தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை துவங்க வேண்டும் என்பது இந்தியா - இலங்கை இரு நாடுகளின் 100 ஆண்டு கனவாக இருந்து வந்தது. இதற்காக பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டனர். மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின் சீரிய நடவடிக்கையால் பயணியர் கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி கிடைத்தது.
தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையைத் துவக்க ஃப்ளெமிங்கோ லைனர்ஸ் என்ற நிறுவனம் முன்வந்தது. இதற்காக இந்நிறுவனத்தின் சார்பில் ஸ்காட்டியா ப்ரின்ஸ் என்ற சொகுசு கப்பல் வரவழைக்கப்பட்டது. அதில் பயணியரைக் கவரும் வகையில் சொகுசு அறைகள், ட்யூட்டி ஃப்ரீ கடைகள், கேளிக்கை அரங்கு உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
கடந்த 13.06.2011 அன்று தூத்துக்குடி - கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டது. வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்தக் கப்பலில் அதிக பயணிகள் சென்று வந்தனர். நாளடைவில் பயணியர் எண்ணிக்கை குறைந்தது.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதியன்று தூத்துக்குடியிலிருந்து கொழும்பு சென்ற பயணியர் கப்பல் மீண்டும் திரும்பி வரவேயில்லை. இதுகுறித்து கேட்டபோது, கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. பயணியரிடையே ஆர்வம் குறைவு, எதிர்பார்த்திருந்த அளவிற்கு வருவாய் இல்லாததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த கப்பல் சேவையை இயக்கும் ஃப்ளெமிங்கோ லைனர்ஸ் தரப்பினரிடம் பயணியர் தொடர்புகொண்டு கேட்டபோது, “டிக்கெட் முன்பதிவுக்காக கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேரில் பழுது ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டள்ளதாகவும், இதை சரிசெய்யும் பணிகள் விரைவாக நடந்து வருகிறதென்றும், அது முடிவடைந்த பின்னர் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்றும் அந்நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.
துவங்கிய ஐந்தே மாதங்களில் தூத்துக்குடி - கொழும்பு பயணியர் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணியர், வர்த்தகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நன்றி:
தினகரன் (24.11.2011) |