தூத்துக்குடி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தடை செய்வது குறித்த பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.11.2011 அன்று நடைபெற்றது.
மறுசுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்வது குறித்து மாவட்ட நிர்வாகமும், தூத்துக்குடி மாவட்ட நலக்குழுவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக 18.11.2011 அன்று வணிகர்கள் சங்கத்தினர், திருமண மண்டப உரிமையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மருத்துவர்கள், அரிமா சங்கத்தினர், பல்வேறு தொழில் அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக அனைத்து ஊராட்சி அமைப்பில் உள்ள அலுவலர்கள், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் ஆகியோருக்கு மறுசுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல் குறித்து பல்வேறு கருத்துகளை மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் எடுத்துரைத்தார்.
இப்பயிலரங்கத்தில் ப்ளாஸ்டிக் பொருட்கள் எவ்வாறு எல்லாம் பயன்படுத்தப்படுகிறது. இப்பொருட்கள் என்னென்ன வகையில் பொதுமக்களுக்கு தீங்குகள் ஏற்படுத்துகின்றன, ப்ளாஸ்டிக் பொருட்களை எரிப்பதினால் உண்டாகும் வாயுவின் மூலம் பொதுமக்களுக்கு புற்றுநோய் போன்ற பாதிப்புகள் எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்தும், இவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கு என்னென்ன வழி முறைகளை கையாளலாம் என்பது குறித்தும் திரையிட்டுக் காண்ப்பிக்கப்பட்டது.
இப்பியலரங்கத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
இப்பயிலரங்கத்திற்கு வந்திருக்கும் அலுவலர்கள், தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடைசெய்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்...
ப்ளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழிப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும்...
மாவட்டத்தில் சாலையோல வாய்க்கால்கள், சாலையோர புதா;கள், நீர்த்தேக்கங்கள், சந்தைப்பகுதிகள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், திருமண மண்டபங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் சேருகின்ற ப்ளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கபடுகிறது...
கழிவு நீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன...
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி எறியப்படுகின்ற ப்ளாஸ்டிக் பைகளால் சுற்றுச் சுழல் பாதிக்கப்படுவதோடு அப்பைகளை கால்நடைகள் உட்கொண்டால் அவை இறக்க நேரிடும்...
வாய்கால்களில் ஆறுகள் வழியாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்ற ப்ளாஸ்டிக் பைகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பேரழிவு ஏற்படுகிறது...
எனவே, பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவதை முற்றிலுமாகத் தவிர்த்து, தூத்துக்குடி மாவட்டத்தை ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்...
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறினார்.
பயிலரங்கத்தின்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், ப்ளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.
இப்பயிலரங்கத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.அருண்மணி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் எம்.முருகன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) எஸ்.கதிரேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். |