“நம் சமூகம் குறைகள் களைந்து சரி செய்யப்பட வேண்டுமானால், முதலில் நம்மை நாம் சரிசெய்துகொள்ள வேண்டும்” என, 10.11.2011 அன்று ‘மெகா‘ நடத்திய நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாப் புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!
இது நல்ல மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். இந்த நகர்மன்றத்தில் நடப்பது என்ன என்பதனை அறிவதற்கு ஆவலாக வந்திருக்கின்ற உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்.
ஊரையும், உறவையும் பிரிந்திருக்கின்ற சூழ்நிலையிலும் உணர்வுகளால் ஒன்றுபட்டு, உரிமைகளை நிலைநாட்ட கடமைகளை நிறைவேற்ற, ஒருங்கிணைந்து நகர்மன்றத் தேர்தல் சமயத்தில் வழிகாட்டும் அமைப்பாக செயல்பட்டு உழைத்து, இனிவரும் காலங்களிலும் காயலின் நகர்மன்ற நடவடிக்கைகளிலும் காயலின் நலனிலும் அக்கறையுடன் செயலாற்ற ஆர்வமுடன் இருக்கின்ற எனது பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய மெகா அமைப்பினர்களுக்கு நன்றியினையும் வாழ்த்துக்களையும் முதலாவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் பிரதிநிதிகளின் கடமை:
நம் தமிழகத்தின் கிராமம் மற்றம் நகர்புறங்களை உள்ளடக்கிய 1,12,750 உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பெற்று மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வுசெய்யப்பட்டோரின் தலையாயக் கடமை, வரும் 5ஆண்டுகளில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முழுமூச்சாக செயல்பட்டு செயலாற்றவதும் அவர்களின் நலனுக்காக சேவைபுரிவதும் மட்டுமே ஆகும்.
ஆனால் லாப-நட்ட கணக்கு பார்த்து செயலாற்றும் ஒரு நிகழ்வாக மாறிவரும் இப்போதைய வேதனையான காலச் சூழலிலே நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னிற்பவர்களாக, நம் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னிற்பதில் உறுதி மிக்கவர்களாக நம்முடைய பிரதிநிதிகளான நம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருப்பார்களா? என்ற கேள்வி மக்களாகிய உங்கள் முன்னால் எழுந்துள்ளது நியாயமான ஒன்றுதான.
வாக்களித்த நம் ஊர் மக்கள் நம் ஊர் பற்றிய பல்வேறு கனவுகளைச் சுமந்தவர்களாகத் தங்கள் விலைமதிக்க முடியாத வாக்குகளைச் செலுத்தி நகராட்சி பிரதிநிதிகளாக நம்மைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களது பிரச்சினைகனைத் தீர்த்துவைக்கும் காவலர்களாக செயல்பட வேண்டியது எங்ளுடைய தலையாய கடமையாகும்.
ஊழலற்ற-வெளிப்படையான நிர்வாகம்தான் ஒரே தீர்வு!
இப்பொழுது நம் நகர்மன்றத்துடைய பிரச்சனைகளைப் பற்றியெல்லாம் பேசினார்கள். எல்லாப் பிரச்சனைகளுக்கும் ‘ஊழலற்ற நிர்வாகத்தைத் தருவது’ ஒன்று மட்டும்தான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பது எனது உறுதியான - ஆணித்தரமான நம்பிக்கை.
நமது இந்தியத் தாய்நாடு சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கி 62 ஆண்டுகள் கடந்து உலக அரங்கில் ஒரு தனித்துவம் பெற்றுத் திகழ்ந்து வருகின்றபோதிலும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் முட்டுகட்டையாக விளங்கும் ஊழலை ஒழிப்பது பற்றி கடந்த அக்டோபர் 29, 30 தேதிகளில் நடைபெற்ற அனைத்து மாநில ஆளுநர்களின் மாநாட்டில், நமது மாண்புமிகு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அவர்களின் உரையாற்றுகையில், ”ஊழலை ஒரே விதமான அணுகுமுறையால் ஒன்றும் செய்திட முடியாது... அதை ஒழிக்க பன்முக உத்திகளையுடைய நடவடிக்கைகளைக் கையாளுவது அவசியம்... அதில் முக்கியமானது
(1) குற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... அவர்கள் எப்படி பட்டவர்களானாலும் சரியே! தயவு தாட்சண்யம் இல்லாமல் அவர்களைத் தண்டிக்க வேண்டும்.... (2) வெளிப்படையான நிர்வாகம் வேண்டும்...
என்றும் கூறினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், விவாதிக்கப்படும் அம்சங்கள் நகர பொதுமக்களுக்கு பொதுவாக சென்றடைவதில்லை. அவ்விசயம் குறித்த மக்கள் கருத்து விருப்பம் ஆகியவை அறியப்படாமலேயே பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இன்ஷா அல்லாஹ் நான் நகர்மன்ற தலைவியாகத் தேர்வு செய்யப்பட்டால் ஒரு வெளிப்படையான நகர்மன்றத்தினை உருவாக்குவேன். நகர்மன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள பொருள்களை விசயங்களை முன்கூட்டியே மக்களுக்கு ஜமாஅத்துக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் தெரிவித்து, அவர்களின் கருத்துக்களையும் பெற்றே செயல்படுவேன் என்றும்,
அதுபோல நகர்மன்ற கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீhமானங்களை உடனுக்குடன் மக்களுக்கு அறியத்தர, ஜமாஅத்துக்கள் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்வேன் என்றும் தேர்தலின்போது நான் கூறியுள்ளேன்.
மாதம் ஒருமுறை ஜமாஅத்-பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம்:
நகர்மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள விசயங்கள் மற்றும் தீர்மானங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், உங்களுடைய நல் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு மாதமும் நகர்மன்ற கூட்டத்திற்கு முன்பாக அனைத்து ஜமாத்துக்கள், பொதுநல அமைப்புகள், புறநகர்களின் ஊர் தலைவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்டு செயல்படும் மக்கள் கருத்தாய்வுக் கூட்டம் ஒன்றினை எமது ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் வைத்து நடத்திடுவதற்கு நாடியுள்ளேன்.
உங்கள் எண்ணம்தான் நகர்மன்றத்தில் பிரதிபலிக்கும்!
உங்களுடைய எண்ணங்கள்தான் நகராட்சியில் பிரதிபலிக்கும்... உங்களுடைய கருத்துகளுக்குத்தான் அங்கே முக்கியத்துவம் தரப்படும் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.
நம் ஊர் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து சமுதாய மக்களும் தமது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு, இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு பணிவன்புடன் கோட்டுக்கொள்கின்றேன்.
லஞ்சம் தவிர்ப்போம்!
நமது ஜனாதிபதி அவர்கள் 3ஆவதாக குறிப்பிட்ட விஷயம், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்... லஞ்ச லாவண்யம் இல்லாத அரசாங்கம்...
லஞ்சலாவன்யம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது என்று நினைக்கும் மக்கள்தான் லஞ்சம் கொடுப்பது குற்றம். அதை தடுக்கப்படணும் என்பதில் வலுவான எண்ணமும் உறுதியும் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். லஞ்சத்தை ஒழித்தாலே நம்முடைய அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில், நல்ல முறையில் நமக்கு கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
லஞ்சத்தை ஒழிப்பதும், ஊழலற்ற நிர்வாகத்தினை அமைப்பதும் பெரும் பங்கு மக்களாகிய உங்களுடைய எண்ணங்களில்தான் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தன்னைதானே மாற்றிக் கொள்ளாத வரை எந்த ஒரு சமூகமும் மாற்றமடைய முடியவே முடியாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் சல்லிக்காசு கூட நான் லஞ்சமாக கொடுக்க மாட்டேன் என்ற மன உறுதியை நீங்கள் முதலில் உங்கள் உள்ளங்களில் எடுங்கள்! அதேபோல, சட்டத்துக்குப் புறம்பான எந்த ஒரு காரியத்திற்கும் துணை போகமாட்டேன் என்ற சத்திய வாக்கை உங்களுடைய உள்ளத்திலே பதிய வையுங்கள்!
உதாரணமாக, பைப் கணெக்சன் வாங்குவது, ப்ளான் அப்ருவல், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், பட்டா வாங்குதல் இது மாதிரி விசயங்களுக்கெல்லாம் உங்களுடைய அவசரத்துக்குப் பயன்படுத்துவதற்காக நீங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு முன் வருகிறீர்கள்... இதுதான் அப்பட்டமான உண்மை. இந்த விசயத்தில் நீங்கள் லஞ்சத்திற்கெதிராக உறுதியாக இருந்தால் நிச்சயமாக உங்களால் ஊழலைத் தடுக்க முடியும். நீங்கள் இந்த எண்ணத்திலிருந்தும், உங்களிடம் அதிகாரிகள், அலுவலர்கள் எவரேனும் பணத்தை முறைகேடாக எதிர்பார்த்தால் என்னிடம் முறையிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நான் தினந்தோறும் நகராட்சிக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறேன். அங்குள்ள பணிகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். ஆதலால் உங்களுடைய அந்த குறைகளை என்னிடம் உடனடியாக தெரிவிக்குமாறு நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பொய் சென்னால், பிறருடைய பொருளுக்கு ஆசைப்பட்டால், பிறரை ஏமாற்றினால், பிறர் பழிச் சொல்லுக்கு ஆளானால் இம்மையிலும், மறுமையிலும் இறைவன் எப்படிப்பட்ட தண்டனைகளை நமக்கு தருவான் என்பது நாம் அறியாததல்ல!
பெற்றோரின் கடமை:
நல்ல பொற்றோர்களாய் இப்போதிருந்தே நம் குழந்தைகளுக்குக் கூட இதைப்பற்றி எடுத்துச் சொல்லும் அறிவுரைகள்தான் நம்முடைய கண்மனிகளை நாளைய நம் ஊரின் நண்மணிகளாக மாற்றுவதற்கு வழிவகுக்கும். வளரும் தலைமுறைகள் ஊழலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளத்தக்க வகையில் மாற்றும் பொறுப்பும், கடமையும் பெற்றோருக்கும், பெரியோருக்கும் உண்டு.
அக்டோபர் 31 தொடங்கி இம்மாதம் 05ஆம் தேதி வரை ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டது. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரு வாரத்துடன் முடிவடைந்துவிட்டதே தவிர இதனால் உண்மையான மனமாற்றம் அடைந்து, நாங்கள் ஊழல் எதுவும் பண்ணமாட்டோம் சொல்லிட்டு மனசு மாறினவங்க எத்தனை பேர் இருக்க முடியும்?
நம்மை நாம் சரிசெய்வோம்!
தூய்மையாகவும், ஒற்றுமையாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும், இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டியவர்களே ஊழல்வாதிகளாகவும், தனக்கென்று ஒரு சட்டம் வைத்துக் கொள்பவர்களாகவும் இருக்கும்போது, நாளைய சமுதாயம் நலம் மிகு சமுதாயமாக எப்படி உருவாக முடியும்? நாளைய காயல்பட்டினம் அனைத்து நகரங்களுக்கும் வழிகாட்டியாக... கலங்கரை பட்டணமாக ஜொலிக்க எப்படி முடியும்? நம்முடைய ஊர் எப்படி வளர்ச்சி பாதையில் செல்ல முடியும்? நம் ஊர் எப்படி முன்னேற்றமடைய முடியும்? பொதுமக்களே இதற்கான தீர்ப்பினை நீங்களே சொல்லுங்கள்! நீங்கள்தான் சொல்ல முடியும்.
மக்களே... நீங்கள் விழித்தெழுங்கள்! வெற்றிபெறுங்கள்!! ஊரை முன்னேற்ற நல்வழியில் நடத்த உண்மையாக ஒன்றுபடுங்கள்!!! உண்மையான ஒற்றுமையை நிலைநாட்டுங்கள்!!!!
நம்முடைய நகராட்சிக்கு நீங்கள் செலுத்தவேண்டிய தண்ணீர் கட்டண பாக்கி ரூபாய் 50,00000 உள்ளது. அந்த பட்டியல் நம்மிடம் உள்ளது. 5000, 6000 ரூபாய்க்கு மேல் தரவேண்டியவர்கள் 100 பேருக்கும் மேல் இருக்கிறார்கள். தயவுசெய்து தண்ணீர் பாக்கியினை நீங்கள் செலுத்தி உங்களுடைய மேன்மையான ஒத்துழைப்பைத் தாருங்கள்!
இரண்டாம் பைப்லைன் திட்டத்திற்காக பொன்னன்குறிச்சி, ஆத்தூர், மங்களகுறிச்சி ஆகிய இடங்களில் எல்லாம் பம்ப்பிங் ஸ்டேஷன்களை பார்வையிட்டு வந்தோம். ஆனால் எந்த ஒரு திட்டமும் ஒழுங்காக செயல்பட வேண்டும் என்றால் சட்டத்திற்கு உட்பட்ட முறையில் நீங்கள் எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக ஒத்துழைத்தால்தான் அத்திட்டங்கள் தன்னிறைவு அடையமுடியும். நிரந்தரத் தீர்வு காண முடியும். எந்த ஒரு நன்மையையும் அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி சரிசமமாகப் பங்கிட்டு, அனைத்து நலனையும் பெற முடியும்.
குளங்களெல்லாம் கூடங்களாக...
இந்த மழை சீசனில் நம் நகரின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டபோது, எல்லா இடங்களிலுமே தண்ணீர் தேங்குகிறது என்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதை அறிய முடிந்தது. காரணம் எல்லா இடங்களிலும் குளங்களை எல்லாம் மூடி வீடு கட்டியிருக்கிறார்கள். பின்னர் தண்ணீர் கட்டாமல் என்ன செய்யும்? ஒவ்வோர் இடத்திலும் “ஜேசிபி கொண்டு வாங்க! பம்ப்பிங் மிஸின் கொண்டு வாங்க” என்ற கம்ப்ளைன்ட்தான். இன்னும் நிறைய குளங்கள் மூடி பிளாட் போட்டு விற்பதற்கு ஆயத்தமாக உள்ளதாக அறிய முடிகிறது. மக்கள் நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எங்கெங்கு கால்வாய்கள் இருக்கிறதோ அவையனைத்தையும் வெட்டி விடச் சொல்லி, எல்லா கால்வாய்யையும் இணைத்து ஒரு நிரந்தரமான தீர்வை இந்த ஊரில் நாம் கொண்டுவந்தால்தான் நிச்சயமாக மழை நேரத்திலே தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு அது ஒரு நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். எந்த ஒரு நன்மையையும் அனைவரும் சரிசமமாகப் பகிர்ந்து அனுபவிக்க முடியும்.
இளைஞர்களின் கடமை:
ஊரிலுள்ள ஒவ்வொரு நன்மையான செயல்பாடுகளிலும் தன்னார்வமிக்க இளைஞர்களும், இளைஞிகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற முன்வாருங்கள்! அனுபவம் கொண்ட பெரியவர்கள் நல்ல ஆலோசனைகளை தாருங்கள்!! ஜமாஅத்கள், பொதுநல அமைப்புகள் எங்களுக்கு வழிகாட்டியாக செயல்படுங்கள்!!!
உலக அளவில அமெரிக்காவிலே நடந்த People to People Leadership கேம்பில் கலந்துகொண்ட அமெரிக்க மாணவர் டேனி தன்னுடைய ஊருக்கு பக்கத்தில இருந்த கடற்கரையில் உள்ள அசுத்தத்தைப் பார்த்து வருத்தப்பட்டு, குப்பைகளை முடிந்த வரை அகற்றி இருக்கிறான். துவக்கத்தில் அவனுக்கு யாரும் உதவிக்கு வரவில்லை. அவனை யாரும் ஒருபொருட்டாகவும் பார்க்கவில்லை. காலப்போக்கில், இவனுடைய தொடர்ச்சியான இந்த கிளினீங் செயலைப் பார்த்துவிட்டு இன்னும் சிலர் அவனோடு சேர்ந்து கடற்கரையை சுத்தப்படுத்தி இருக்கிறார்கள்... இதை பார்த்து அரசும் அவனோடு சேர்ந்துகொள்ள, அந்த கடலின் நீண்ட கரை அவ்வளவு சுத்தமாக இருக்கிறதாம்.
ஒரு தனி மனிதன் மனது வைத்தால் எந்த ஒரு மாற்றத்தையும் முன்னெடுக்கலாம் என்கிற நம்பிக்கையை நமக்கெல்லாம் விளக்கும் இச்செய்தி. நம் தெரு குப்பைகளை நாம் மனது வைத்தால் வீதி எங்கும் வீசாதிருக்க நம்மாலும் முடியும். இந்த குப்பைகளை அகற்றவும், சுத்தப்படுத்தவும் போதிய ஆள்வ சதிகள் இல்லாது, வாகன வசதிகள் இல்லாது நம் நகர்மன்றம் மிகுந்த சிரமத்திற்குட்பட்டிருக்கின்ற நிலையில், மக்களாகிய நீங்களும், உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாத சூழலுக்கு நாங்களும் சிக்கி தவிப்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்கு விரைவில் நல்லதொரு தீர்வினைக் காண்போம்.
கேள்வி-கேளுங்கள்!
மாதம் இருமுறை கண்டிப்பாக குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தவும் முயற்சிகள் கால நிர்ணயம் அமைத்து, பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். நம் நகராட்சியின் அனைத்துப் பணிகளும் உங்கள் பகுதிகளில் நல்ல முறையில் ஒழுங்காக செயல்பட வேண்டுமென்றால், பொதுமக்களாகிய நீங்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை சிந்தனைக்கு எடுக்கக் கூடியவர்களாகவும், தேவை-தேவையில்லை, அவசியம்-அநாவசியம் என்பதை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
ஊரின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொள்வோம்!
நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டு ஊரினுடைய ஒட்டுமொத்த நலன், ஊரினுடைய ஒட்டு மொத்த வளர்ச்சி, ஊரினுடைய ஒட்டுமொத்த முன்னேற்றம் இவைகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செய்வோமேயானால், நம் ஊர் நிச்சயம் வரலாறு படைக்கும். நாளைய சந்ததிகளுக்கு நல்ல முன்மாதிரியை நாம் விட்டுச் செல்ல முடியும்.
அனைத்து மகளிர்களும் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி பெண்களை எதிர்நோக்கும் பிரச்சனைகள் பெண்கள் தேவையின் முன்னேற்றம் பெண்களுக்கான தேவைகள் இவைகளை நல்ல முறையில் செயலாற்றுவோம், இன்ஷா அல்லாஹ்.
தந்தையை நினைக்கிறேன்...
இத்தருணத்தில் இறைவனுக்கே எனது நன்றியினைக் கூறிக்கொள்கிறேன். நான் நகர்மன்றத் தலைவர் என்ற இந்தப் பொறுப்பைப் பெறுவதற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து தகுதியானவளாக என்னை உருவாக்கிய எனது பாசமிகு தந்தை பாளையம் இப்ராஹிம் அவர்களை பெருமிதத்துடனும், நன்றியுடனும் இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன்.
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என நீங்கள் எல்லாம் நற்சான்றிதழ் தருமளவிற்கு எனது பணிகளை சிறப்பான முறையில் எனது தந்தை அவர்கள் காட்டிய நேரிய வழியில் செய்து, அந்தப் பெருமையை அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் பெற்று தருவேன்... அதற்கு நீங்கள் யாவரும் மனமார பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பிரார்த்தியுங்கள்!
மக்கள் பணியாற்ற நகராட்சிக்கு வந்துள்ள நாங்களனைவரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒன்றுபட்டு செயலாற்றிட, ஊழலற்ற நிர்வாகத்தினைத் தந்திட, இறைவனின் பொருத்தத்தை பெற்றிட, இனி நடப்பவை அனைத்தும் நல்லவையாக அமைந்திட பிரார்த்திக்க வேண்டுபவர்களாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். வஸ்ஸலாம்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா பேசினார்.
தொகுப்பு:
ஃபாத்திமா மாலிக்
தைக்கா தெரு, காயல்பட்டினம்.
படங்கள்:
செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம்.
இந்நிகழ்ச்சியின் அசைபட (வீடியோ) தொகுப்பை இங்கே சொடுக்கி காணலாம். |