மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் தங்களது கால்களை சுத்தமாக கழுவிய பின்பு தான் குடிநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள சேதம் மற்றும் நிவாரண பணிகள் கண்காணிப்பு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்மந்தர்சிங் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளச் சேதம் மற்றும் நிவாரண பணிகள் கண்காணிப்பு அலுவலராக மாநில சிறுபான்மையினர் நல ஆணையர் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்மந்தர்சிங்கை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹர்மந்தர்சிங் நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தார். மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இது சம்பந்தமான அதிகாரிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் ஹர்மந்தர்சிங் பேசியதாவது;-
*** வடகிழக்கு பருவமழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கட்டுப்பாடு அறைகளில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து அங்கு பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
*** மழைக்காலத்தில் ஏற்படக் கூடிய சுகாதார கேடுகளை தவிர்ப்பதற்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்...
*** மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்படும் போது சுத்தம் செய்பவர்கள் கால்களை சுத்தமாக கழுவிய பின்பு தான் குடிநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும்...
*** சுத்தம் செய்ய புதிய துடைப்பான்களை பயன்படுத்த வேண்டும்...
*** திறந்த நிலையில் உள்ள தொட்டிகளை மூட வேண்டும்...
*** சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்...
*** சுத்தம் செய்த தேதியையும், யாரால் சுத்தம் செய்யப்பட்டது என்பதையும் அதில் குறிப்பிட வேண்டும்...
*** இனி மழை இருக்காது என்று அலுவலர்கள் அலட்சியமாக இருக்க கூடாது. மழைக்காலம் முடியும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு வரும் வகையில் தயாராக இருக்க வேண்டும்...
*** மழைக்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கு ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள் எங்கெங்கு உள்ளது, தனியாரிடம் அவைகள் இருந்தாலும் அவசர காலங்களில் அவற்றை பெறுவதற்கு வசதியாக அவர்களுடைய டெலிபோன் எண்கள், முகவரி போன்றவற்றை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், தாசில்தார்கள், பி.டி.ஓ, டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி வைத்திருக்க வேண்டும்...
*** ஆஸ்பத்திரிகளை குப்பைகள் இல்லாமலும், சுற்றியுள்ள இடங்களை நீர் தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும்...
*** குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்...
*** எங்கும் மழைநீர் தேங்காமல் வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும்...
*** அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சுத்தம் செய்து மழைக்காலத்தில் நிலத்தடி நீர் உயர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...
இவ்வாறு ஹர்மந்தர்சிங் பேசினார். கலெக்டர் ஆஷீஷ்குமார் மாவட்டத்தில் மழைக்கு முன் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வந்த பின் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், மழைகாலம் முடியும் வரை பாதிப்பு ஏற்பட்டால் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விளக்கினார்.
டி.ஆர்.ஓ அமிர்தஜோதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்மணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி:
தினமலர் (24.11.2011) |