உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் - நகர மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகையின் மொத்த அளவு ரூ.40 லட்சத்தை எட்டுவதாக, இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில், அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ சார்பில் அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 09.11.2011 புதன்கிழமையன்று இரவு 07.00 மணிக்கு இக்ராஃ கூட்ட அரங்கில், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது. இக்ராஃ செயற்குழுவின் மூத்த உறுப்பினர்களான லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி ஜெஸ்மின் கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த இக்ராஃவின் செயற்குழு உறுப்பினர்களையும், சிறப்பு அழைப்பாளர்களாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினரையும் வரவேற்று உரையாற்றினார்.
கடந்த கூட்ட அறிக்கை:
பின்னர், கடந்த கூட்ட அறிக்கையை இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வாசித்து, அவை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து விளக்கினார்.
நடப்பாண்டு கல்வி உதவித்தொகை வினியோகம்:
அதனையடுத்து, நடப்பு 2001-2012 கல்வியாண்டிற்காக, கல்வி உதவித்தொகை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவை பரிசீலிக்கப்பட்ட விதம், விசாரணை முறைகள், நேர்காணல் நிகழ்வுகள், சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்களையும்,
ஜகாத் நிதி பெற்ற - வினியோகித்த விபரங்கள்:
இக்ராஃவுக்கு கிடைக்கப்பெற்ற ஜகாத் நிதி, அதனை வழங்கியோரின் பெயர் பட்டியல் மற்றும் அவரவர் வழங்கிய தொகை, ஜகாத் நிதியை உதவித்தொகையாகப் பெற விரும்பும் விண்ணப்பங்களைத் தேர்வு செய்யும் முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் விதம் குறித்தும் இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் விளக்கிப் பேசினார்.
ஜகாத் நிதிக்கான பயனாளிகள் பரிசீலனைக் குழு:
பின்னர், தற்போது பெறப்பட்டுள்ள இந்த ஜகாத் நிதி வழங்கப்படுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்வு செய்ய,
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல்,
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்
ஆகியோரை பரிசீலனைக்குழுவினராக இக்கூட்டம் தேர்ந்தெடுத்தது.
இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள்:
அதனைத் தொடர்ந்து, இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள், சேவைகள், நடவடிக்கைகள், வரவு-செலவு கணக்கு விபரங்கள், இதுவரை வழங்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை விபரங்கள் உள்ளிட்டவை குறித்து இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவர் வழங்கிய தகவல்களின் சுருக்கக் குறிப்புகள் பின்வருமாறு:-
கல்வி உதவித்தொகை குறித்த விபரப்பட்டியல்:
*** கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு (டிப்ளமோ), தொழிற்கல்வி (ஐ.டி.ஐ.) போன்ற படிப்புகளுக்காக இவ்வாண்டு 52 மாணவ-மாணவியருக்கு இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது...
*** இக்ராஃ துவங்கிய ஆண்டு முதல் நடப்பு கல்வியாண்டு வரை, கடந்த 6 ஆண்டுகளாக 320 மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது...
*** மேற்படி 320 மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகையின் மொத்த அளவு சுமார் ரூ.40 லட்சம் ஆகும்...
*** இவ்வருடம் கல்வி உதவித்தொகைக்காக அனுசரணை வழங்கிய புதிய அனுசரணையாளர்களின் பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது...
*** இக்ராஃ கல்விப் பணிகளைச் செய்வதோடு மட்டும் தன் சேவையை நிறுத்திக்கொள்ளாமல், அனைத்துலக காயல் நல மன்றங்கள் சார்பில் நகரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை அவர்களின் வேண்டுகோள் படி ஒருங்கிணைத்தல், அம்மன்றங்களின் இக்ராஃவுடன் அல்லாத இதர கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தல், மேற்படி மன்றங்களின் கல்வி - மருத்துவம் - சிறுதொழில்களுக்கு உதவி கோரும் விண்ணப்பங்களைப் பெற்று மன்றங்களுக்கு அனுப்பி வைத்தல், அத்தேவைகளுக்கான உதவித்தொகைகளை பயனாளிகளுக்கு வினியோகித்தல் உள்ளிட்ட பணிகளை இக்ராஃ செய்து வருகிறது...
*** கடந்த சில மாதங்களுக்கு முன், ரியாத் - தம்மாம் - ஜித்தா காயல் நற்பணி மன்றங்களின் சார்பாக இக்ராஃ, நகரில் முதன்முதலில் மேற்கொண்ட புற்றுநோய் பரவல் குறித்த தகவல் சேகரிப்பு (கேன்சர் சர்வே) நன்முறையில் முறையாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதையும், அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேல் நடவடிக்கைப் பணிகளுக்கும் இக்ராஃ ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினரும், கே.எம்.டி. மருத்துவமனை செயலருமான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள், சென்ற மாதம் Cancer Fact Finding Committee - CFFC ஒருங்கிணைப்பில், கே.எம்.டி. வளாகத்தில் நடத்தப்பட்ட புற்றுநோய் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் பத்மபூஷன் டாக்டர் ஷாந்தா அவர்கள் தனது உரையாடலின்போது, பெண் தன்னார்வலர்கள் 40 பேரைக் கொண்டு, பத்தே தினங்களில் நகர் முழுக்க வீடு வீடாகச் சென்று கேன்சர் சர்வே எடுத்து முடித்தது இக்ராஃவின் பெரிய சாதனை என்றும், இது தமக்கு பெரும் வியப்பை அளித்துள்ளதாகவும், இதற்காக இக்ராஃவைப் பாராட்டுவதாகவும், இந்த அரிய முயற்சி தொடர்பான மேல் நடவடிக்கைகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுப் பேசியதை சுட்டிக்காட்டி, இது இக்ராஃவின் தன்னலமற்ற பணிகளுக்குக் கிடைத்துள்ள - பெருமதிப்பட வேண்டிய நற்சான்று என்று குறிப்பிட்டார்.
இக்ராஃ நிர்வாகச் செலவினங்கள்:
தொடர்ந்து பேசிய இக்ராஃ நிர்வாகி, இக்ராஃவின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவினங்கள், இவ்வகைக்காக நிதியளித்துள்ள காயல் நல மன்றங்கள் மற்றும் தனி நபர்களின் பெயர் விபரங்கள், அவர்கள் வழங்கிய தொகை உள்ளிட்டவை குறித்து விவரமாக எடுத்துரைத்தார்.
இக்ராஃவுக்கு புதிய உறுப்பினர்களை சேகரித்துத் தருவதில் காயல் நல மன்றங்களின் பங்களிப்பு, அவ்வாறு சேகரிக்கப்பட்ட உறுப்பினர்களின் மன்ற வாரியான எண்ணிக்கை மற்றும் விபரங்களை அவர் விளக்கினார்.
உறுப்பினர்கள் விபரம்:
இக்ராஃவுக்கு உள்ளூர் மற்றும் சில காயல் நல மன்றங்கள் மூலம் இதுவரை 327 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், இதர காயல் நல மன்றங்கள் மூலமும் உறுப்பினர்களை புதிதாக சேர்த்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இக்ராஃவில் அவ்வப்போது இணையும் புதிய உறுப்பினர்கள் விபரம் மற்றும் அரசுப்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விபரங்கள் அவ்வப்போது சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப்பதிவு விதிகளின்படி அனைத்தும் முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் தெரிவித்தார்.
அடுத்த வருட கல்வி உதவித்தொகைக்கான அனுசரணை பெறல்:
இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அடுத்தடுத்த வருடங்களுக்கான அனுசரணையாளர்களைப் பெற்றிட இப்போதே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இப்பொறுப்பை அனைவரும் தம் பொறுப்பாகக் கருதி ஈடுபட்டு செய்து தர வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கை மன்ற செயலருக்கு பாராட்டு:
அப்போது கருத்து தெரிவித்த இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், அண்மையில் தாம் சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் சிங்கை காயல் நல மன்றத்தின் செயலாளரான சகோதரர் மொகுதூம் முஹம்மத், இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டிற்குத் தேவைப்படும் அனுசரணையாளர்களைப் பெற்றிட மேற்கொண்ட விடாமுயற்சிகள் மூலம், சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் நடப்பு கல்வியாண்டிற்கு மட்டும் 8 அனுசரணையாளர்களை பெற்றுத் தந்திருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக, சகோதரர் மொகுதூம் முஹம்மத் அவர்களுக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஜெஸ்மின் கலீல் அவர்களுக்கு பாராட்டு:
அடுத்து, இவ்வருடம் இக்ராஃவிற்கு அதிகளவில் ஜகாத் நிதி கிடைத்திட இக்ராஃ செயற்குழுவின் மூத்த உறுப்பினர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் குறித்து இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார். இதற்காக கூட்டத்தில் அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், இதுபோன்று அனைவரும் தன்னார்வத்துடன் செயல்பட்டால், இக்ராஃவின் கல்விச் சேவைகளுக்கு அது பக்கபலமாக இருக்கும் என்றும், அதனால் ஊரில் பெருமளவில் கல்வி முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சாதனை மாணவ-மாணவியருக்கான பரிசுகள் வரையறை:
அடுத்து பேசிய இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், ஆண்டுதோறும் இக்ராஃ மேடையில் பரிசளிப்பு விழாவின்போது சாதனை மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் பரிசுகள் பற்றி தெரிவித்து, ஒரே மாணவருக்கு ஒரே சாதனைக்காக பல மன்றங்கள் தனித்தனியே பரிசுகள் வழங்குவதால், பரிசுத்தொகையில் முறையான நிர்ணயம் இல்லாமல் போய்விடுவதாகவும், இவ்வாண்டு நடத்தப்பட்ட “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” நிகழ்ச்சியிலும் அதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்து, இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாதிருக்கும் பொருட்டு, மாணவ-மாணவியரின் சாதனை விபரப்பட்டியல், அவற்றுக்கான பரிசுத்தொகை பட்டியல் முன்வடிவம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அதனை வாசித்தார்.
பின்னர் இப்பட்டியலை, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பி வைத்து, அவர்களின் முறைப்படியான கருத்துக்கள் மற்றும் முடிவுகளை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாகக் கேட்டறிந்து, அதன் பின்னர், சாதனைகளுக்கான பரிசுப்பட்டியல் இறுதி வடிவம் செய்யப்பட்டு, நகரின் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அவை முறைப்படி இக்ராஃ மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சாதனை மாணவர்களுக்கான இப்பரிசுத்திட்டம் காயல்பட்டினம் நகரிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு மட்டுமா அல்லது வெளியூர்களில் பயிலும் காயல்பட்டினம் மாணவ-மாணவியருக்குமா என்று கூட்டத்தில் வினவப்பட்டது.
காயல்பட்டினம் நகரிலுள்ள பள்ளிக்கூடங்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், எனவே காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவ-மாணவியர், காயல்பட்டினத்திலுள்ள சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்று சாதனை புரியும் மாணவ-மாணவியருக்கு மட்டுமே இப்பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களின் ஆலோசனை / கருத்துக்கேட்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கள் பின்வருமாறு:-
கல்வி சிறப்பு நிகழ்ச்சிகள்:
கடந்த வருடங்களைப் போல இவ்வாண்டும் அரசுப் பொதுத் தேர்வை முன்னிட்டு 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு பயனளிக்கும் வகையில் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் கல்வி சிறப்பு ஒளிபரப்பை நடத்துவதென்றும். அதற்காக இவ்வாண்டு புதிதாக ஒளிப்பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
உதவித்தொகை பயனாளிகளின் நடப்பு நிலை ஆய்ந்தறிதல்:
இக்ராஃ மூலம் இதுவரை கல்வி உதவித்தொகை பெற்று படித்து முடித்துள்ள மாணவ-மாணவியரின் நடப்பு நிலை குறித்த தகவல்களை முறைப்படி சேகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
உதவித்தொகை பயனாளிகளிடம் கருத்துக் கேட்பு:
இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை பெறும் மாணவ-மாணவியருக்கு இறுதியாண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படும்போது, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் வகையில் படிவம் ஒன்றை அளித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்று அவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள தீர்மானிக்கப்பட்டது.
ரியாத் கா.ந.மன்றம் சார்பில் மடிக்கணினி அன்பளிப்பு:
இக்ராஃவின் பணிகள் விரிவடைந்து வரும் நிலையில், பணிப்பளுவைக் குறைத்திடும் வகையில் சேவையாற்ற முன்வந்திருக்கும் இக்ராஃவின் மக்கள் தொடர்பு அலுவலரின் (PRO) நிர்வாக வசதிக்காக இக்ராஃ அலுவலகத்திலுள்ள அவரது மேஜைக்கு ஒரு மடிக்கணினி தேவைப்படுவதாக இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார். அதனைக் கருத்திற்கொண்ட ரியாத் காயல் நற்பணி மன்ற செயலாளர், துணைச் செயலாளர், ஆலோசகர் ஆகியோர், அவ்விடத்திலேயே கலந்தாலோசித்த பின்னர், மக்கள் தேவைப்படும் மடிக்கணினியை தங்கள் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தனர். மகிழ்வூட்டும் இவ்வறிவிப்பிற்காக இக்கூட்டத்தில் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. (இக்ராஃவின் அலுவலக நிர்வாக மேஜை மற்றும் மின் வினியோகத் தடையின்போது தேவைப்படும் இன்வெர்ட்டர் கருவிக்கான பாதித்தொகை ஆகியவற்றையும் இவர்கள் ஏற்கனவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.)
மாணவர் திறன் வளர்த்தல்:
இக்காலகட்டத்தில் Communication Skill மிகவும் முக்கியமானது என்றும், தமது நிறுவனத்திற்காக காயல்பட்டினம் மாணவர்கள் பலரை நேர்காணல் செய்தபோது, அவர்களிடம் இத்திறன் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் பல நல்ல வேலைவாய்ப்புகளை அவர்கள் இழந்துள்ளதாகவும் இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் கவலை தெரிவித்தார்.
அதனை வழிமொழிந்து பேசிய தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் செய்யித் ஹஸன், இத்திட்டம் குறித்து ஏற்கனவே பேசப்பட்டு, இந்த தனி செயல்திட்டத்திற்காக என்றே தாம் சார்ந்துள்ள தம்மாம் காயல் நற்பணி மன்றம் உதவித்தொகை வழங்க ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக ஆகும் செலவு, செயல்படுத்தப்பட வேண்டிய முறைமைகள் குறித்து அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் கலந்து பேசிய பின்னர் இதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவின் சேவைகளை அச்சுப்பிரதிகளாக்கி வினியோகித்தல்:
இக்ராஃவின் கடந்த 6 ஆண்டு கால சேவைகள், அவற்றால் கண்ட பலன்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக ஆயத்தம் செய்து, அதனை வண்ணமிகு மடக்கோலையாக அழகுற அச்சடித்து, பின்னர் நன்கொடையாளர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் போன்றவர்களுக்கு அதை வினியோகித்து, இக்ராஃவை மேலும் வலுப்படுத்தவும், சீராக்கவும் தேவையான நிதியாதாரத்தைக் கோர முயற்சிகளை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்:
சென்ற செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இக்ராஃவில் இணைய விண்ணப்பித்தவர்களின் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவையனைத்தும் அங்கீகரிக்கப்பட்டது.
இவ்வாறு செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத்,
செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ்,
எம்.எச்.அப்துர்ரஹ்மான்,
ரியாத் காயல் நற்பணி மன்ற செயலாளர் ஏ.எச்.முஹம்மத் நூஹ்,
துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ்,
ஆலோசகர் ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர்,
ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் சர்ஜூன்,
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயலாளர் ஹாஜி சட்னி எஸ்.ஏ.செய்யித் மீரான்,
துணைப் பொருளாளர் ஷேக் அப்துல் காதிர்,
துணைச் செயலாளர் அரபி முஹம்மத் ஷுஅய்ப்,
உறுப்பினர் ஹாஜி காழீ முஹம்மத் நூஹ்,
யான்பு பிரதிநிதி ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய்,
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களான
ஹாஜி புகாரீ சுலைமான்,
ஹாஜி ஜே.செய்யித் ஹஸன்,
கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ்,
ஆலோசகர் சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா,
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஷாதுலீ ஃபாஸீ
இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ,
ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்து, ஆலோசனைகளையும் வழங்கியதோடு, தேவைப்பட்ட பல்வேறு விளக்கங்களையும் கேட்டுப் பெற்றனர்.
நிறைவாக, இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஷாதுலீ ஃபாஸீ துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் இரவு 10.10 மணியளவில் நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஹாஜி N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர் (PRO),
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.
செய்தி சிறு திருத்தம் செய்யப்பட்டது. (19.11.2011 - 17:46hrs) |