காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சார்ந்தவர் சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஆபரணத் தங்க வணிகம் செய்து வருகிறார். மலபார் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினரான இவருக்கு, பயன்தரத்தக்க பல முயற்சிகளை செலவைக் கருத்திற்கொள்ளாமல் செய்து முடிப்பதில் தனியார்வம் உண்டு.
கொச்சியார் தெரு கீழ்ப்பகுதியில் பெரிய அளவில் நிலம் வாங்கி, அவ்விடத்தில் தென்னை விவசாயத்தை நவீன முறையில் செய்ய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் செய்த முயற்சிகள், அப்பகுதி நிலத்தடி நீர் கடல் நீரைப் போல உப்பாக இருந்ததால் பயனற்றுப் போனது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சந்தையில் புதிதாக அறிமுகமான நவீன அலுமினிய தகடு கொண்டு கொச்சியார் தெருவிலுள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் மேற்கூரை அமைத்துள்ளார். சாதாரண தகடுகளை விட நான்கு மடங்கு செலவு கொண்ட இத்தகடு ஒருபோதும் துருப்பிடிக்காது என்றும், கடும் வெப்ப காலத்திலும் இதன் கீழிருப்பவர்களுக்கு இதமான குளிர்ச்சியைத் தரும் என்றும் அறியப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் (2001-2006) மழை நீர் சேகரிப்புத் தளம் ஒவ்வோர் இல்லத்திலும் அமைக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கினார் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. சட்டத்திற்கு அஞ்சி அனைவரும் பெரும்பெரும் பிவிசி குழாய்களை தமது இல்லங்களிலுள்ள மழை நீர் வடிகால் குழாயில் பொருத்தி, அவற்றை அப்படியே மணலில் இறக்கினர்.
மழை நீர் சேகரிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நிறைய செலவாகும் என்று கருதிய பொதுமக்களின் இச்செயலால், பல வீடுகளில் அஸ்திவாரம் பாதிப்பிற்குள்ளானது. தமிழகத்திலுள்ள பிவிசி குழாய் விற்பனை நிலையங்களில் குழாய்கள் கணக்கின்றி விற்றுத் தீர்ந்தன என்ற ஒரே சாதனையுடன் மழை நீர் சேகரிப்பிற்கான தமிழக அரசின் அச்சட்டம் நாளாவட்டத்தில் காணாமல் விடப்பட்டது.
இந்நிலையில், மலையாளக் காயலர் சாளை ஷாஹுல் ஹமீதின் ஆர்வம் மழை நீர் சேகரிப்பின்பால் சென்றது.
நவீன அலுமினியத் தகடுகள் நிறுவப்பட்ட தனது வீட்டு மொட்டை மாடி மேற்கூரையின் ஓரங்களில் நான்கு திசைகளிலும் அதே தகடைக் கொண்டு மழை நீர் வடிகால் அமைத்தார்.
அந்நீர் இறுதியாக வந்து சேருமிடத்திலிருந்து பிவிசி குழாயைப் பொருத்தி, அதன் மறு முனையை மழை நீர் சுத்திகரிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் பொருத்தினார்.
மழை நீரை சுத்திகரிக்கும் பொருட்கள் இத்தொட்டிக்குள்தான் உள்ளன. தொட்டியின் அடியில் 6 இன்ச் அளவுக்கு, நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்ட பெரிய கருங்கல் போடப்பட்டுள்ளது. அதன் மேல் 6 இன்ச் அளவுக்கு நிலக்கரியும், அதன் மேல் 6 இன்ச் அளவுக்கு சுத்தமான மண்ணும், அதன் மேல் 6 இன்ச் அளவுக்கு கருங்கல் ஜல்லியும் போடப்பட்டுள்ளது.
வடிகால் குழாயிலிருந்து தொட்டிக்குள் விழும் நீர், கருங்கல் ஜல்லி வழியாக, மணலில் விழுந்து, அதன் வழியே நிலக்கரியில் விழுந்து, அதனைத் தாண்டி பெரிய கருங்கல் வழியாக, நீர் வெளியேறும் குழாய் வழியே, அருகிலுள்ள சிறிய தொட்டிக்குள் விழுந்து, அச்சிறிய தொட்டியின் தரை மட்டத்திற்கு சற்று மேலே அமைக்கப்பட்டுள்ள நீர் வெளியேறும் குழாய் வழியாக, வீட்டின் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மழை நீர் சேகரிப்புத் தொட்டிக்குள் சென்றடையும்.
முறையான சுத்திகரிப்பின் மூலம் சேகரிக்கப்படும் இத்தண்ணீரில் எத்தனை நாட்களானாலும் புழுக்களோ, கிருமிகளோ உருவாவதில்லை என்று தெரிவிக்கும் சாளை ஷாஹுல் ஹமீத், இத்தொட்டிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தம் செய்தாலே போதுமானது என்றார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு தேவையான அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் நுகரப்படுவதாகத் தெரிவித்த அவர், இதே மழை நீர் சேகரிப்புத் தொட்டியை, சில ஆயிரம் ரூபாய் தொகை கொண்ட குறைந்த செலவில் சிறிய அளவிலும் அமைக்கலாம் என்றும், அதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 2 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பெற முடியும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
விடுமுறைக் காலங்களில் காயல்பட்டினம் வந்து செல்லும்போது, மறவாமல் பல லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட மழை நீரையும் எடுத்தே செல்கிறார் இவர்.
மொத்தத்தில், மக்காவிலுள்ள ஜம்ஜம் புனித நீருக்கு அடுத்த படியாக சாளை ஷாஹுல் ஹமீத் மிகவும் விரும்புவது இந்த மழை நீரைத்தான்!
களத்தொகுப்பில் உதவி & படங்கள்:
R.இம்தாத்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |