நடைபெற்று முடிந்துள்ள நகர்மன்றத் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆபிதா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, இன்று நகரின் அனைத்து தெருக்களிலும் ஊர்வலமாகச் சென்றார்.
இன்று காலை 09.00 மணியிலிருந்து மதியம் 02.30 மணி வரை காயல்பட்டினம் அகநகர் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் நகர்வலமாகச் சென்று நன்றி தெரிவித்தார்.
காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெரு வழியாக இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) அருகில் வந்தபோது, அதன் நிர்வாகிகள் வரவேற்றதன் பேரில் முன்னணி அலுவலகத்திற்குள் சென்று, அதன் மக்கள் சேவைகளை வாழ்த்தி, அங்குள்ள விருந்தினர் குறிப்பேட்டில் வாசகங்களை எழுதி கையெழுத்திட்டார்.
பின்னர் அவ்வாசகங்களை, கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் அனைவரும் அறிய வாசித்தார்.
பின்னர், நகர்மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய பகுதிசார் கோரிக்கைகளை இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், நகர்மன்றத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் நடைபெற்ற சிறு நிகழ்ச்சியில், குருவித்துறைப் பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் அவருக்கு சால்வை அளித்து வாழ்த்தினார்.
பின்னர், நகர்மன்ற புதிய தலைவரை வரவேற்று கம்பல்பக்ஷ் மொகுதூம் முஹம்மத் உரையாற்றினார்.
அதனையடுத்து சுருக்கவுரையாற்றிய நகர்மன்றத் தலைவர் ஆபிதா, இளைஞர் ஐக்கிய முன்னணியின் மக்கள் நலச் சேவைகளில், ஒரு நகர்மன்றத் தலைவராக தான் துணை நிற்பதாகவும், நகர்நலன் குறித்த நகராட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னணி அங்கத்தினர் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தனது தேர்தல் முழக்கமான “பசுமை காயல்” திட்டத்தை, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் பல்லாண்டுகளாக தன்னால் இயன்ற மட்டிலும் செயல்படுத்தி வருவதைக் கேள்வியுற்று தான் மிக்க மகிழ்ச்சியடைவதாகவும், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்ட இப்பகுதி மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஹாஜி நஹ்வீ அஹ்மத் முஹ்யித்தீன், மேனேஜர் முஸ்தஃபா, தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி புகாரி சுலைமான், ஹாஜி ஹினாயா உமர், ஹாஜி ஏ.எல்.நூருல் அமீன் மற்றும் பலர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்.
செய்தியில் சில தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. (14.11.2011 - 08:10hrs) |