தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் தொடர்பாக அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்,
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீரில் க்ளோரின் கலந்து, பாதுகாக்கப்பட்ட குடிநீராக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டும்...
நீர்த்தேக்கத் தொட்டிகளை உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்தல்:
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், அத்தொட்டிகள் உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவதை குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சித் துறை மற்றும் பொது சுகாதார அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும்...
க்ளோரின் பவுடர் பயன்பாடு:
குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் குடிநீரில் கலக்கப்படும் க்ளோரின பவுடரை தேவையான அளவு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்... தினசரி க்ளோரின் பவுடர் பயன்படுத்தப்படும் அளவைக் கண்காணிக்க உரிய இருப்பு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்...
குடிநீர் வினியோகம் செய்யும் பொது நல்லிகள் தரைமட்டத்தை விட தாழ்வாக தோண்டி குடிநீர் எடுப்பதைத் தவிர்த்திட வேண்டும்... பொது நல்லிகள் அருகில் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...
மருத்துவ முகாம்:
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் அல்லது பகுதியில் வாந்தி, பேதி போன்ற நோய்கள் அதிகளவில் கண்டறியப்படும்பொழுது, சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் முகாம் நடத்தி, பொதுமக்களுக்குத் தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்... தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் தடுப்பு மருந்துகளை தேவையான அளவில் இருப்பில் வைக்க வேண்டும்...
அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கூறிய அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடித்திடவும், அவர்களது பணியில் ஏதேனும் குறைகள் கண்டறியப்படும்பொழுது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், அரசு அலுவலர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ஜே.சைலஸ் ஜெயமணி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் எஸ்.பூபதி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சு.கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.இந்து பாலா, ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். |