செய்தி எண் (ID #) 7475 | | |
புதன், நவம்பர் 2, 2011 |
காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க நிலம்: ஒரு பார்வை! |
செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 5143 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினத்தில் பல ஆண்டு காலங்களாக குறைந்தழுத்த மின்சார விநியோக பிரச்சனை (Low Voltage) உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும்
முகமாக - கடந்த டிசம்பர் மாதம், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் கூட்டம் ஒன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவ்வேளையில் - காயல்பட்டினத்தில் புதிய 33/11 KV துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்காக
நிலம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலம் விரைவாக பெறப்படாத பட்சத்தில் - திட்டம் ஆத்தூருக்கு மாற்றப்படும் என்றும்
அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பார்க்கவும் செய்தி எண் 5337.
இது குறித்து - காயல்பட்டணம்.காம், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மின்சார வாரியத்திடம் வினவியிருந்தது. அதற்கு - கடந்த மார்ச் மாதம் - பதில் அளித்த திருச்செந்தூர் செயற்பொறியாளர் த.மேரிராணி மலர்விழி, துணை மின்
நிலையத்திற்கான 1 ஏக்கர் நிலம் - LF ரோடு பகுதியில் துளிர் பள்ளிக்கூடத்திற்கு அருகில் அல்லது திருச்செந்தூர் நெடுஞ்சாலை பகுதியில்
தேவைப்படுவதாக தெரிவித்திருந்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் லிமிடெட் மூலமாக இலவசமாக நிலத்தினை
கையகப்படுத்தும் முறை தற்போது இல்லை என்றும் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் நிறுவனத்திடம்
தற்பொழுது ஆத்தூர் பகுதியில் புதிதாக 33/11 கேவி துணை மின் நிலையம் அமைக்கும் நோக்கில் திட்ட வரைவு ஏதும் இல்லை எனவும்
தெரிவித்திருந்தார். பார்க்கவும் செய்தி எண் 5853.
ஜூலை மாதத்தில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பாக - பொது மக்களிடம் நிலம் கையகப்படுத்தும் வகைக்காக நிதி உதவி
கோரி விண்ணப்பம் வைக்கப்பட்டது. அவ்வேளையில் - மின்சார வாரியத்திடம் இருந்து மார்ச் மாதம் காயல்பட்டணம்.காம் இணையதளத்தால்
பெறப்பட்ட தகவல் - ஐக்கியப் பேரவையின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய ஐக்கியப் பேரவையின் நிர்வாகிகளில் ஒருவர் - மிக
குறைந்த தொகையினையே நிலத்திற்காக மின்சார வாரியம் வழங்கும் எனவும், ஆகவே தனியாரிடம் நிலம் வாங்கப்பட்டு - அதற்கான குறைந்த
கிரையத்தை மின்சார வாரியத்திடம் பெற்று, துணை மின் நிலையத்திற்கான நிலம் - மின்சார வாரியத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சுமார் 23 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டதாக - செப்டம்பர் 8 அன்று நடந்த ஐக்கிய பேரவை
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் துணை மின் நிலையத்திற்கான நிலம் - LF சாலையில், துளிர் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வழியில் (சாலையின் மேற்கு புறமாக) -
வாங்கப்பட்டு, செப்டம்பர் 2 (வெள்ளிக்கிழமை) அன்று - சென்ட் ஒன்றுக்கு 100 ரூபாய் என்ற மதிப்பில், சுமார் 9000 ரூபாய் பெறப்பட்டு -
மின்சார வாரியம் பெயரில், ஐக்கிய பேரவை சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்க்கவும் செய்தி எண் 7204.
செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட நிலம் - அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 22 அன்று காயல்பட்டினம் மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம்
வழங்கப்பட்டது. பார்க்கவும் செய்தி எண் 7425.
விரைவில் பணிகள் துவங்கி நகரில் புதிய மின்சார துணை மின் நிலையம் அமையும் பட்சத்தில் - நகரில் மின்சார விநியோகம் பெரிய அளவில்
முன்னேற்றம் காணும் என்பது நிஜம். திட்டத்தினை அறிவித்த சில மாதங்களில் - நிதியினை திரட்டி,
தேவைப்படும் நிலத்தினையும் கையகப்படுத்தி, முறையாக மின்சார வாரியத்திடம் தற்போது வழங்கியுள்ளது காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப்
பேரவை. பல ஆயிர மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய இத்திட்டம் நகர வரலாற்றில் - முதல் குடிநீர் விநியோகத்திட்டம் போன்று - ஒரு
குறிப்பிடும்படியான நிகழ்வாகும்.
மின்சார வாரியத்திடம் வழங்கப்பட்டுள்ள நிலத்திற்கான தொகை பெயரளவில் (Nominal) பெறப்பட்ட தொகை ஆகும். கூடுதலாக இத்தொகைதான்
பெறமுடியும் என்ற சிலரின் ஆலோசனையின் பெயரிலேயே ஐக்கியப் பேரவை - இவ்விசயத்தில் - செயல்பட்டுள்ளது என தெரிகிறது.
இது குறித்து தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் - காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் சட்டம் மூலம் வினவியிருந்தது.
அதற்கு ஆகஸ்ட் 25 தேதியிட்ட கடிதம் மூலம் - பதில் அளித்த மின்சார வாரிய அதிகாரி - பொதுவாக துணை மின் நிலையத்திற்கான நிலத்தினை
சந்தை விலை (Market Value) அல்லது குறியீட்டு விலை (Guideline Value) - இதில் எது குறைவோ அத்தொகைக்கு மின்சார வாரியம்
தனியாரிடம் இருந்து பெறும் என்றும், அரசு நிலத்திற்கும் மின்சார வாரியம் - அரசு நிர்ணையிக்கும் தொகையினை வழங்கியே நிலத்தினை பெறும்
என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளில் - துணை மின் நிலையம் அமைப்பதற்காக தனியாரிடம் இருந்து எந்த தொகைகளில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன
என காயல்பட்டணம்.காம் வினவியிருந்தது. இதற்கான விரிவான பதிலை வழங்க தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சார விநியோக மையங்களுக்கும்
தமிழ் நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதுவரை சுமார் 22 மின்சார விநியோக மையங்களில் இருந்து பதில்கள் பெறப்பட்டுள்ளன.
இலவசமாக நிலங்கள் பெறப்பட்ட திட்டங்கள் குறித்தும் விபரங்கள் வந்துள்ளன. பார்க்கவும் கீழே ...
கோயம்புத்தூர் பகுதியில் மின்சார வாரியம் 1.38 கோடி ரூபாய்க்கு துணை மின் நிலையம் அமைக்க நிலம் வாங்கிய விபரம்.
பார்க்கவும் கீழே ...
நாகர்கோயில் பகுதியில் மின்சார வாரியம் 65 லட்ச ரூபாய்க்கு துணை மின் நிலையம் அமைக்க நிலம் வாங்கிய விபரம்.
பார்க்கவும் கீழே ...
சில நிலங்கள் இலவசமாகவும், சில நிலங்கள் சில ஆயிரம் ரூபாய்க்காகவும், சில நிலங்கள் பல லட்ச ரூபாய் ரூபாய்க்காகவும் மின்சார
வாரியத்தால் - கடந்த சில ஆண்டுகளாக - வாங்கப்பட்டுள்ளது தெரிகிறது.
காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைவது - வரவேற்கப்பட
வேண்டிய விஷயம் என்றாலும் - நிலத்திற்கு கூடுதல் விலை கிடைக்க வழியுள்ளது என்ற பட்சத்தில் - நிலத்தினை மிகக் குறைந்த விலை
பெற்றுக்கொண்டு மின்சார வாரியத்திற்கு - காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை - விற்றுள்ளது தவறான ஆலோசனையின் பெயரில் தான்
என்றே தெரிகிறது.
[செய்தி திருத்தப்பட்டது]
|