குளிர் பருவத்தை முன்னிட்டு, கத்தர்வாழ் காயலர்கள், 18.11.2011 அன்று, கத்தரிலுள்ள Al Khor Boat Club Beach Resortக்கு இன்பச்சிற்றுலா சென்று வந்தனர்.
தம் பயண அனுபவம் குறித்து சிற்றுலாக் குழுவினர் தெரிவித்துள்ளதாவது:-
குளிர் பருவத்தை முன்னிட்டு, கத்தர்வாழ் காயலர்களாகிய நாங்கள் 18.11.2011 வெள்ளிக்கிழமையன்று, கத்தரிலுள்ள Al Khor Boat Club Beach Resortக்கு இன்பச்சிற்றுலா சென்று வந்தோம்.
அன்று காலை 08.00 மணிக்கு, Al Khor Boat Club Beach Resort பகுதியை, ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 45 காயலர்கள் சென்றடைந்தோம்.
காயல்பட்டினம் கே.வி.ஏ.டி. அறக்கட்டளை தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் தலைமையில், முஹம்மத் லெப்பை உறுதுணையுடன் மதிய உணவு சமையல் அமர்க்களமாகத் துவங்கியது.
ஒருபுறம் சமையல் நடக்க, மறுபுறம் மிதமான குளிரில் இதமாக கடலில் குளித்தனர் சுற்றுலாக் குழுவினர்.
ஜும்ஆ நேரம் நெருங்கியதும், அருகிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதில் அனைவரும் தொழுகையை நிறைவேற்றினோம்.
பின்னர், நெய்ச்சோறு, காயல்பட்டினம் ஸ்பெஷல் களறிக்கறி, கத்திரிக்காய் பருப்பு, அவித்த முட்டையுடன் அற்புதமான சமையலில் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது.
பின்னர், ஓய்வெடுக்க நினைத்த ஒரு குழுவினர் உறக்கத்தில் லயிக்க, மற்றவர்கள் ஊர் நிகழ்வுகள் குறித்த அரட்டையில் இறங்கினர்.
அஸ்ர் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றிய பின்னர், அவித்த வெண்கொண்டைக் கடலை சுண்டல் கொறிப்புடன், சூடான தேனீர் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதமான குளிருக்கு இக்கொறிப்பு அனைவருக்கும் அவசியமாகிவிட்டதால், மிச்சம் மீதிக்கு வாய்ப்பற்றுப் போனது.
பின்னர் மஃரிப் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது. ஹாஜி செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா மாமா தொழுகையை வழிநடத்தினார்.
பின்னர், ஜனாப் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் தலைமையில் பார்பிக்யூ க்ரில் சிக்கன் - மசாலா மணம் கமழ அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இரவு 09.00 மணிக்கு நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன. சிலிர்க்கும் பனித்தூறலுக்கிடையில் நடைபெற்ற இந்த உல்லாச சிற்றுலா எங்கள் குழந்தைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இச்சிற்றுலாவில், எங்கள் கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களின் அன்புச் சகோதரர் சிபகத்துல்லாஹ் காக்கா அவர்கள் சஊதி அரபிய்யாவிலிருந்து வந்து எங்களோடு இணைந்துகொண்டது எங்களை பெரிதும் மகிழ்வித்தது.
மொத்தத்தில் இச்சிற்றுலா, எங்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்திடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இச்சிற்றுலா ஏற்பாடுகளை, அன்புச் சகோதரர்கள் வி.எம்.டி.அப்துல்லாஹ், எம்.என்.ஷாஹுல் ஹமீத், எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தின், பி.ஃபைஸல் ரஹ்மான், அபூதாஹிர் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
இவ்வாறு, கத்தர் சிற்றுலாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
குடாக் புகாரீ,
தோஹா, கத்தர். |