அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைமைக்குப் போட்டியிட்ட ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா, நகர பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:-
ஊர் மக்களே! உங்கள் அனைவருக்கும் நன்றி!!
நடைபெற்று முடிந்த காயல்பட்டினம் நகராட்சித் தலைவர் தேர்தலில், பொது வேட்பாளராக என்னைத் தேர்வுசெய்த ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு உளப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமதூர் வழமைப்படி ஜமாஅத்து பிரதிநிதிகள் ஒன்றுகூடி உள்ளாட்சித் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதோடு முடியக்கூடிய விஷயத்தில், எதிர்பாராத விதமாக முதல் முறையாக நமக்குள்ளேயே தேர்தல் வரை வந்துவிட்டது.
இருப்பினும் மனம் தளராது, அவமானங்களையும், அவதூறுகளையும் தாங்கிக்கொண்டு, எனது வெற்றிக்காக அல்லும் பகலும் உழைத்த காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையினருக்கும், அவர்களுக்குத் துணை நின்ற ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களுக்கும், ஆலிம்கள், ஆலிமாக்களுக்கும், தைக்கா நிர்வாகிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும், வெளியூர், வெளிநாடுகளிலிருந்து எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் மற்றும் பணியாற்றிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்காக பஸ் சின்னத்தில் வாக்களித்த, நமதூரைச் சார்ந்த அனைத்து சமுதாய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெற்றி வாய்ப்பை இழந்தது நாயனின் நாட்டம் என ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு பொருட்டாக மதிக்கப்பட்டு, பொது வேட்பாளராக தேர்வு பெற்றதையே பெருமையாகக் கருதுகிறேன். அதற்காக வல்ல இறைவனைப் புகழ்கிறேன்.
எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலிருந்தே பொதுச் சேவையில் தொடர்புடையவள் என்ற முறையில், எப்போதும் இவ்வூர் முன்னேற்றத்திற்கு என்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டே இருப்பேன்.
வெற்றிபெற்று, நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்கும் சகோதரி அவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு கவுன்சிலர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊர் மக்களே! உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள் நன்றியுள்ள
ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரியா பி.காம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். |