காயல்பட்டினம் பெரிய தெருவில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தில், ரூபாய் நோட்டுக்கு சில்லறை தரும் கருவி நிறுவப்பட்டுள்ளது.
இச்சேவையைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
வங்கியின் நடப்பு மண்டல மேலாளர் ரஷீத் கான், புதிய மண்டல மேலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகிக்க, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா, சில்லறை வழங்கும் கருவியை ரிப்பன் வெட்டி சேவையைத் துவக்கி வைத்தார்.
துவக்கமாக நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், ரூபாய் நோட்டை அதனுள் செலுத்தி சில்லறை பெற்றார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தமக்குத் தேவையான சில்லறைகளைப் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், மேலாளர் அறையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், வங்கி மேலாளர் குணசேகரன், துணை மேலாளர் இறைவன் ஆகியோர், வங்கி மண்டல மேலாளர்களையும், நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்டோரையும் வரவேற்றனர்.
பின்னர், வங்கியின் சார்பில் நகர்மன்றத் தலைவர் ஆபிதா, துணைத்தலைவர் மும்பை முகைதீன் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
வங்கியின் சேவைகள், கல்விக்கடன் குறித்த விபரங்கள், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இதர கடன் திட்டங்கள், ஒரு கிளை அலுவலகத்திலிருந்து அது அமைந்துள்ள ஊருக்குக் கிடைக்க வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நகர்மன்றத் தலைவர் ஆபிதா, வங்கி மண்டல மேலாளர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர், காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் வங்கி மண்டல மேலாளர் ரஷீத் கானுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. அவ்வமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் முன்னிலையில், அதன் ஆலோசகர் ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக் சால்வை அணிவித்தார். பின்னர் காயல்பட்டினம் அரசு நூலகத்தின் சார்பில் கோரிக்கை மனுவும் அவரிடம் அளிக்கப்பட்டது.
நிகழ்வுகளில், காயல்பட்டினம் அரிமா சங்க செயலாளர் துளிர் ஷேக்னா லெப்பை, பொருளாளர் ஜுவல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான், கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், பொதுநல ஆர்வலர்கள் ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி ஜெஸ்மின் கலீல், 18ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி, வி.எம்.எஸ்.எம்.அமீன் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
துவக்கி வைக்கப்பட்ட இந்த சில்லறை வழங்கும் கருவியில், இருபது ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகளை உட்செலுத்தி, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களை சில்லறையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
படங்கள்:
தாஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |