடி தேர்வுக் குழு அமையும்.
ஒவ்வொரு ஜமாஅத்தின் சார்பில் இரண்டு பிரதிநிதிகளும், பொதுநல அமைப்பு ஒவ்வொன்றிலிருந்து ஒரு பிரதிநிதியும், பேரவையால் தேர்வு செய்யப்படும் 25 நகரப் பிரமுகர்களும் இக்குழுவில் இடம் பெறுவர்.
இக்குழுவினர் மனுக்களை பரிசீலித்து ஏகமனதாக ஒருவரைத் தேர்வு செய்வர். வாக்களிப்பதன் மூலமே தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மேற்குறிப்பிட்ட 25 நகரப் பிரமுகர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள்.
ஜமாஅத்துக்கள் மற்றும் பொது நல அமைப்புக்களிலிருந்து தலைவர் தேர்வுக் குழுவில் இடம் பெற வாய்ப்பில்லாத, பொது வாழ்க்கையோடு தொடர்புடைய, அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதே இக்குழுவில் நகரப் பிரமுகர்களை இடம் பெறச் செய்வதன் நோக்கமாகும்.
எனவே மேற்கண்ட விளக்கத்தை ஏற்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன் இத்தேர்தலை சந்திப்போம். எல்லாம் வல்ல இறைவன் நமது நன்நோக்கங்கள் நிறைவேற அருள்புரிவானாக! ஆமீன்.
வஸ்ஸலாம்.
இவண்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை,
60/118, KTM தெரு,
காயல்பட்டினம்.
தேதி: 17.09.2011
தொலைபேசி: 04639- 285200
மின் அஞ்சல்: kayalpatnamperavai@gmail.com
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல் S.E. அமானுல்லாஹ்
|