நகர்மன்றத்தின் வரவு - செலவு, அன்றாட நடவடிக்கைகள் என அனைத்து அம்சங்கள் குறித்தும் நகரின் அனைத்து ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் முழுமையாக அறிந்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, 10.11.2011 அன்று ‘மெகா‘ நடத்திய கூட்டத்தில், அதன் உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாமித் ரிஃபாய் உரையாற்றுகையில் கேட்டுக்கொண்டார்.
துவக்கமாக, ‘மெகா‘வின் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் உரையாற்றினார்.
அண்மையில் ‘மெகா‘வினரை அழைத்துப் பேசிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்கள், ஐக்கியப் பேரவையின் நடவடிக்கைகளிலுள்ள குறைகள் களையப்பட வேண்டுமென்றும், அதன் நிர்வாகத்தை மறுசீரமைக்கலாம் என்றும் விரும்புவதாக தெரிவித்ததாகக் கூறினார்.
பின்னர், பேரவையின் இன்றிருக்கும் நிர்வாகம் அதற்குத் தொடர்பில்லாத சிலரால் இயக்கப்படுவதாகவும், அது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
காயல்பட்டினத்திற்கு புதிய பெயர் எதுவும் தேவையில்லை என்றும், “அது கலைஞர் பட்டினமுமல்ல! அம்மா பட்டினமுமல்ல! என்றும் காயல்பட்டினம்தான்” என்றும் அவர் தனதுரையில் கூறினார்.
செல்வந்தர்களின் செல்வங்கள் இந்நகர் நலனுக்கு நிச்சயம் தேவை என்றும், சமூக அக்கறை இல்லாதவர்களை கண்ணியமிக்க செல்வந்தர்கள் தம்முடன் வைத்திருப்பதைத் தவிர்த்தால்தான் அவர்களது சிந்தனை நகர்நலன் மீது விழும் என்று தெரிவித்த அவர், தரம் தாழ்ந்த பொழுதுபோக்குகளில் செல்வந்தர்கள் ஒருபோதும் ஈடுபடாமல் கண்ணியம் காக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அடுத்து ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் உரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் பணிகள், அன்றாட நடவடிக்கைகள், வரவு-செலவு குறித்த விபரங்கள், நடைபெறுவதாக அறியப்படும் முறைகேடுகள், அனைவரின் கடமைகள் என பல அம்சங்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
அவரது உரை பின்வருமாறு:-
நகராட்சியின் முக்கிய பணிகள்:
ஓர் உள்ளாட்சியின் அன்றாட முக்கியப் பணிகள் குப்பைகளை அகற்றல், சாலை பராமரிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் வினியோகம் இவையே! அந்த அடிப்படையில் நமது காயல்பட்டினம் நகராட்சியின் பிரதான பணிகளாக இவை அமைந்திருக்கிறது.
குப்பை சேகரிப்பு:
துவக்கமாக குப்பை அகற்றும் பணி குறித்து பார்வையிடுவோம்...
காயல்பட்டினம் நகரிலிருந்து தினமும் 8 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று தவணைகளில் லாரிகள் மூலம் அள்ளிச் செல்லப்பட்டு, பல்வேறு போராட்டங்களுக்கிடையில் எல்.எஃப். வீதியிலுள்ள ஒரு தனியார் இடத்தில் கொட்டப்படுகிறது.
நகராட்சியால் சேகரிக்கப்படும் இக்குப்பைகளைக் கொட்டுவதற்காக துவக்கத்தில், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் கடையக்குடியிலுள்ள தனக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்திருந்தார். எனினும், அவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டும் விஷயத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளது. உடனடியாக இந்த சட்ட சிக்கல் சரிசெய்யப்பட்டு, அவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்பட புதிய நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், சேகரித்து கொட்டப்படும் இக்குப்பைகளை மறுசுழற்சி செய்து, அவற்றை இயற்கை உரமாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
குப்பை சேகரிப்பதற்கென நமது நகராட்சிக்குச் சொந்தமாக 3 லாரிகள் உள்ளன. அவற்றில் இரண்டுதான் தற்பொழுது இயக்கத்தில் உள்ளது. FCக்கு விடப்பட்ட எஞ்சிய ஒரு லாரி, அதற்கான பணம் செலுத்தப்படாத நிலையில், கடந்த 4 அல்லது 5 மாதங்களுக்கும் மேலாக இன்னும் இயக்கத்திற்கு வராமலேயே உள்ளது.
நமதூர் மக்கள் தொகை அடிப்படையில் 45 துப்புரவுப் பணியாளர்கள் தேவை. ஆனால் 32 பணியிடங்களுக்கு மட்டுமே பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 27 பேர் மட்டுமே இயக்கத்தில் உள்ளனர். இவர்களும் துப்புரவுப் பணியல்லாத வேறு பணிகளுக்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் செய்யப்பட வேண்டிய துப்புரவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலை பராமரிப்பு:
நமதூர் முழுவதும் 32 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளன. அவை தார் சாலை, சிமெண்ட் சாலை, செம்மண் சாலை என பலவகை சாலைகளாக உள்ளன.
தற்போது நகரெங்கும் பெரும்பாலும் சிமெண்ட் சாலைகள் போடப்படுகின்றன. அவசர கோலத்தில் போடப்படும் இச்சாலைகள் பொதுமக்கள் பலரது இன்னல்களுக்கு பெருங்காரணமாக உள்ளன.
ஒரு சாலையில் ஆயுட்காலம் என்பது 5 வருடங்கள் கொண்டது. ஆனால் அதன் ஆயுட்காலம் முடிவதற்குள்ளாகவே அடுத்தடுத்து அதே இடத்தில் தேவையின்றி புதிய சாலைகளைப் போட்டு, அதன் மூலம் நமது வரிப்பணமாகிய நகராட்சி பொது நிதி வீணடிக்கப்படுகிறது.
இனி வருங்காலங்களில், அந்தந்த பகுதி மக்களின் தேவைகளை அதிகாரப்பூர்வமாக கேட்டறிந்த அவர்கள் விருப்பத்தின்படி தார் சாலைகளைப் போடுவதை இப்புதிய நகராட்சி தனது கடமையாக்கிக் கொள்ள வேண்டும். தேவையில்லாத இடங்களில் வீணாக புதிய சாலைகள் போடுவதை நிறுத்த வேண்டும்.
தெரு விளக்குகள் பராமரிப்பு:
நமதூரிலுள்ள அனைத்து தெருக்களிலுமுள்ள மின் கம்பங்களில், சோடியம் விளக்குகள், குழல் விளக்குகள் என பல வகைகளில் மொத்தமாக சுமார் 1,200 தெரு விளக்குகள் உள்ளன. இவ்விளக்குகளை எரியச் செய்வதற்காக நகராட்சியின் சார்பில் மின் வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 85,000 ரூபாய் கட்டணம் செலுத்தப்படுகிறது.
இவ்விளக்குகளில் பல விளக்குகள் பல நாட்களாகவும், சில விளக்குகள் பல மாதங்களாகவும் எரியாமலேயே உள்ளன. இதனால் அப்பகுதிகள் இருளடைந்து, அதன்மூலம் பாதசாரிகளுக்கு பிரச்சினையாகவும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றன.
ஒவ்வொரு விளக்கிற்கும், அவற்றின் உதிரி பாகங்களுக்கும் ஆறு மாதம், ஒரு வருடம் என ஆயுட்காலம் உள்ளது. அந்த ஆயுட்காலம் முடிவதற்குள் அவை பழுதாகி விடுகின்றபோதிலும், மேற்படி ஆயுட்காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அப்பொருளை பழுது நீக்கிப் பெறவோ அல்லது மாற்றுப் பொருள் பெறவோ நகராட்சி எந்த முயற்சியும் இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இவை ஒருபுறமிருக்க, பழுதான ஒரு தெரு விளக்கை சரிசெய்யும் பொருட்டு, மின் கம்பத்தில் ஏறிப் பார்ப்பதற்கென விளக்கொன்றுக்கு ரூ.2 வீதம் நகராட்சியிலிருந்து மின் வாரிய அலுவலகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால், இச்சிறிய கட்டணம் கூட நீண்ட காலமாக சரிவர செலுத்தப்படாத நிலையில், இது ஒன்றுக்காகவே பல ஆயிரக்கணக்கான ரூபாய் தொகை பாக்கி உள்ளது. அதன் காரணமாக, பழுதான மின் விளக்குகள் சரிவர மின் வாரியத்தால் பராமரிக்கப்படுவதில்லை. இக்குறையை போர்க்கால அடிப்படையில் இப்புதிய நகராட்சி சரி செய்ய வேண்டும்.
குடிநீர் வினியோகம்:
நமதூரில் அதிகாரப்பூர்வமாக சுமார் 8,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன.
அதைத் தாண்டி, சட்டத்திற்குப் புறம்பாக 1,000க்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் திருட்டுத்தனமாக கொடுக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்த இணைப்புகளுக்காக குடிநீர் கட்டணம் பெறப்படாததால், நம் நகராட்சிக்கு மிகப்பெரிய அளவில் வருமான இழப்பு உள்ளது.
ஓர் இணைப்புக்கு மாதம் ரூ.50 குடிநீர் கட்டணமாகும். ஆனால், இந்த சிறு தொகையைக் கூட பலர் கட்டாமல், அதுவே சுமார் 50 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வர வேண்டிய வருமானம் நிலுவையிலுள்ளது.
தற்போது, ஆத்தூரிலிருந்து தினமும் 23 லட்சம் லிட்டர் தண்ணீரை 17 மணி நேரம் பம்ப் செய்து நமதூரிலுள்ள 14 நீர்த்தேக்கத் தொட்டிகளில் அவற்றை சேகரித்து, குடிநீர் வினியோகம் செய்யப்படும் வழமை உள்ளது. இந்த பம்பிங் வகைக்காக மட்டும் ஆத்தூருக்கு சுமார் ரூ.52 லட்சத்திற்கும் அதிகமான தொகை செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ளது. இதை உடனடியாக செலுத்தினாலே, நமதூருக்குத் தேவையான தண்ணீர் ஓரளவுக்கு சீராக கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போது ஆத்தூரிலிருந்து பெறப்படும் தண்ணீரையே Over flow ஆக்காமல், வீண் விரயம் செய்யாமல் அந்தந்த நேரங்களில் முறையாகப் பார்வையிட்டு சேகரித்து வைத்தாலே ஒருநாள் விட்டு ஒருநாள் தட்டுப்பாடின்றி நகர் முழுக்க தண்ணீர் வினியோகம் செய்ய இயலும் என ஆத்தூர் நீரேற்றும் நிலையத்திலுள்ள மேலதிகாரிகள் நம் நகர்மன்றத் தலைவரிடம் நேரில் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது பைப் லைன் திட்டம்:
காயல்பட்டினத்தின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்காக பொன்னன்குறிச்சியிலிருந்து தனிக்குழாய் மூலம் நீர் பெற்று நிறைவேற்றப்படவுள்ள புதிய திட்டம்தான் இரண்டாவது பைப் லைன் திட்டம்.
இதற்கு ரூ.30 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில்
மத்திய அரசு 80 சதவிகித தொகையை - அதாவது சுமார் ரூ.24 கோடியை மானியமாகத் தருகிறது.
மாநில அரசு 10 சதவிகித தொகையை - அதாவது சுமார் ரூ.3 கோடியை மானியமாகத் தருகிறது.
எஞ்சிய 10 சதவிகித தொகையை - அதாவது சுமார் ரூ.3 கோடியை நம் நகராட்சி செலுத்த வேண்டும். இத்திட்டத்திற்குத் தேவைப்படும் தொகையில் ரூ.50 லட்சத்தை, நமது நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்கள் நன்கொடையாகத் தரவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். இதற்காக அவர்களுக்கு இக்கூட்டத்தின் மூலம் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, நமதூரிலுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை முழுமையாகப் போக்கிட ஆவன செய்யுமாறு புதிய நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட அங்கத்தினரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
சுத்தமான குடிநீர்...
நமதூரில் குடிநீருக்காக வினியோகிக்கப்படும் குடிநீர் சுத்தமானதுதானா என்பதையும் நாம் முக்கியமாக கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
நமதூரிலுள்ள குடிநீர் தேக்கத் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை நன்கு சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு முறையாக சுத்தப்ப்டுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
இனியாவது, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், ஜமாஅத்துகள், அந்தந்த வார்டு உறுப்பினர்கள், தமது பகுதியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் உரிய காலத்தில் சுத்தம் செய்யப்படுவதைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும். வினியோகத்தின் மூலம் பெறப்படும் அந்த நீரையும் அவ்வப்போது பரிசோதனை செய்து அதன் தன்மைகளை அறிய வேண்டும்.
இந்த ஒன்றை முறைப்படி செய்துவிட்டாலே நகரில் உள்ள பாதி நோய்கள் குணமாகும் என்பதை மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியும்.
வரவு-செலவு:
(அ) வரவு (ஆண்டு ஒன்றுக்கு)
குடிநீர் கட்டணம் மூலம் - சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல்...
சொத்து வரி மூலம் - சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல்...
வீடுகட்ட வரைபட ஒப்புதல் மூலம் - சுமார் ரூ.20 லட்சத்திற்கும் மேல்...
லைசென்ஸ் உள்ளிட்ட உரிமக் கட்டணங்கள் மூலம் - சுமார் ரூ.50 ஆயிரம்...
நகராட்சி நிர்வாகத்திற்காக மாநில அரசு தரும் தொகை - சுமார் 2¼ கோடி...
ஆக, நகராட்சியின் மொத்த வருமானம் - ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.3.60 கோடிக்கும் மேல்...
இவை போக, ஆடறுப்பு டெப்போ, சைக்கிள் ஸ்டாண்ட், கடை வாடகை, கிணறு உள்ளிட்டவற்றிலிருந்து கிடைக்கும் இதர வருமானங்கள் தனி.
(ஆ) செலவு (ஆண்டு ஒன்றுக்கு)
அலுவலர் சம்பளம் - சுமார் ரூ.36 லட்சம்...
மின் கட்டணம் - சுமார் ரூ.10 லட்சம்...
குடிநீர் வினியோகத்திற்காக - சுமார் ரூ.48 லட்சம்...
இதர செலவுகள் - சுமார் ரூ.15 லட்சம்...
ஆக மொத்தம் - சுமார் ரூ.1.10 கோடி தொகை ஓராண்டு செலவாகும்.
நகராட்சியால் பெறப்படும் ஆண்டு வருமானத்திலிருந்து, ஆண்டு செலவினங்களைக் கழித்து, ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.2.50 கோடி கையிருப்பு உள்ளது. இத்தொகைதான் நமது நகராட்சியின் பொது நிதியாகும்.
திட்டங்களை நன்கு ஆய்ந்தறிந்து, முறைப்படி இப்பணத்தை செலவு செய்தாலே எவ்வளவோ நல்ல திட்டங்களை நம் நகருக்கு நிறைவேற்றலாம். ஆனால், இதுவரை இத்தொகை பெரும்பாலும் திரும்பத் திரும்ப புதிய சாலைகள் போடுவதற்கே செலவிடப்படுவது வேதனைக்குரிய உண்மையாகும்.
இனியாவது, நகர பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து, அவர்களின் தேவைகளை நல்ல முறையில் பூர்த்தி செய்திட இத்தொகையை செலவழிக்க இப்புதிய நகர்மன்றம் உறுதியெடுக்க வேண்டும்.
முறைகேடுகளைத் தடுப்பதெப்படி?
நல்ல வருமானம் இருந்தும், நம் நகர்மன்றத்தில் பலவேறு குறைபாடுகளும், முறைகேடுகளும் நிரந்தரமாகவே உள்ளதை அறிய முடிகிறது. அவற்றுக்கு மிக முக்கிய காரணங்கள:-
நேர்மையின்மை...
மக்கள் கருத்துக்களை மதியாமை...
தொலைநோக்குச் சிந்தனையின்மை...
வெளிப்படையான நிர்வாகமின்மை...
நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை...
முறைகேடுகளுக்கு சில உதாரணங்கள்: அநியாயமாக குடியேற்றப்படும் மக்களுக்கு சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் புதிய வீடுகள் நமதூரில் அரசாங்கத்தால் கட்டிக்கொடுக்கப்படுவதைக் கண்டித்து, நமதூரில் கடந்த ஜனவரி மாதம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நகரளவில் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் முயற்சியில் நடத்தப்பட்ட இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், நகரின் அனைத்து வணிகர்களும் தமது கடைகளை அடைத்துவிட்டு வந்து கலந்துகொண்டனர்... பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்காக நமது நேரம், பொருள், சக்தி என பலவும் செலவழிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு உணர்வுப்பூர்வமாக நாம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம். ஆனால் வேடிக்கை என்ன தெரியுமா...?
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அன்றைய நமது நகராட்சி மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 198ஆம் எண் கொண்ட தீர்மானத்தில், மேற்படி சுனாமி குடியிருப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி நடந்தது? நமக்கெல்லாம் ஆச்சரியமாக இல்லையா?
அடுத்த சான்று: ரோசா ஆண்கள் சுய உதவிக்குழு என்ற பெயரில், 14 பேர் குளச்சல் ஒரே ஊரிலிருந்து, தனி நபர் ஆதிக்கத்தின் அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டு, மாதம் ரூ.56,000 வீதம் ஆண்டுக்கு சுமார் ரூ.6.50 லட்சம் என சுமார் 4 வருடங்களாக நமது வரிப்பணத்திலிருந்து வழங்கப்பட்டு வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்...?
ஒவ்வொரு முறையும் நமது நகர்மன்றக் கணக்குகள் தணிக்கை (ஆடிட்டிங்) செய்யப்பட்டு பெறப்படும்போது, அதில் இவ்வாறு மக்கள் பணத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது என்றே தணிக்கை செய்த அதிகாரிகளால் எழுதி பெறப்பட்டிருந்தும் மீண்டும் மீண்டும் நமது பணத்தில் சம்பளம் வழங்கப்படுவது எப்படி...? இதை யார் கேட்பது...?? நமக்கு உரிமையில்லையா...???
இன்னும் வேடிக்கை என்னவென்றால், இந்த 14 பேரில் இரண்டு அல்லது மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் பணிக்கே வருவதில்லை என்ற உண்மை யாருக்காவது தெரியுமா...? பணிக்கு வராமலேயே சம்பளத்தை மொத்தமாகப் பெறுவது இங்குதான் நடைபெறுகிறது என்று சொல்லலாம்.
இதற்கு மேலும் வேடிக்கை என்ன தெரியுமா? நமது வரிப்பணத்தில் இப்படி சம்பளம் பெறும் ஒருவர் நகராட்சியில் சரியாகப் பணி செய்யவில்லை என்பது மட்டுமின்றி, நமதூரிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் தினமும் காலையிலும், மாலையிலும் வேன் ஓட்டி அங்கும் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்... இது எப்படி...???
இவ்வாறு பணியமர்த்தப்பட்ட இவர்கள் முறைப்படி வேலைவாப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டார்களா என்றால் இல்லை...
சரி அது போகட்டும்! அரசின் நேரடி நியமனப்படியாவது நியமிக்கப்பட்டார்களா என்றால் அதுவுமில்லை...
அப்படியென்றால் இவர்கள் நியமிக்கப்பட்டது எப்படி...? எப்படி தெரியுமா...?? தனியொரு நகர்மன்ற உறுப்பினரின் ஆதிக்கத்தில், ஒரேயொரு தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இத்தனை பெரிய அவலம் நமது நகர்மன்றத்தில் இன்றளவும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதே...? இதை யார் கேட்பது...? நமக்கு உரிமையில்லையா...???
கண்ணியமிக்க காயல்வாசிகளே... நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள்... அடுத்து நான் சொல்லப்போகும் சான்று மிக முக்கியமானது...
நமது நகராட்சியால் பெறப்படும் குடிநீர் கட்டணம், வீடு வரைபட கட்டணம், வீட்டுத் தீர்வை என அன்றாடம் பெறப்படும் தொகை சுமார் ரூ.80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை... இத்தொகையை அன்றன்றைக்கே வங்கியில் செலுத்திவிட வேண்டும்.
ஆனால், இத்தொகை ஒருநாள் தாமதிக்கப்பட்டு, சிட்டை வட்டிக்கு விடப்பட்டு, மறுநாள் பெறப்படும் தொகையை முதல் நாள் கணக்கு அளவுக்கு வங்கியில் செலுத்தி வரும் நடவடிக்கை பல காலமாக நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. ஒருவேளை முதல் செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருந்து, இன்றைய வருமானம் குறைவாக உள்ளது என்றால், அந்நேரத்தில் மட்டும் தம் கைக்காசைப் போட்டு அப்பணத்தை வங்கியில் செலுத்துவதாக அறிய முடிகிறது. அரசு விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்கள் என்றால் இதே தொகை ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களுக்கு வட்டிக்கு விடப்படுவதையும் அறிய முடிகிறது.
நமது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது, அனுமதிக்கப்படாத என்று ஹராம் - ஹலால் பார்த்து, அவ்வப்போது நாம் செலுத்தும் பணம், இங்கு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது பார்த்தீர்களா...?
தகவல் அறியும் உரிமை சட்டம்:
தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது, அரசின் அந்தந்த துறைகளில் தேவையான விளக்கங்களைக் கேட்டு நாம் அனுப்பும் கடிதம்.
இச்சட்டத்தின் மூலம், நம் நாட்டின் இராணுவ இரகசியங்கள் தவிர இதர அனைத்தையும் கேட்டறிந்துகொள்ள நமது அரசு நமக்கு முழு உரிமை வழங்கியுள்ளது.
நமக்குத் தேவையான விளக்கத்தை இச்சட்டத்தின் கீழ் அந்தந்த அரசு அலுவலகங்களில் கேட்க முடியும். நாம் கேட்பவற்றுக்கு 30 நாட்களுக்குள் பதில் கடிதம் மூலம் விளக்கமளிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். அவ்வாறு குறித்த காலத்திற்குள் விளக்கமளிக்கத் தவறினால் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
இவ்வளவு சக்தி வாய்ந்த சட்டத்தைக் கொண்டு நமது நகராட்சியில் நடைபெறுவதாக நாம் சந்தேகிக்கும் எந்த ஒன்று குறித்தும் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இதை நமது பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
நாம் செய்ய வேண்டியதென்ன?
அன்பான பொதுமக்களே, தாய்மார்களே...
நகராட்சிக்கு நாம் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறித்த காலத்தில் செலுத்த பழகிக்கொள்ள வேண்டும்...
புது வீடுகள் கட்டப்படும்போது, அவற்றை முறைப்படி அதிகாரிகளை அளக்கச் செய்து, அவற்றுக்கான சரியான வீட்டுத் தீர்வைகளைக் கட்ட வேண்டும்... முறைகேடாக தீர்வையைக் குறைத்துக் கட்டுவதால் நமக்கு சில நூறு ரூபாய்கள் மிச்சப்படலாம். ஆனால் அது நம் மார்க்கப்படியும் கூடாது என்பது மட்டுமின்றி, அதுவே நமது உரிமைகளைக் கேட்டுப் பெற தடைக்கல்லாக அமைந்துவிடும்.
லஞ்சம் வாங்குவது மட்டும் தவறல்ல... லஞ்சம் கொடுப்பது அதை விட கொடுமையான தவறு! எனவே, எந்தத் தேவைக்காகவும் யாருக்கும் ஒரு பைசாவும் லஞ்சமாகக் கொடுக்காதீர்கள்!
இவை நாம் நமக்குள் செய்துகொள்ள வேண்டிய சுயதிருத்தங்கள்.
அடுத்து, நமது நகராட்சியின் அனைத்து கூட்டங்களிலும் நம்மில் விவரமறிந்தவர்கள் அவசியம் தவறாமல் கலந்துகொண்டு அங்கு பேசப்படுபவை, தீர்மானிக்கப்படுபவை குறித்து கவனமெடுக்க வேண்டும். கூட்டத்தில் கருத்து சொல்ல நமக்கு உரிமை இல்லையே தவிர, பார்வையாளராக கூட்டத்தை அவதானிக்க நமக்கு எந்தத் தடையுமில்லை.
மேற்படி நகர்மன்றக் கூட்டத்தின் தீர்மான முன்வடிவுகளை முறைப்படி அறிந்துகொண்டு, அதிலுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து நமக்குள் கலந்தாலோசித்து முடிவெடுத்து, அம்முடிவுகளை நமது நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றச் செய்ய வேண்டும்.
இது விஷயத்தில் நம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல சங்கங்கள், தனி நபர்கள் என அனைவரும் அக்கறை எடுத்து செயல்பட வேண்டியது நமது தார்மீக கடமையாகும்.
இறுதியாக, எனது வேண்டுகோளை புதுக்கவிதை வடிவில் முன்வைத்து விடைபெறுகிறேன்...
நகர்மன்றத் தலைவி அவர்களே...!
காலத்தால் சிறந்த அவசிய மாற்றம்...
காயல் மக்கள் தந்த ‘மெகா‘ மாற்றம்...
இது அல்லாஹ் விரும்பிய அழகிய மாற்றம்...
வெற்றி என்பது வெறும் எண்ணிக்கைகளால் மட்டுமானதல்ல!
கொள்கைகளால்... செயல்திட்டங்களால்... எதிர்பார்ப்புகளால்...
என்ற நம்பிக்கைகளால் ஆனது!!
திட்டமிடுங்கள்!
திடமாய் நில்லுங்கள்!!
இலவசமாய்ப் பெற வேண்டியதை
போராடியாவது பெற்றிடுங்கள்!!!
ஊருக்கு வரவேண்டிய திட்டங்களை
ஊருக்கே கிடைக்க உதவுங்கள்!
பெற்றவர்களுக்கு பிள்ளை அமானிதம்...
செல்வந்தர்களுக்கு செல்வம் அமானிதம்...
உங்களுக்கு இந்த ஊரே அமானிதம்...
மாதம் ஒருமுறை மக்களை சந்தியுங்கள்!
குறை கேட்க ஒருநாள் ஒதுக்குங்கள்!!
குறை தீர்க்க சில நாள் ஒதுக்குங்கள்!!!
உங்கள் உள்ளத்தையும்
உள்ளங்கைகளையும்
சுத்தமாய் வையுங்கள்!
அல்லாஹ் எங்கள் அனைவரையும்
உங்கள் பக்கமாய் வைப்பான்!!
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை
ஒவ்வொரு விதமாய்
பாடம் சொல்லிக்கொண்டேதானிருக்கிறது...
உணர்ந்தவர்கள் உத்தமர்களாகின்றனர்...
உணர மறுத்தவர்கள் உதாசினமடைகின்றனர்...
செல்வந்தர்களே...!
நீங்கள் எதையெல்லாம் விலைக்கு வாங்குவீர்கள்...?
காற்றை...
தண்ணீரை...
ஆகாயத்தை...
இன்னும் பூமியை...
ஆனால்...
நீங்கள் விலை நிர்ணயிக்க முடியாத
நிதர்சனங்கள் நிறைய உண்டு...
வெறும் ‘காயல்‘ என்னும் அடைமொழிகளை
அடைய முடிந்த உங்களால்
காயல் மக்களின் மனங்களை
அடைய முடிவதெப்போது...?
நமது முன்னோர்களை
நாம் இன்றும் முன்னிறுத்துவது
அவர்களின் செல்வங்களுக்காக அல்ல!
சேவைகளுக்காக மட்டுமே!!
கனிவோடு கேட்கிறோம்...
இந்த ஊருக்கு
நீங்கள் தேவை...
இந்த ஊர் முன்னேற்றத்திற்கு
உங்கள் செல்வம் தேவை...
இந்த ஊர் மேன்மைக்கு
உங்கள் சேவை தேவை...
இது புரிந்தால் புண்ணியம்!
புரியாவிட்டால்....???
மேன்மை பொருந்திய எங்கள் காயலுக்கு
இன்னொரு பெயர் தேவையில்லை...
காயல்பட்டினம்
என்றும் காயல்பட்டினமே!
என்றும் நீங்கள் காயலின் சொந்தங்கள் என்பதை
காலம் உங்கள் காதுகளில் சொல்லிக்கொண்டே இருக்கும்!
நமதூருக்கு செய்ய வேண்டிய
நல்ல பணிகள் பல நமக்குண்டு...
தோள் கொடுங்கள் தோழர்களே...!
நகர்மன்ற அங்கத்தினரே...!
நகரின் தலைமை என்ற கிரீடத்தில்
பதினெட்டு வைரங்கள்...
சேர்ந்து ஜொலிக்கட்டும்!
இனி எங்கள் ஊர்
என்றென்றும் ஜெயிக்கட்டும்!!
காஹிர் ஃபதன் என்னும் காயல்பட்டினம்
கல்வியால் சிறந்தது...
அறிஞர்களால் சிறந்தது...
ஒழுக்கத்தால் சிறந்தது...
ஆன்மிகத்தால் சிறந்தது...
ஆனால்.....
அரசியல்வாதிகளால்.....?????
இவ்வாறு, ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பினை காண இங்கு அழுத்தவும் |