எதிர்வரும் நகர்மன்ற தேர்தலில் - தலைவரை தேர்வு செய்யும் விஷயமாக, தேர்தல் குழு ஒன்று அமைக்க
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை முடிவுசெய்துள்ளது. ஜமாஅத்துகளுக்கு தலா இரு பிரதிநிதிகள் என்றும்,
பொதுநல அமைப்புகளுக்கு தலா ஒரு பிரதிநிதி என்றும், ஐக்கியப் பேரவை தேர்வு மூலம் 25 பிரதிநிதிகள் என்றும்
அக்குழுவில் அங்கம்வகிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து - ஐக்கியப் பேரவை சார்பாக நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், பல சமூக அமைப்புகளுக்கும்
-செப்டம்பர் 10 தேதியிட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் - ஐக்கியப்பேரவை அமைக்கும் தேர்தல் குழுவிற்கு
பிரதிநிதிகளின் பெயரினை அனுப்பும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
அக்கடிதத்திற்கு - நகரின் பொது நல அமைப்புகளில் ஒன்றான காயல்பட்டினம் நல அறக்கட்டளை (Kayalpatnam Welfare Trust - KWT) பதில் அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நமதூர் நகராட்சி சம்பந்தமாக கடந்த 08.09.2011 அன்று ஜலாலிய்யா நிக்காஹ் மண்டபத்தில் தங்கள் அமைப்பால் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு, எங்கள் அமைப்பும் இடம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அழைத்தமைக்கு எங்கள் அமைப்பின் சார்பாக நன்றியினை முதற்கண் தெரிவித்து கொள்கிறோம்.
எங்கள் காயல்பட்டணம் நல அறக்கட்டளை அமைப்பு உதயமாகி சில மாதங்களே ஆனாலும் அதனுடைய அசுரவேக சமூகப்பணியால் ஈர்க்கப்பட்டு தங்கள் அமைப்பு எண்களின் அமைப்புக்கு ஆதரவுகரம் ஏந்தி, அங்கீகாரம் தந்த பெருந்தன்மையை பாராட்டுகிறோம்.
கடந்த 08.09.2011 அன்று ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஆலோசனை கூட்டம் என்று கூட்டப்பட்டு, தங்கள் அமைப்பின் தீர்மான முன்வடிவம் என்று பெயர் மாற்றம் பெற்று பல தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, முடிவில் இதுதான் தீர்மானம் என்று முடிவெடுத்தாகி விட்டது என்ற செய்தியை தெரிவிக்கும் விதமாக தீர்மான நகலை 10.09.2011 தேதியிட்ட கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளீர்கள்.
உங்கள் 10.09.2011 தேதியிட்ட கடிதத்திற்கு பதில் அளிக்கும் முகமாக எங்கள் அமைப்பின் சார்பாக ஒரு சில கருத்துக்களை கூற விரும்புகிறோம்.
1. 08.09.2011 அன்று ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அழைக்கப்பட்டோம். ஆனால் அன்று ஆலோசனை கூட்டமே நடைபெறவில்லை
2. எங்கள் அமைப்பின் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்கள் அமைப்பின் கொள்கை முடிவை தீர்மானிக்கக் கூடிய முழு அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. எங்கள் அமைப்பின் பிரதிநிதிகள்தான் கலந்து கொண்டார்கள்
3. உங்கள் அமைப்பின் தீர்மானத்தில் நல்ல கருத்தொற்றுமை நிறைந்திருந்தாலும், தீர்மான எண் 4 - இல் குறிப்பிடும் செய்தியாகிய ஐக்கியப் பேரவை அடையாளம் காட்டும் 25 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கருத்தை எங்கள் அமைப்பு இம்மியளவும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில், ஐக்கிய பேரவை நான்கு உறுப்பினர்களை அனைத்து, ஜமாஅத்துகள், அனைத்து அமைப்புகள் அடங்கிய கூட்டுக் குழுவின் சம்மதத்தோடு தேர்வு செய்யலாம் என்ற யோசனையை எங்கள் காயல்பட்டணம் நல அறக்கட்டளையின் கருத்தாகத் தெரிவிக்கிறோம்
ஆகவே எங்கள் அமைப்பின் கருத்துக்களுடன், பல ஜமாஅத்து மற்றும் பல அமைப்பு ஆகியோர்களின் கருத்துகளுக்கேற்ப, அனைவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஒரு கருத்தொற்றுமையை தீர்மானமாக வடிவமைத்து எங்களுக்கு தெரிவித்தால், அதை எங்கள் அமைப்பு பரிசீலித்து, அத்துனை அங்கத்தினர்களின் ஒட்டுமொத ஒருங்கிணைந்த முடிவு எதுவோ, அதையே எண்களின் இறுதி முடிவாக அறிவிக்க இருக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
எது எப்படி இருந்தாலும், எவரவர் எந்தெந்த கோணத்தில் சிந்தித்தாலும், எதிர்காலத்தில் ஒரு நேர்மையான, தூய்மையான நகராட்சி அமைத்திட, நாம் அனைவரும் உள்ளத் தூய்மையாக பணியாற்றிட வேண்டும் என்று வெள்ளை உள்ளதோடு உளமார வேண்டுகிறோம்! நீதியுடைய நடுநிலையாளர்களுக்கு அல்லாஹ் எப்பொழுதும் துணை புரிவான். ஆமீன் வஸ்ஸலாம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முஹம்மது ஆதம் சுல்தான்,
பொது செயலாளர், காயல்பட்டணம் நல அறக்கட்டளை. |