நாடு முழுவதும் தற்போது தேசிய நூலக வாரம் (National Library Week) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காயல்பட்டின நகர்மன்ற தலைவர் பி.எம்.ஐ. ஆபிதா B.Sc., B.Ed. இன்று காயல்பட்டினத்தில் அமைந்துள்ள அரசு நூலகம் சென்று, நூலகர் ஆ. முஜீபுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நூலக வாசகர்களுக்கு இனிப்புகள் வழங்கிய நகர்மன்ற தலைவர், நூலக வாசகர் வட்டம் - காயல்பட்டின கிளையின் புரவலராகவும் அவ்வேளையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இவ்வருகையின் போது காயல்பட்டின நகர்மன்றத்தின் வார்ட் 13 உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீன் உடன் இருந்தார்.
நகர்மன்ற தலைவர் ஆபிதாவின் தந்தை பாளையம் இப்ராஹீம் - காயல்பட்டின கிளை நூலக வாசகர் வட்டத்தின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
1968 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக அகில இந்திய நூலகங்கள் மாநாடு (All India Libraries Conference) நடைபெற்றது. அவ்வாண்டு முதல் - ஒவ்வொரு வருடமும் - நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரையிலான வாரம் - நாடு முழுவதும் தேசிய நூலக வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
|