காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பாக “உயிர் காப்போம்!” சேவை நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவியரை ஒருங்கிணைத்து, அவர்களிடையே சுயநலம் போக்கி பிறர் நலம் காத்திடும் மனித நேயத்தை வலியுறுத்தும் நோக்கோடும், எதிர்கால இளைய தலைமுறை - மக்கள் சேவையே இறைவனுக்கு செய்யும் சிறந்த பணி என்பதை உணர்ந்து செயல்படவும், வழிகேட்டுப் பாதைக்கு மாணவ-மாணவியர் சென்றிடாவண்ணம் பொதுநலன் குறித்த பணிகளில் அக்கறையை ஏற்படுத்தும் நோக்கோடும், 5 ரூபாய் நன்கொடை செலுத்தி, “உயிர் காப்போம்” அட்டையில் அத்தொகையை வசூலிக்கச் செய்து, அதன் மூலம் பெறப்படும் தொகையைக் கொண்டு உயிர்காக்கும் சேவையை நிறைவேற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என நகர அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள செய்யித் ஆலிம் கட்டிடத்தில், 09.11.2011 அன்று மாலை 05.30 மணிக்கு நடைபெற்றது.
அரிமா சங்க நிர்வாகிகளான ஹாஜி ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஜுவெல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான், ஹாஜி துளிர் ஷேக்னாலெப்பை, வி.எம்.எஸ்.எம்.அமீன், ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் ஆகியோர் இத்திட்டத்தில் பள்ளிகளை இணைத்தனர்.
இதில், எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் டி.ஏ.எஸ்.உவைஸ், திருச்சி மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.எச்.முஹம்மத் அஃப்ஸல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். |